20/11/10

8.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்


கடலிய – ஆத்திரேலிய வகை மனிதரினம்

இந்தக் கிளை வகையினங்களைக் கண்டறியும் பார்வையோடு, நாம் கடலிய – ஆத்திரேலிய வகை உடலினங்கள் குறித்துக் காண்போமாயின், இவ்வகையினம் நீக்ரோவியப் பேரினத்தின் பொதுத் தன்மைகளில் பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவே இருக்கின்றது. இது குறித்து மாந்தவியல் அறிஞர்கள் பலவகைக் கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, ஆத்தரேலியப் பழங்குடிகளை நீக்ரோவியர்களுடன் ஒப்பிட்டு அறியலாமே தவிர, நீக்ரோவியர்களாகவே கருதக் கூடாது என்றும் அவர்களிடையே கறுப்பு நிறத்தைத் தவிர அய்ரோப்பியப் பேரினச் சாயல்களே மிகுந்துள்ளன என்றும், சில மாந்தவியல் அறிஞர்கள் வழக்குரைக்கின்றனர். ஆனால் பொதுத் தன்மைகளின் வெளிப்பாடுகளில் மாற்றங்கள் இருந்தாலும் உள்ளடக்கங்கள் மாறாமல் இருப்பதால் நீக்ரோவியப் பேரினத்துடன் இணைத்தே வகைப்படுத்தலாம் எனச் சில மாந்தவியல் அறிஞர்கள் கருத்துரைக்கின்றனர். இப்படி கூறும் மாந்தவியல் அறிஞர்கள் நீக்ரோவியர் பேரினச் சார்பில் ஆப்பிரிக்க நீக்ரோவியருக்கும்,ஆத்திரேலிய வகையினருக்கும் இடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றனர்.

“ஆப்பிரிக்க நீக்ரோவியரை, ஆத்திரேலிய வகையினரோடு ஒப்பிட்டுப் பார்க்க நாம் விரும்பினால், சில வேளைகளில் வியப்பூட்டும் ஒற்றுமையைக் காட்டும் பல இயல்புகளோடு கூடவே, குறிப்பிடத்தக்க வேற்றுமைகளையும் காணலாம். முதன்மையாக நீக்ரோவியரின் உடல்மீது மயிர்ப்போர்வை வளர்ச்சி குன்றியது – பலரிடம் பொதுவாக காணப்படுவதே இல்லை. மாறாக, ஆத்திரேலியர்களுக்கு பெரும்பாலான மெலனேசியர்களுக்கும், பாப்புவான்களுக்கும் அது மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது. நீக்ரோவியரின் தலைமுடி வெகுவாகச் சுருண்டிருக்கிறது. மெலனோசியர்களுக்கும், பாப்புவான்களுக்கும் அவ்வளவாகச் சுருள்வதில்லை…… நீக்ரோவியரின் நெற்றி நேரானதுடன் துலக்கமான நெற்றி மேடுகள் கொண்டது. இந்தோனேசிய ஆத்திரேலிய வகையினருக்கோ, நெற்றி நடுத்தரச் சாய்வானது, அல்லது ஆத்திரேலியர்களுக்கு உள்ளதுபோல பெரும்பாலும் சரிவானது. அத்துடன் அவர்களுடைய கண் மேல்வரம்புகள் தீவிர வளர்ச்சியடைந்தவை. நீக்ரோவியருக்கோ கண்மேல் வரம்ர் வளர்ச்சி குன்றியவை. நெற்றியின் வடிவத்தில் நீக்ரோவியர்கள், கடலிய ஆத்திரேலிய வகையினரைக் காட்டிலும் மூதாதையரின் மாதிரியிலிருந்து அதிகமாக விலகிவிட்டனர்போல் தெரிகிறது. மூக்கின் வடிவத்தில் உள்ள வேறுபாடு இதற்கு நேர்மாறானதாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க நீக்ரோவியரின் மூக்கு வழக்கமாகத் தட்டையானது. கிழக்கு நீக்ரோவியரின் மூக்கோ உப்பலான அல்லது நேரான தண்டுடையது ஆனால் சில மெலனேசியர்களின் மூக்குத் தண்டு உட்குவிந்தது. நீக்ரோவகையினருக்கும் ஆத்திரேலிய வகையினருக்கும் இடையேயுள்ள இன வேறுபாடுகள் பெருமளவு மயிர்ப் போர்வை, நெற்றியின் வடிவம், கண் மேல்வரம்புகள், மூக்குத் தண்டு போன்றவற்றுடன் தொடர்புடையவை. மிகப்பெரும்பாலான ஒற்றுமைகளுக்கு முன் இந்த வேற்றுமைகளை, ஒப்பிட்டுப் பார்த்தால் மிகப் பெரியவை அல்ல. நீக்ரோவியர் வகைக்கிளையும், ஆத்திரேலிய வகைக்கிளையும் புவியின் ஒன்றுக்கொன்று வெவ்வேறான வழிகளில் வளர்ச்சியடைந்ததே இந்த வேற்றுமைகளுக்கான காரணம் என எண்ணத் தோன்றுகிறது.

