13/10/09

6.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்

மார்க்சிய மக்களின வகைப்பாடு

மனிதரினத்தின் வகைப்பாடுகளைப் பார்க்கும்போது, அவற்றுள் வேறுபட்ட நிறவகையினங்கள், வேறுபட்ட உடல் வகையினங்கள், பல்வகை தனித்த இனக்குழுக்கள், பழங்குடிகள், கலப்பினங்கள் போன்றவை அடங்கியுள்ளன என்பது ஒரு தெளிவான உண்மை. ஆனால் இதனைக் கொண்டு இன்றுள்ள மனிதப்பேரினத்தின் பல்வேறு மக்களினங்களை வரிளை முறையில் வகைப்படுத்தவோ, அவற்றுள் தூய வகையினங்களைத் தேடிப்படிக்கவோ முடியாது. அப்படி வரிசைப்படுத்த முயலுதலும், தூய வகையினத்தைத் தேடுவதும் இனவியலில் மட்டுமின்றி சுமுதாயவியலிலும் இனவெறிக் கொள்கையைத் தலையில் ஏற்றிக் கொள்வதற்கே வழி அமைக்கும்.

ஏனெனில், நிறத்தாலும், உடலமைப்பாலும் வாழ்க்கை முறை பண்பாட்டாலும் வேறுபடும் பல்வகை மனிதர்கள் இன்று மொழியாலும், நாட்டாலும், அரசுகளாலும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் மொழிகளுக்கிடையேயான வேறுபாட்டாலும், நாடுகளுக்கிடையேயான நிலப்பரப்பெல்லைகளாலும் வேறுபட்டும் உள்ளனர். இந்நிலையில் நிறத்தின் வகைப்பாடோ, உடலின் வகைப்பாடோ மக்களின் வகைப்பாட்டுக்கு பயனளிக்கவோ, ஒருங்கிணைக்கவோ செய்யாது. மாறாக பிளவுபடுத்திச் சிதைக்கவே செய்யும்.

ஏனெனில் இன்று ஒரு மொழி பேசுபவர்களே நாட்டு அடிப்படையிலும், அரசு அடிப்படையிலும் வேறுபட்டவர்களாக இருந்து வருகின்றனர். அத்துடன் ஒரே நாட்டெல்லைக்குள் வாழ்பவர்களும் தத்தம் மொழியடிப்படையில் வேறுபட்டும் நிற்கின்றனர். ஒரே மொழிக்குள்ளேயே வாழ்பவர்களோ தத்தம் வாழ்வியல் வேறுபாடுகளாலும், பண்பாட்டுக் கூறுகளாலும் வேறுபட்டு நிற்கின்றனர். இதுவே வாழ்வியல் காட்டும் உண்மை.

ஆக, எப்படிப் பார்த்தாலும் எல்லா இன மக்களிடையேவும், மனிதரினத்தை ஒற்றுமை படுத்தக்கூடிய கூறுகளும் உண்டு. வேற்றுமை படுத்தக்கூடிய கூறுகளும் உண்டு. எனவே தான் மக்களை ஒற்றுமை படுத்தக்கூடிய கூறுகளைக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் மனிதரினத்தை மக்களினங்களாக வகைப்படுத்தும் போது, மார்க்சியர்கள் பின்வருமாறு ஒரு பொதுப்படையான வகைப்பாட்டைக் கையாள்கின்றனர்.
அப்பொது வகைப்பாடு இதுவே.
1.நிலப்பரபபால் வேறுபடும் மக்களினங்கள்
2.நாடுகளால் வேறுபடும் மக்களினங்கள்
3.அரசுகளால் வேறுபடும் மக்களினங்கள்
4.மொழியால் வேறுபடும் மக்களினங்கள்
5.பண்பாட்டால் வேறுபடும் மக்களினங்கள்

