22/6/09

2.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்


கடலுள் மூழ்கிய கண்டம்


இப்படிப்பட்ட மனிதர் இனம் இன்றைய உலகில் முதன் முதலாக எங்கு தோன்றி வாழ்ந்தது என்பதை, மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு,

” பல இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாகத் தீர்மானிக்கப்படாத, புவியலறிஞர்கள் அறிந்துள்ள புவியின் வரலாற்றின் ஒரு காலகட்டகமாகிய மூன்றாம் காலக்கூறு (Tertiary Period) என்றறியப்படும் காலக்கட்டத்தில் (அதனுடைய முடிவில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு) மிகவும் உயர் வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கினம் வெப்ப மண்டலத்தில் ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. ஒரு வேளை அது தற்போது இந்திய மாக்கடலின் (”இந்தியா” எனும் சொல்லாட்சி இன்று உலகந்தழுவியதாக உள்ள நிலையில் எங்கெல்சு இந்தியா என்று பயன்படுத்தியுள்ளதை நாம் அரசியல் களத்தில் மறுக்கவியலாது. ஆனால் பாண்டியன் பெருங்கடல் என்ற பெயராட்சியே, பின்னாளில் இந்தியப் பெருங்கடல் என மருவி வந்திருப்பதற்கு வாய்ப்புண்டு என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இப்பெருங்கடலினுல் நிலம் மூழ்கியதைப் பற்றி தமிழிலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன என்பது வெளிப்படையானது.) அடியில் மூழ்கிப்போன ஒரு பெருங்கண்டமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பட்டுக் கூறுகின்றார்.(மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சின் ” மனிதன் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய வகையில் உழைப்பின் பங்கு” எனும் நூலிலிருந்து.)

மேலும், மனிதர்களைக் குரங்கினத்திலிருந்து எது வேறுபடுத்திப் பிரித்து தனிவகை உயிரினமாக்கியது என்பதைப் பற்றிக் கூறும்போது,
” மரமேரிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனிதச் சமுதாயம் தோன்றுவதற்கு இலக்கக் கணக்காண ஆண்டுகள் கடந்து சென்றன. இந்தக் காலஅளவிற்கு புவியின் வரலாறிறிலுள்ள முகாமைத்தன்மையானது மனிதருடைய வாழ்நாளில் ஒரு நொடிக்கு இருப்பதை விட இதிகம் இல்லை. ஆனால் (இவ்வளவு காலம் கடந்தும்) அது இறுதியாகத் தோன்றவேச் செய்தது. அது குரங்குகளின் கூட்டத்திற்கும் மனிதச் சமுதாயத்திற்கும் இடையிலான இயல்பு வேறுபாடாக இருப்பது எதுவோ அதுவேயாகும், அதுவே உழைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார்.

உழைப்பே மனிதரை உருப்படுத்தியது

மனிதர் இனத்திற்கும் குரங்கினத்திற்கும் இடையிலான பிரிப்பு வேறுபாடாக இருக்கும் இந்த உழைப்பு, மனிதனைச் சிந்திக்கத்தக்கவனாக, செயற்படத்தக்கவனாக, ஆளுமை செய்பவனாக மாற்றுவதற்கு எவ்வாறு தொழிற்பட்டது என்பதை, மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு,

”மனிதன் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரம் ஆண்டுகளில், நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தம் கைகளைப் பொருந்தியவாறு பழக்கப்படுத்துவதற்கு கற்றுக் கொண்ட முதற்செயல்கள் (அதாவது தொடக்ககால உழைப்புச் செயல்கள்) மிகவும் எளிமையானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும்…… ஆனால், முகல் கருங்கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு, ஒப்பு நோக்கினால் நாமறியும் காலம் அற்பமாகி விடுகிற ஒரு கால ஊழியாகக்கூட கடந்து விட்டிருக்கக்கூடும். (இத்தொடர் போக்கின் மூலம்) தீர்மானமான முன்னெடுப்பு தொடக்கி வைக்கப்பெற்று விட்டது. ஆம் (விலங்குத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு மாறும் வகையில்) கை விடுதலை பெற்று விட்டது. இவ்வாறாக கை என்பது உழைப்பிற்கான உறுப்பு மட்டுமல்ல, மாறாக அது (ஒரு தொடர்ந்த) உழைப்பின் விளைபயனுமாகம்…….. .
……ஆனால் கை மட்டும் தனியாக இருக்கவில்லை. அது முழு மொத்தமான, உயர்ந்தளவிலான பல்கூட்டுத் தொகுதியாக அமைந்த ஒரு உயிரினத்தின் உறுப்புமாகும். இதனால் (தொடர் உழைப்பின் பயனாக) கை என்ன நற்பயனைப் பெற்றதோ, அப்பயன்களை அது பணி புரிந்து வந்த உடலமைப்பு முழுவதுமே பெற்று வந்தது……. (இவ்வாறாக) உடலமைப்பின் பிற பகுதிகளின் மீது கையினுடைய வளர்ச்சியின் நேரடியான செயலாட்சியானது மிகவும் அதிக முகாமைத் தன்மை உடையாதகும்”.