ஆத்திரேலிய – நீக்ரோ வகைத் தன்மை கொண்ட (இனக்குழுக்களின்) தொடக்கக் குழு தெற்காசியப் பகுதியில் எங்கோ இந்தியாவிலோ, இந்தோனேசியத்திலோ, ஒருவேளை இன்னும் அதிக மேற்கேயோ, பின் தொன்மைக் கற்காலத்தின் தொடக்க காலத்தில் வாழ்ந்திருந்தது என்றும் பின்னர் மேற்குக் கிளையாகவும், கிழக்குக் கிளையாகவும் பிரிந்துவிட்டது என்றும் அதன் பின்னர் இவ்விரு கிளைகளும் தங்களைப் பிணைத்திருந்த நிலத் தொடர்பினை இழந்து விட்டன என்றும் கருதிக் கொணடடோமானால்,........ மிகநீண்ட கடந்த காலத்தில் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது இன்னும் முற்பட்ட காலத்திலேயோ, தெற்காசியாவில் இத்தகைய நில நடுக்கோட்டு இனத்தின் மூதாதை இனக்குழு ஒன்று வாழ்ந்திருந்தது எனும் கருதுகோளின் அடிப்படையில், அதிலிருந்து பிரிவுபெற்ற வகையினக் குழுக்கள் பெரும்பகுதி தென்கிழக்கு அல்லது கடலியத் தீவுகளின் திசைகளிலும், அவ்வாறே மேற்கு திசையிலும், பின்னர் தென்மேற்கு அல்லது ஆப்பிரிக்காவின் திசையிலும் குடிபெயர்ந்து சென்றிருக்கும் என்று எண்ணுவது எளிதாக அமையும். இந்த நீண்ட மேற்கோளின் அடிப்படையில் கூறுவோமாயின் நீக்ரோவிய வகையினத்தையும், கடலிய, ஆத்திரேலிய இன வகைக் கிளையையும் பண்டைக் காலத்தில் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியவை என்றும், அவை தங்களுடைய நிலத் தொடர்பிணை இழந்து விட்டமையாலும், வேறுபட்ட திசைகளுக்குப் பிரிந்து சென்று விட்டமையாலும், சென்றடைந்த வாழ்விடங்களுக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தனித்தனிக் கிளையினங்களாகப் பிரிந்துவிட்டன என்னு கூறலாம். இதன் மூலம் பொதுப்படையில் கறுமை நிற உடலின வகையினராக இருக்கும் நீக்ரோவியர்களும், கடலிய ஆத்திரேலியக் கிளையினத்தின் பல்வேறு இனக்குழுக்களும், பண்டைக் காலத்தில் வாழ்ந்திருந்த தொல் மனிதரினக் குழுவொன்றின் தற்காலப் பிரதிநிதிகள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

சரி, இனி நாம் நமது தமிழரினத்தின் உடலின மரபினம் எனச் சொல்லப்படும் திராவிடர் இனம் பற்றியகருத்தின் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.

திராவிட – இந்தியர் வகைக் கலப்பினங்கள் (தொடரும்)