இந்தப் பொது வகைப்பாட்டின் உள்ளேயே மார்க்சியர்கள் நிற வேறுபாடுகளையும், உடலின வேறுபாடுகளையும் பொதுமைப் படுத்திக்கொள்கின்றனர். இதனால் அவை மேலோங்கும் போது கண்டிக்கவும், எதிர்க்கவும் செய்கின்றனர். இதனால் நிறப் பண்புகளுக்கும் உடலின வேறுபாடுகளுக்கும் தரப்படும் தனிச் சிறப்பானது மறைந்து விடுகின்றது மக்களைப் பிளவு படுத்தும் நிறவெறிக் கொள்கையும் உடலினத் தூய்மைவாதமும் தலையெடுக்காமல் தணிந்து விடுகின்றன. இதனால் மக்களிடையே நாட்டாலும், மொழியாலும், பண்பாட்டாலும், வாழ்வாலும், உழைப்பாலும் ஒற்றுமை ஊக்குவிக்கப்படுகின்றது. பிரிவி வேறுபாடுகள் களையப்பெற்று ஓர்மைத் தன்மை உருவாக்கப்படுகின்றது.

இங்கு மார்க்சியர்கள் குறித்து நாம் சிலவற்றைக் கூறியாக வேண்டும். மார்க்சியர்கள் எனப்படுவோர் இயற்கையின் இயங்கியல் அடிப்படையில் மக்களின் வாழ்வு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டும், அவற்றை மக்களின் உழைப்பு, உற்பத்தி, பயன்பாடு, மறு ஈடுபாடு போன்றவற்றினைக் கொண்டு சரிபார்த்தும், மக்களுக்கு வாழ்வினையளிக்கும் கொள்கைகளைக் கொண்டவர்களாவர்.

இதனால் இவர்கள் உழைப்போரை மையப்படுத்திய மக்கள் இயக்கொமன்றையும் பிரிதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். இந்தப் போக்கால் அவர்கள் உழைப்புக்கு எதிரிகளாயிருப்போரையும், உழைப்பைச் சுரண்டுவோரையும் எதிர்த்துப் போராடுவதையும் மேற்கொள்கின்றனர். இதனால் இவர்கள் மறுபக்கத்தில் மக்களிடம் பொதுமையுணர்வை வலியுறுத்தும் பொதுமையர்கள்-கம்யூனிஸ்டுகள் எனப் பெயர் பெறுகிறார்கள். எனவே மார்க்சியர்கள், கம்யூனிஸ்ட்கள் எனும் நிலையிலிருந்து உழைப்பிற்கும், உற்பத்திற்கும் சரிசமமான நுகர்வுக்கும் முதன்மை கொடுக்கும் சோசலிச அரசியலையும் வலியுறுத்துகின்றனர். அத்துடன் நிற்காது, உழைப்பைச் சுரண்டுவோரை எதிர்த்திட அவசியமாகின்ற ஒற்றுமையை மையப்படுத்தி குரல் எழுப்பவும் செய்கின்றனர்.

இதன் பயனாய்ப் பிறந்ததே ”இனைத்து நாடுகளின் தொழிளாலர்களே ஒன்றுபடுங்கள்” எனும் முழக்கம். இந்த அடிப்டையான ஒற்றுமையை பாதுகாக்கவே அவர்கள் உடலின, நிறத்தின வேறுபாடுகளை எதிர்த்து மொழி, நாடு, அரசு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய இன ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றனர். இதனடிப்படையில் வல்லரசியத்த எதிர்த்துப் பிறந்ததே மார்க்சியர்களின் ”ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களே ஒன்று சேருங்கள்” எனும் முழக்கமாகும்.

இந்நிலையில் மனித இனத்தில் உள்ள தனியொரு மக்களினம் குறித்த தனியாய்வை மேற்கொள்ளும் போது, அம் மக்களினத்தை உருப்படுத்துகின்ற பொதுத் தன்மைகளையும், பிற மக்களினங்களிலிருந்து வேறுபடுத்துகின்ற குறிப்பான தன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்துதலே சரியானதாகும். மார்க்சிய பொது வகைப்பாடும் அதன் வழிகாடடலிலான ஆய்வுமே இதங்கு வழிகாட்டும். மக்களின் ஓர்மையையும் கண்டறியும்.

(தொடரும்)