…..கையின் வளர்ச்சியுடன், அதற்கான உழைப்புடன் மனிதன் இயற்கையின் மீது ஆளுமை கொள்வது தொடங்கியது. ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தின் முடிவிலும் மனிதனின் அறிவின் எல்லை விரிவாகிக் கொண்டே வந்தது. அவன் இப்போக்கில் இயற்கை பொருட்களில் இதுவரை அறியப்படாதிருந்த புதிய பண்புகளை தொடர்ந்தாற் போல் கண்டுபிடித்து வளரத் தொடங்கினான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் மனிதரிடையே ஒருவருக்கொருவர் ஆதரவு, கூட்டுச் செயல்கள் போன்றவை வாழ்க்கை வழக்குகளாகின. இவ்வாறு பெருகிய வாழ்க்கை வழக்குகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டுச் செயல்பாடுகளின் தேவையையும் விளைவையும் தெளிவுபடுத்தி சமுதாய உறுப்பினர்கள் ஒன்றாக நெருங்கி வருவதற்கு மிகவும் அவசியமானதாக உழைப்பு உதவியே வந்தது. சுருங்கக் கூறவேண்டுமெனில் உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்குரிய ஏதோ ஒன்று (உறவுகள்) உள்ளவர்களாகிய நிலையை எய்தினர். இந்தத் தேவை ஓர் உறுப்பை மிகவும் வளமுடையதாக உருவாக்கியது. இதனால் மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாத ஒலிகளை எழுப்பிய குரல்வளை, மிகலும் தெளிவாக இனங்கண்டறியப்படும் ஒலி வேறுபாட்டைப் படைக்க வல்லதாக உழைப்பினால் மாற்றயமைக்கப்பட்டது. ஆம், வாயின் உறுப்புகள் படிப்படியாக ஒரு தீர்மானமான ஒலிக்குப் பின் மற்றொரு வேறுபட்ட ஒலியை மாற்றி ஒலிக்க, அவ்வொலிகளின் கோர்வையை உச்சரிக்க கற்றுக் கொண்டன. இப்படி உழைப்பின் பயனால் பிறந்ததே பேச்சு.

….முதலில் உழைப்பு, அதன் பின்னரும் அதனுடன் இணைந்தும் உருவெடுத்த பேச்சு. இந்த முதன்மையான இரண்டு தூண்டுதலின் செயலாட்சியினால் காலப்போக்கில் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதருக்குரியதாக மாற்றமடைந்து வளர்ந்தது. ….. மூளையின் வளர்ச்சியுடன் கை கோர்த்துக் கொண்டு, அம்மூளையின் உடனடி பணியாட்கருவிகளான புலன்களின் வளர்ச்சியும் நடந்தேறியது. பேச்சின் படிப்படியான வளர்ச்சியுடன் அதற்கியைந்த வகையில் கேட்கும் உறுப்புகளும் – செவி உறுப்புகளும் செம்மையடைவது தவிர்க்க முடியதாக அமைந்தது. இப்படி (தொடர் உழைப்பழன் பயனாக) மூளையின் முழுவளர்ச்சியைத் தொடர்ந்து (மனித உடலின்) அனைத்துப் புலன்களுமே செம்மையடைவது நடந்தேறியது.

”…..மூளை அதன் பணியாட்களாகிய புலன்கள், மேலும் மேலும் தெளிவுபெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன், போன்றவற்றின் வளர்ச்சியானது உழைப்பழன் மீதும் பேச்சின் மீதும் தொடர்ச்சியான எதிர்ச் செயல்பாடுகளை தொடுத்தே வந்தன. இவை மீண்டும் உழைப்பு பேச்சு ஆகியவற்றின் கூடுதலான வளர்ச்சிக்குத் திரும்பத் திரும்ப தூண்டுதல்களை அளித்தே வந்தன. இந்த வளர்ச்சி மனிதன் இறுதியாக மனிதக் குரங்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டவனாக மாறிப் பிரிந்தவுடன் முற்றுப் பெற்றுவிடவில்லை. தொகுப்பில் கூடுதலான வலுமிக்க முன்னேற்றத்தைப் படைத்தே தொடர்ந்தது. இந்த வளர்ச்சியானது (மனித முன்னேற்றத்தின்) வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு மக்களிடையேயும் அளவடிப்படையிலும் திசையடிப்படையிலும் இட அடிப்படையிலும் ஏற்பட்ட தற்காலிக பின்னேற்றங்களால் இடைமறிக்கப்படவும் தடை செய்யப்படவும் ஆளாகியே முன்னேறியது. என்றாலும் இந்தக் கூடுதலான வலுமிக்க முன்னேற்ற வளர்ச்சி, முழுமையான மனிதன் தோன்றியவுடன் செயலுக்குப் புதிய ஆக்கக் கூறான சமுதாய ஒன்றிப்பின் துணையுடன் ஒருபுறத்தில் வலுவுடன் முன்னோக்கி விரைந்து செல்லவும் மறுபுறத்தில் திட்டமிடப்பட்ட வாழ்வியல் முறைகளில் வழிநடத்தப்படவும், மனிதரினத்தை ஆட்படுத்தி நிறுத்தியது.”


