14/7/09

4.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்


மக்கள் பேரினங்கள்
இயற்கை பிரித்த பாகுபாடுகள்

பல்வேறு திரிவாக்க வளர்ச்சி மாறுபாடுகள் வழி தோன்றிய மனிதர் இனம், தான் வாழ்ந்த அல்லது சென்ற இடங்களுக்கேற்ப தங்கள் உடலிலும் வாழ்விலும் பல சிறிய பெரிய மாறுபாடுகளைக் காலப்போக்கில் ஏற்று வளர்ந்தது. இம் மாற்றங்களும் வேறுபட்டு நின்ற மனித மந்தைகளும் இதனால் வேறுபாடுடையனவாக வளர்ந்தன. இவ் வேறுபாடுகள் நிலை கொண்டு அவற்றின வாழ்வியலில் மேலோங்கிய நிலையிலேயே, இன்றைய மனிதரினம் உலகளவில் வேறுபட்டும் பிரிந்தும் வாழும் பல்வகை மக்கள் பிரிவினங்ககளைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

மனிதரினம் பிரிந்து பல்வேறு மக்கள் பிரிவினங்களாக வாழ்ந்து வரும் நிலையை அவற்றுக்கிடையே பன்னெடுங்காலமாக நடந்து வந்த திரிவாக்க வளர்ச்சிப் பாதையை, தாவர இனத்தின் பாதையை வரையறுத்தது போன்றோ, விலங்கினத்தின் பாதையை வரையறுத்தது போன்றோ, வளர்மாற்றப் போக்கின் அடிப்படையில் வகைப்படுத்திட இயலாது. ஏனெனில் மனிதரினம் பரவி விரிந்து விரவிய வாழ்க்கையில் அவர்களிடையே தாக்கம் செலுத்திய இயற்கையின் திசை மாற்ற மாறுபாடுகளை, சென்றடைந்த வாழ்விடங்களை அவர்களுடைய வளர்மரபில் ஏற்படுத்திய அகவய திரிவாக்க மாறுபாடுகளை இனங் கண்டறிவது மிகுந்த சிக்கல் உடையதாகவே தொடர்கின்றது.(1)

இங்கு மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சு மனிதரினம் விலங்கினத்திலிருந்து பிரிந்த வரலாற்றைக் கூறுகையில் இனங்காட்டிய ஒரு கருத்தை நினைவு கூர்தல் நலமாகும். அது இயற்கையை விலங்குகள் வெறுமனே பயன்படுத்தி வந்தன. ஆனால் மனிதனோ அதனைப் பயன்படுத்துவதோடு நிற்காமல் அதனைத் தனக்கு கீழ்ப்படுத்தி மாற்றி அமைத்து அதனட மீதான ஆளுமையை நிறுவினான் என்பதுவே. இக்கருத்தை இங்கு நினைவு கூர்வதன் மூலம் நாம் வலியுறுத்துவது என்னவெனில், அது இயற்கை ஏற்படுத்தும் திரிவாக்க மாறுபாடுகளின் வெளிப்பாடு பற்றிய விளக்கமே ஆகும்.

பன்னெடுங்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்கை தனது போக்கில் விலங்கினத்தின் மீது செலுத்திய தாக்கங்களின் திரிவாக்க மாறுபாடுகள் விலங்கினத்தின் தலைமுறை வளர்ச்சியில் கண்டறியத் தக்க வகையில் மிகவும் துல்லியமானவையாக அமைந்தன. ஆனால் இயற்கை இம்மாற்றங்களை நிகழ்த்த எடுத்துக் கொண்ட காலத்தோடு ஒப்பிடுகையில், மிகக் குறுகிய காலமாக அமைந்துள்ள மனிதரின் இயற்கையின் மீதான மாற்றியமைப்புகளின் காலம், மனிதரினத்தின் மீது செலுத்திய அகவயத் தாக்கங்கள் துல்லியமாக அறியப்பட முடியாதவையாகும். அது போலவே மாற்றியமைப்புகளுக்கு எதிர்வினையாக இயற்கை செலுத்திய தாக்கங்களின் திரிவாக்க மாறுபாடுகள் மிகவும் எளிமையாக புலப்படத் தக்கவையாக இல்லை. சிக்கலுக்குரியதாகவே உள்ளன. இதுவே நாம் இங்கு வலியுறுத்த விரும்புகின்ற உண்மை.

மனிதரின மூவகை பொது வகைப்பாடு

மனிதரினத்தை வகைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களுள்ள போதிலும் மாந்தவியல் அறிஞர்கள் பொதுவான நிலையில் மனிதரினம் மக்கள் பிரிவினங்களாக ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து வேறுபடும் நிலைகளை வைத்து வகைப்படுத்துகின்றனர். அதாவது வெளிப்படையாக தெரியவல்ல நிறமாறுபாடுகள் வேறுபாடு காணவல்ல உடல் மற்றும் உருவ தகவமைப்புகள், வாழ்க்கை முறையில் புலப்படும் குழு உணர்ச்சி, பண்பாடு, மொழி ஒற்றுமை போன்றவற்றைக் கொண்டு ஒரு பொது வகைப்பாட்டைக் கையாண்டு வருகின்றனர். அவர்கள் இத்தகைய அளவீட்டுகளின் அடிப்படையில் இன்றைய உலக மனிதரினத்தை மூன்று பொதுப் பேரினங்களாகப் பிரித்துள்ளனர். இப்பேரின வகைப்பாடு பொதுவான நிறவேற்றுமையையும் வாழ்விடத்தின் அடிப்படையையும் கொண்டுள்ளதாகப் பின் வருமாறு அமைகின்றது.

1. நீக்ரோவியர் இனம் – கருமை நிற மனிதரினம் – வெப்ப மண்டல மக்களினம்
2.அய்ரோப்பியர் இனம் – வெள்ளை நிற மனிதரினம் – பனி மற்றும் பனிச்சார்பு மக்களினம்
3.மங்கோலியர் இனம் – மஞசள் நிற மனிதரினம் – ஆசிய வகை மனிதரினம்

இப்பொது வகைப்பாட்டை மந்தவியல் அறிஞர்கள் மனிதரின மூதாதை எனக் கருதப்படும் ஒரு வகை மனிதக் குரங்கினத்தின்(2) தொல்லியல் புதைப்படி உருக்களின் மாதிரிகளைக் கொண்டு வகைப்படுத்தியுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாதிரியும் வடிமைக்கும் உடல் மற்றும் உருவத் தகவமைப்புகள் கொண்டும் அவை வேறுபடும் வேறுபாடுகளைக் கொண்டும் இப்பேரினங்களை பல்வேறு உடலின வகைகளாக பிரித்துக் கொண்டு அவர்கள் மனிதரினத்தின் வளர்ச்சிப் பாதையை வரையறுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டும் வருகின்றனர். நாம் இந்த உடலின வகை ஆய்வுகளுக்குள் செல்ல வேண்டாம். மாறாக மேற்கூறிய முப்பேரினங்களும் பொது நிலையில் தொடுக்கப்பட்டுள்ள முறையை மட்டும் இங்கு காணலாம்.
(தொடரும்)