26/6/09

இருண்டகாலத் திரை கிழித்துத் தலைநிமிரும் களப்பிறர் வரலாறு! – செல்வமணியன்


1.எழுத்தில் நெளியும் வக்கிர வன்மம்
”ஏடறிந்த வரலாறெல்லாம் வகுப்புப் போராட்டத்தின் வரலாறே” என்கிறது மார்க்சியம். இது அந்த ஏடறிந்த வரலாற்றின் இண்டு இடுக்குகளில் சிக்கிச் சிதைந்து சினந்து நிற்கும் முரண்பாடுகளை எல்லாம் முச்சந்திக்கு இழுத்து வந்து தீர்வு காண்பதன் மூலம் முன்னேறுவதே வரலாற்றுப் புரட்சிகள் என்கிறது.
ஆக, புரட்சிக்கு வரலாற்றின் பார்வை மிகவும் இன்றியமையாததாகும். முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதோ புரட்சியை முன்னேற்றுவதற்குரிய வழிமுறையாகும்.

மார்க்சியம் கண்டறிந்து இண்டு இடுக்குகளிலிருந்து வெளியே இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்திய, எழுதப்பட்ட வரலாற்றுக்கும் இதனுள் எழுதப்படாமல் அலை மோதும் அழிக்கப்பட்ட வரலாற்றுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் தமிழக வரலாறு விதிவிலக்குப் பெற்றதல்ல.

தமிழகத்தின் வரலாறும் அத்தகு வரலாற்று மறைப்புகளை – அழித்தொழிப்புகளை ஆதிக்க வெறியில் மேற்கொண்டு வளர்ந்து வந்ததுதானாகும். அப்போக்குக்கு முதலுரிமையும் உடையதுமாகும்.
இது தம்மால் அழிக்கப்பட்ட மக்களின் வாழ்வு உண்மைகளை-உரிமைகளைப் பறித்தெடுத்தும்,வேரறுத்தும், திரித்துப் புரட்டியும், இருட்டிப்புச் செய்தும், சமரசப் படுத்தியும், தன்வயப்படுத்தியும் தனக்குரிமையுடையது என்று சொல்லிக் கொண்டும் வளர்ந்தது தானாகும். அறிவுக் களவாடல் – இலக்கியக் களவாடல் செய்தது தானாகும். ஆனால் இப்போக்குகளும், மறைப்பு முயற்சிகளும் மற்ற நாடுகளின் வரலாற்றைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு துகள்களாக்கப்பட்டு மறைந்து கிடக்கவில்லை. மாறாக, வெளிப்படையாகவே ஒரு மூட்டைக் கட்டி மூடி மறைக்கப்பட்ட நிலையில் தேங்கியும், திட்டுத் திட்டாக முட்டிக் கொண்டும் கிடக்கிறது.
தமிழக வரலாறெழுதிகளோ தேங்கிக் கிடக்கும் அவ்வரலாற்றை ”முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வது போல்” என மக்கள் தம் வழக்கு மொழியில் சொல்வார்களே, அதனைப் போல் தங்களால் அழிக்கப்பட்டோரின் வரலாற்றைத் “தமிழ்“ என்ற மொழிச் சொல்லுக்குள் அடைத்து மறைத்து இருட்டிப்பு செய்ய முயன்று வருகின்றனர். தமிழகத்தின் வரலாறு முழுவதிலும் அவ்வாறே செய்து வந்துள்ளனர்.
அறிவியல் ஆய்வுகள் பெருத்துப் போயுள்ள தற்காலத்திலும் கூட, இதில் தமிழ் மொழியின் இலக்கிய-இலக்கணப் “பெருமை“ பேசும் புலவர்கள் தொடங்கி, மார்க்சியத்தால் தமிழரை விடுதலை செய்ய “ஆய்வு“ நடத்தும் ஆய்வாளர்கள் வரை இம்மறைப்புப் பணியில் தங்களுக்குள் கைகுலுக்கிக் கொண்டு ஒற்றுமையாய் ஓர் அணியாய் நிற்கின்றனர்.
அவர்களின் எழுத்துக்களில் அழிக்கப்பட்டோர் மீதான வக்கிர வன்மம் நெளிந்து நிமிர்ந்து வளைந்து குழைந்து கிடக்கின்றது.

எழுத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழகத்தின் வரலாறு “சங்க காலம்” எனச் சொல்லப்படும் காலம் தொடங்கி தமிழகத்தின் மீது அய்ரோப்பிய பிரித்தானியர் ஆட்சி செலுத்திய காலம் வரையிலான நெடியதும் பல்வேறு காலப் பகுப்புகளைத் தனக்குள் கொண்டதுமாகும்.
வரலாறெழுதிகள் பலரும் அவற்றைப் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுள் பொதுவானதாகக் கொள்ளப்படும் வரிசை முறையை நாம் இங்கு பார்வைக்காகப் பின்வருமாறு முன்வைக்கலாம்.
1.சங்க காலம். 2.சங்கம் மருவிய அல்லது அழிந்த காலம் அல்லது களப்பிறர் காலம் அல்லது இருண்ட காலம். 3.பல்லவர்கள் மற்றும் பக்தி இயக்கத் தொடக்கக் காலம். 4.பிற்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் பக்தி இயக்க உச்ச காலம். 5.பிற்காலப் பாண்டியப் பேரரசு மற்றும் பக்தி இயக்க முடிவு காலம். 6.முகமதியர் படையெடுப்புக் காலம். 7.இந்து எழுச்சி விசயநகரப் பேரரசு மற்றும் பக்தி இயக்கப் பெருஞ் சமரசக் காலம். 8.நாயக்கர் மற்றும் பாளையக்காரர் காலம். 9.அய்ரோப்பியர் மற்றும் விடுதலைக் காலம். 10.தற்காலத் தமிழ் மாநிலக் காலம்.
இவைதாம் நமக்கு அறிய வந்துள்ள தமிழக வரலாற்றின் உள்ளடக்கம்.

இப்படி வகைப்பட்டுள்ள காலப் பகுப்புகளில் தமிழக வரலாற்றியலின் தொடக்கமாக வைக்கப் பெற்றுள்ள சங்க காலம் என்பது அது குறிப்பிடும் தன்மையில் நீண்ட நெடியதும் தனக்கென தனித்த இலக்கிய – இலக்கண எழுத்துப் பதிவுருக்களைக் கொணடதாகும்.
அவ்விலக்கிய இலக்கணங்கள் நமக்கு தமிழ் கொண்டு வளர்ந்தெழுந்த தமிழரின் வரலாற்றில் வளர்ந்தோங்கிய சேர, சோழ, பாண்டியர் எனும் மூன்று தனித்தனி அரசுக் குடிகளை தனித்தனிப் பாடல்கள் மூலம் பேரரசுகள் வடிவில் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
அப்பேரரசுக் குடிகள் போர் வெறியோடு நாடு பிடி வேட்டையாடிய பெருமைகளை அவை வானளாவப் புகழ்கின்றன. பல்வேறு பழங்குடிகள் மற்றும் சிற்றரசுகள் மீது அப்பேரரசுகள் நடத்திய நாடு பிடி வேட்டை வெறியாட்டத்தை “அரச வாகை“ என்னும் “பார்ப்பன வாகை“ என்றும் வழிதுறை பிரித்து விதந்தோதுகின்றன.
இவ்வெற்றிகளைக் கொண்டு அப்பேரரசு மன்னர்களும் பெருமைக்குரியோரும் தங்கள் வெற்றிக்கு உதவியோர்க்கும், பார்ப்பனர்களுக்கும் பரிசுகள், நிலக்கொடைகள், வளக்கொடைகள் வழங்கி புகழ்ந்து புரக்கும் காட்சிகள் நல்ல தமிழில் நயப்பட விளக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் இம்மூன்று தமிழ்ப் பேரரசுகளின் பின்னணியிலும், பெருந்தமிழ் நாட்டின் பொது மக்களும், பிறரும் “வரிசைக்கு வருந்தும் பரிசிலர் வாழ்க்கை“ வாழ்ந்து, பேரரசுகளின் பெருவாயிற் புரங்களில் இரந்து புகழ்ப்பாட்டுக்கள் பாடிப் பரிசுகள் கேட்டுக் கிடைக்காமல், காடு மேடு என அலைந்து திரிந்து, கானக காடுகளின் சுனைகளில் நீரருந்திக் களைப்பாறி, கடையேழு வள்ளல்களின் இருப்பிடம் தேடிச் சென்று மலர்ந்த முகத்தோடு கையேந்திய நிலையையும் இரங்கற் குரலில் எடுத்துரைத்தும் நிற்கின்றன.
இப்படி இருவகை நிலைகளை எழுத்துப் பதிவில் முன்வைக்கும் சங்க கால இலக்கியங்களின் கட்டமைப்புகளின் இண்டு இடுக்குகள் எல்லாம் தமிழ்ப் பழங்குடி மக்களின் மரண ஒலிகளும், புலவர்களின் வறுமைக் கண்ணீரும், பெண்களின் ஓலமும் எங்கும் நிறைந்து நிற்கின்றன.

அவை தங்கள் வாழ்வின் மேல் நடத்தப்பட்ட அரசவாகை, பார்ப்பன வாகை வெறியாட்டங்களைச் சொல்லாமல் சொல்லி, நம் நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு விண்ணுயர்ந்து நின்று, இலக்கிய உச்சியில் “ஓங்கார ஓலம்“ எழுப்புகின்றன.
தமிழக வரலாற்றியலின் தொடக்க காலம் இப்படியிருக்க, அதைத் தொடர்ந்து வரும் இரண்டாம் காலப் பகுப்பாகிய சங்கம் மருவிய அல்லது களப்பிறர் அல்லது இருண்ட காலம் எனப்படும் பகுப்போ, அச்சங்க காலத் தமிழர் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டு நம் முன் நிறுத்துகிறது.
(தொடரும்)

2 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை. மேலும் அறிய ஆவலாக உள்ளேன். தொடரவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வேங்கடத்தை ஆண்ட புல்லி மன்னன் தலைமையின் குறுநில மன்னர்கள் கூட்டு படைய களப்பிரர்கள் மூவேந்தருக்கு எதிராக புரட்சி செய்து உருவாக்கபட்ட படை

    பதிலளிநீக்கு