”…….. கைகள் பேச்சு உறுப்புகள், மூளை, இவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டினால் தனிமனிதன் மற்றுமின்றி சமுதாய உறுப்பினராக இருந்த பல்வேறு மனிதர்கள் தொகுப்பில் மேலும் மேலும் சிக்கல் மிகுந்த செயல்களை (உழைப்பின் மூலம்) நிறைவேற்றும் திறம் பெற்றோராயினர். மேலும் உயர்ந்த குறிக்கோள்களைத் தீர்மானிக்கவும் அவற்றை அடைவதையும் மனிதர்கள் பெற்றடைவது இதனால் நடைமுறையாயிற்று. (இப்படி அமைந்த தொடர் போக்கில்) மனிதனின் ஒவ்வொரு தலைமுறையின் வேலை முறையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு வளர்ந்தன. இதனால் வேலை முறைகளில் வகைப்பாடுகள் பிரிவதும் செய்நேர்த்திகள் மேலோங்குவதும் தொடர் நடைமுறையாயின. மனித வாழ்வில் (தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக) வேட்டையாடுவது, கால்நடைகளை மந்தைகளை வளர்ப்பது ஆகியவற்றுடன் உழவுத்தொழில் செய்வது போன்றவை வளர்ச்சியுற்றன. இவ்வளர்ச்சியின் பின்னணியிலேயே நூல் நூற்பு, நெசவு வேலை, மண்பாண்ட வேலை, உலோக வேலை ஆகியவற்றோடு தொழில் வளர்ச்சியும், கலம் கட்டுதல், கடற் பயணம் செல்லுதல், வணிக வாழ்வு மேற்கொள்ளல் போன்றவை ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.


இவற்றோடு மனித வாழ்வில் இறுதி விளைச்சலாகக் கலைகளும் அறிவியலும் வளர்ச்சி கொண்டன. (இத்தகு மனித வாழ்வு முன்னேற்றத்தோடு) குலங்கள்(1) தேசங்கள்(2) அரசுகளாகவும்(3) உருவெடுத்து ஓங்கி வளர்ந்தன. இவற்றால் சட்டங்களும் அரசியலும் தோற்றம் கொண்டதோடு, மனித உள்ளத்தில் தோன்றும் மனிதச் செயல்பாடுகளின் வியப்புக்குரிய எதிரொளிப்பான மதமும் தோன்றியது”.
என்று மனித இனத்தின் வரலாற்று வளர்ச்சிகளைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார். (இந்த நீண்ட மேற்கோளில் அழுத்தம் தந்துள்ள பகுதிகள் யாவும் எங்கெல்சால் தரப்பட்டவை. அடைப்புக்குள் வந்துள்ள சொற்றொடர்கள் விளக்கத்திற்காக எம்மால் தரப்பட்டவை. ஒரு நெடும் பகுதியைச் சுருக்கித் தரும்போது உள்ளடக்கம் சிதையாமலிருக்க இத்தகு சொற்றொடர்கள் உள்ளீடு செய்யப்படுவது தவிர்க்க இயலாததாகிறது.)

(1) குலங்கள் எனப்படுபவை மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியில் தோன்றிய முதல் மந்தைச் சமுதாயத்தின், அதாவது ஒரே இரத்த உறவுடைய மனிதக் கூட்டம் வாழ்ந்து வந்ததைக் குறிக்கும் பெயர்க் குறியீடுகளாகும். தமிழ்ச் சமுதாயத்தில் இந்த குலக்குறியீடுகள் சாதிகளாகத் திரிவடைந்துள்ளன.

(2) தேசங்கள் எனப்படுபவை தற்கால மனிதச் சமுதாயத்தின் ஓர் ஒருங்கிணைந்த வாழ்வியல் வைப்பு முறையாகும். இதனுள் பல்வேறு குலங்கள் கலந்து மயங்கியுள்ளன. குல வாழ்வியலுக்கு மாறுபட்ட பல்வேறு புதிய தொழில்கள் தலையெடுத்துள்ளன. தொழில்களின் அடிப்படையில் வாழ்வியல் உரிமைகள் வகைப்பட்டுள்ளன, பிரிக்கப்பட்டுள்ளன என்றாலும் மக்களுக்கிடையில் ஒற்றுமைக் கூறுகளை மையப்படுத்தும் சமுதாய முறையாகும்.
(3) அரசுகள் எனப்படுபவை உழைப்புப் பிரிவினையால் மக்களிடையே காலங்காலமாக ஏற்பட்டு வந்த அதிகாரங்களின் தொகுப்பு நடைமுறை மையங்களாகும். மக்களுக்கு அவர்களுக்குரிய வாழ்வுரிமைகளை வகுத்துப் பிரித்து வழங்கவும், அவ்வாறு வழங்கப்பட்ட வாழ்வியல் உரிமைகளை மீளப் பறித்தெடுக்கவும் அதிகாரம் கொண்ட சமூக மேலாண்மைக் கருவிகள் ஆகும்.

தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக