20/1/11

10. தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்


தமிழ் < தமிழரினம் < தமிழகம்

தமிழர் ஆரியரா திராவிடரா!

உலகத்தின் பல நாடுகளில் விரவியும், தமிழகம், இலங்கை போன்ற நாடுகளில் செறிவாகவும் வாழ்ந்து மொழியால் தமிழரினம் என அடையாப்படுத்தப்படும் தமிழரினம், ஓர் உடலின வகையினமாகிய திராவி்டர் இனமென்பது மாந்தவியல் அறிஞர்களின் கருத்து. ஆனால் மொழியால் தமிழர்கள் என்றறியப்படும் இவ்வினம் எவ்வகையில் திராவிடர் என்ற பெயர்ச்சுட்டைக் கொண்ட இன வகைக்குள் வகைப்படுத்தப்பட்டது என அவர்கள் விளக்கவில்லை. எனவே திராவிடர் இனம் என்பதற்கான பெயர்க் காரணம் குறித்து அறிய வேண்டியது நமக்கு அவசியமாகின்றது.
வரலாற்றில் மூலமொழியின் சமுதாய வளர்ச்சி
பொதுவாக, ஒரு மனிதரினம் அல்லது மக்களினம் வரலாற்றுப் போக்கில் தன்னையொரு மொழி பேசும் மொழியினமாக உருவாக்கிக் கொள்வதற்கு, அது பல கட்டங்களைக் கடக்கவும், அது வேண்டியிருக்கின்றது. இப்போக்கில் அம்மக்களினம் தனக்கான மொழியை உருவாக்கிக் கொள்வதில், தன்னையறியாமலேயே, ஆனால் திட்டமிட்ட முறையில் இரு வழிகளில் அது உழைக்க வேண்டியது அவசியம். ஒரு புறம் அது தானொரு மக்கட் சமுதாயமாகத் தொடர்ந்து நீடிப்பதற்கான பணிகளில் – அதற்கான உற்பத்தி உழைப்பில் ஈடுபட வேண்டும். மறுபுறம் சமுதாய உறுப்பினர்களை ஒருங்கிணைக்கவல்ல ஓசையொலிகளை விலங்குகளிடமிருந்து தனித்துப் பிரித்து, பின் அவற்றைச் சீர்படுத்திப் பேச்சுக்குரிய ஒலிகளாக மாற்றியமைக்க வேண்டும். இப்போக்கிற்கு உட்படவில்லையெனில் பின்பு மொழி என்பது கிடையாது.
முதலில் ஓசைச்சீருடைய ஒலிகள், பின் ஒலிகளின் கோர்வையாகப் பிறந்த பேச்சு (1) , பேச்சின் தொகுப்பாக உருவெடுத்த வாய்மொழி, வாய்மொழி மூலமாக உள்ளொடுங்கி நின்ற சிந்தனையின் வெளிப்பாடு (2). இவற்றோடு பல்வேறு வகைகளில், உழைப்பின் போக்கில் கையாளப்பட்ட கீறல்கள், கீறல்களைத் தனித்துப் பிரித்துப் பெறப்பட்ட செப்பமற்ற எழுத்துக்கள், செப்பமற்ற எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி உருவாக்கப்பட்ட தனிக்குறிப்பான் எழுத்துக்களின் கோர்வையால் பிறந்த வரியெழுத்து (3), வரியெழுத்தின் பதிவால் தோன்றும் இலக்கியம், இலக்கியத்தைச் செம்மைப்படுத்த எழும் இலக்கணம் (4) இத்தனை வளர்ச்சிகளையும் எட்டித்தான் ஒரு மூலமொழி (5) தோற்றம் கொள்கிறது. இத்தனை வளர்ச்சிகளையும் எட்டுவதற்கு மனிதரினம் எத்தனை நூறு அல்லது பத்தாயிரம் கணக்கிலான ஆண்டுகளைக் கடந்து வர வேண்டியிருந்தது தெரியுமா? ஆம், பல்வேறு போராட்டங்களினூடாகத்தான், பல காலங்களைச் செலவழித்து தான் மனிதரினம் தனக்கான மூலமொழியை உருவாக்கிக் கொண்டது.

வாழ்வியலில் அரசியலின் எழுச்சி
இப்படி ஒரு மூலமொழியின் உருவாக்கத்தில் அமைந்த ஓசைச் சீருடை ஒலிகளின் வகைப்பாடு, ஒலிகளின் கோர்வையால் பிறந்த பேச்சு, பேச்சின் தொடர் போக்கில் வளமடைந்த உணர்வெழுச்சிகளின் – சிந்தனைகளின் வெளிப்பாடு, கீறல்களை ஒழுங்குபடுத்திப் பெறப்பட்ட வரியெழுத்தின் தோற்றம், வரியெழுத்துகளின் வளர்ச்சியால் உடன் விளைவாக எழுந்த இலக்கியம், இலக்கியத்தின் மூலம் பிறந்து மொழியையே மறுவார்ப்பு செய்யப் புகுந்த இலக்கணம் – இப்படி தோற்றம் கொண்ட ஒவ்வொன்றும் தங்களுடைய வளர்ச்சிப் போக்கில், மனிதரினத்தின் சமுதாய வளர்ச்சி மற்றும் உறவுகளின் மீது புரட்சிமய மாறுதல்களை ஏற்படுத்தின. இதனால் விளைந்த விளைவுகளென்ன தெரியுமா?
மனிதரினம் தனது வாழ்வியல் செயற்பாடுகளோடு, தன்னையறியாமலேயே உருவாக்கிக் கொண்ட மூலமொழிக்கான போராட்டத்தில், படிப்படியாக விலங்குணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு – வாழ்வியலின் மீதான புரிதல் உணர்வுடன் – தன்னைப் புதியதொரு சமுதாயமாக மாற்றியமைத்துக் கொண்டது. வேறு வழியில் கூறுவோமென்ல், ஒரு புறம் தன்னையறியாமலேயே சமுதாய உணர்வினூடாகத் தனக்குள் ஒரு வலிமையான ஒருங்கிணைப்பையும், மறுபுறம் தனக்கான ஒரு வளமான மொழியையும் பெற்றுக்கொண்டது. அம் மொழியின் பின்புலத்திலேயே தன்னைச் சமுதாயமாகக் கட்டமைத்தும் கொண்டது.
இலக்கியத் திறனும், இலக்கண நுண்மையும் கொண்ட ஒரு வளமான மூல மொழியின் பிறப்பு, ஒரு புறம் – மலைக்கத்தக்க வகையில் என்று கூடச் சொல்லலாம் – மனிதக் கூட்டங்களை, அவர்களின் உணர்வுகளை நெருக்கமான வகையில் சமுதாயமாகப் பிணைத்ததென்றால், மறுபுறத்தில் அந்தச் சமுதாயத்தையே பல்வகை வகைப்பாடுகளுக்கும் உள்ளாக்கியது. இதன் காரணமாக நெருக்கமான முறையில் சமுதாயமாகப் பிணைக்கப்பட்ட மனிதரினம், அதனுடைய மறுபக்கத்தில் பல்வேறு வாழ்வியல் வேறுபாடுகளுடன் தொகுக்கப்பட்டதாகவும் அமைந்தது (6). விலங்கின வாழ்வியலின் அனைத்துப் பொதுப் பண்புகளிலிருந்து விடுபட்டு விட்ட புதியதொரு வாழ்வியலான மக்களின் வாழ்வியல் தொடங்கி வைக்கப்பட்டது.
இது எப்படி அமைந்ததெனில், இலக்கியத்திலிருந்து பிறந்த இலக்கணம் எவ்வாறு மூலமொழியின் பல்வகைக் கூறுகளையும் வகைப்படுத்தத் தொடங்கி, பின்னர் அம்மொழியையே ஒரு கட்டமைப்புக்குட்படுத்தி செம்மைப்படுத்தியதோ அப்படியே! இதனால் மொழியின் இலக்கண வழிப்பட்ட செம்மைப்பாடு, மறுவகையில் தன் தாக்கத்தைச் சமுதாயத்தை வகைப்படுத்துவதிலும் செலுத்தியது எனலாம். இப்போக்கிலேயே இலக்கியத்தின் மூலம் மொழிக்கு இலக்கணம் பிறந்தது போல, சமுதாயத் தொகுப்பின் மூலம் மனிதரினத்துக்கு அரசியல் பிறந்தது. (7)
அரசியல், சமுதாயத்தை மொழியின் மூலம் ஆளுமைச் செய்யத் தொடங்கியது. இதனால் அரசியலின் தலைமை ஆளுநனாக மொழியே மாற்றமடைந்தது. சமுதாயத்தின் அனைத்து வாழ்வியல் செயற்பாடுகளும் மொழியால், வழிகாட்டப்படுவதாக மாற்றப்பட்டன. இப்போக்கின் இறுதியில் குறிப்பான அம்மனிதரினம், தான் உருவாக்கிக் கொண்ட மூல மொழியினால் அடையாளப்படுத்தப்படும் மக்களினமாக உருப்பெற்றது.

குறிப்பு
1. மனிதரினத்தினை விலங்கினத்திலிருந்து பிரித்துத் துண்டுபடுத்திய வாழ்வியல் போக்கு, சமுதாயத்திற்கான வளர்ச்சியில் முதன்முதலாகப் பேச்சின் தோற்றத்தோடுதான் தொடங்கியது. ஏனெனில் பேச்சு நடைமுறையானதற்குப் பின்புதான் மனிதன் தன்னைத் தெளிவான முறையில் இனங்காணத் தொடங்கினான். விழிப்புணர்வு கொண்ட முறையில் தன்னைத் தனக்குரியவர்களோடு முழுமையாக இணைத்துக் கொள்ளவும், அவ்விணைப்பு அறுபடாமால் இருக்கச் சிந்திக்கவும் அதனைச் செயற்படுத்தவும் தொடங்கினான்.
2. உள்ளபடியே, ஒரு மொழி, அது மொழியென அறியத்தக்க வகையில் இந்தச் சிந்தனையின் வெளிப்பாடோடுதான் பிரிகின்றது. தெளிவான முறையில் விலங்கினத்தையும் மனிதரினத்தையும் வேறுபடுத்தும் மையக்கூறும் இதிலிருந்துதான் தொடங்குகின்றது மொழியும், மொழியின் வளர்ச்சிக்கான சிந்தனையுமின்றி மனிதன் விலங்கினத்திலிருந்து வேறுபட முடியாது.
3. வரியெழுத்தின் தோற்றத்தோடுதான், மொழி தன்னை முழுமையாக மற்றவற்றுக்குள் அதாவது சமுதாயச் செயற்பாடுகளுக்குள் இணைத்துக் கொள்கிறது. அப்போக்கில் அது அவற்றை ஆளுமை செய்யவும் தொடங்கி விடுகின்றது. இதனால் வரியெழுத்தின் தோற்றம், மொழியைக் கட்டமைப்பதற்கான வேலைகளையும் தொடங்கி விடுகின்றது. இறுதியில் அதுவே சமுதாயத்தினை அடையாளப்படுத்தும் கருவியாக மாற்றம் கொள்கி்ன்றது.
4. ஒரு மொழி தனக்கென ஒரு சமுதாய அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை வேறு வழியில் வெளிப்படுத்துவதுதான் இலக்கணமாகும். இதனாலேயே இலக்கணம் மொழியை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அதனைக் கட்டமைக்கின்றது. சமுதாயம் தனது இருப்பை அரசியலால் நெறிப்படுத்துகிறது. மொழி தனது சமுதாய இருப்பை இலக்கணத்தால் நிலைநிறுத்துகிறது. இதனால் மொழியின் இலக்கண வகைப்பாட்டிற்கும், சமுதாய அரசியலுக்கும் தொடர்புண்டு.
5. மூலமொழி என்பது பல்வேறு கிளைமொழிகளைக் கொண்ட ஓர் அடிப்படைக் கட்டமைப்பு மொழியாகும். மூலமொழிக்கும் கிளைமொழிக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். இதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது, ஒரு மனிதரினத்தில் பிறப்பெடுத்த ஒரு மொழி, அம்மனிதரினம் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லவே செய்யும். அங்கு மனிதர்கள் வாழ்வியலில் மாறுபாடுகளை ஏற்றது போலவே, மொழியும் வாழிடங்களுக்கேற்ப மாறுபாடுகளை ஏற்றுக் கொண்டது. இதனால் மொழிக் கட்டமைப்பினுள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் வெளிப் புலப்பாடாக அமைந்த நிலையில், அவை மூலமொழியிலிருந்து பிரிந்து கிளை மொழிகளாயின.
6. வாழ்வியல் வேறுபாடுகள் என்பதை விடவும், புதிய முறையில் பிளவுபடுத்தப்பட்ட தொகுப்பு வாழ்வியல் என்று கூடச் சொல்லலாம். இதுவே சரியானது. ஏனெனில் சமுதாயத்தின் தொகுப்பு ஒரு புறத்தில் தனது தேவைக்கான புதிய உற்பத்தியைத் தொடங்குகின்றது. மறு பக்கத்தில் பழையனவற்றை விரைவாகவோ அல்லது மெதுவாகவோ அழிக்கின்றது. அத்துடன் புதிய உற்பத்தி முறைகளுக்கேற்ப தொகுப்புக்குள்ளானவர்களைப் பிரிக்கவும் செய்கின்றது. இந்தப் பிரிப்பு மேலிருந்து திணிக்கப்படுவதுதான் வாழ்வியல் வேறுபாடுகளுக்கு வழி வகுக்கின்றது.
7. இங்குச் சமுதாயத்திலுள்ள வகுப்பு வேறுபாடுகளின் உறவுகளையும் அவற்றின் மேலாண்மையும் கவனத்திற்கொள்ள வேண்டும். உழைப்பு வேறுபாடுகளின் விளைவால் பிறந்து, பின்னர் சொத்துரிமையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட வாழ்வியல் வேறுபாடுகளே, வகுப்பு வேறுபாடுகளாகும். வகுப்பு வேறுபாடுகளின் மேலான ஒரு கருவியாக அதனை மாற்றியமைத்தது. மொழியை ஒழுங்கமைக்கும் இலக்கணம் போலவே, அரசைச் செயற்படுத்தும் சிந்தனையாக நடைமுறைச் செயல்களின் தொகுப்பாக அரசியல் எழுந்தது.

தொடரும்

8/1/11

9.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்


திராவிட – இந்தியர் வகைக் கலப்பினங்கள்

கடந்த கட்டுரையில் வெள்ளை அய்ரோப்பியப் பேரின வகையில் தொகுக்ப்பட்டுள்ள இனங்கள் எவையெவை எனக் குறிப்பிடும்போது அப்போரினத்தின் தெற்கு நடுநிலக் கடல் (1) கிளையின் பிரதிநிதிகளாகத் தெற்காசியாவில் வாழ்ந்து வரும். குறிப்பாக இந்தியாவில் வாழும் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தோம்.
நீக்ரோவியர்களுக்கும் ஆத்திரேலியர்களுக்குமான ஒற்றுமை பற்றிய பார்வையில் தெற்காசியப் பகுதி அவ்வினங்களின் தாயகப் பகுதியாக அமைந்ததிருந்து என்பதையும் கண்டோம். இவ்விரு நிலைகளிலிருந்து தற்போதைய சூழலில் இங்கு இரு இன வகைகளும் அதாவது வெள்ளை அய்ரோப்பிய வகையினமும் கறுமை நீக்ரோவிய கடலிய வகையினமும் இப்பகுதியில் கலந்திருப்பதை அறிந்து கொள்ளலாம். இத்துடன் கடலிய – ஆத்திரேலிய வகைக் கிளையினத்தில், அய்ரோப்பிய இனச்சாயல்கள் இருப்பதாகக் கூறும் மாந்தவியல் அறிஞர்களின் கருத்தையும் இணைத்துப் பார்த்தால் கலப்பு பற்றிய செய்தி உறுதிப்படுகிறது. ஆக, தெற்காசியப்பகுதியில் தற்போது கலப்பின வகைகள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் முடிவாகிறது.

பொதுவாக, வெள்ளை அய்ரோப்பிய இனவகையைக் கண்டறிதற்கான உடலினப் பொதுத் தன்மைகளாக மாந்தவியல் அறிஞர்கள் பின்வரும் கூறுகளை முன் வைத்துள்ளனர் (2)
வெளுத்த அல்லது மங்கிய வெளுப்பு நிறத்தில் தோல்,
முகத்தில் செந்நிற அல்லது இளஞ்சிப்பு நிறச் சாயல்,
பேரலை படிவ அல்லது நேரான கறுத்த அல்லது வெளிரியமுடி,
அடர்ந்தோ அல்லது நடுத்தரமாகவோ உடல் மயிர்ப் போர்வை.
நேரான அல்லது சற்றே சரிவான நெற்றி,
மடிப்ர் குறைந்த மேலிமையுடன் கூடிய தவி்ட்டு நிற விழிகள்,
குறுகலான முன்னே துருத்தியிருக்கும் மூக்கு,
மெல்லிய அல்லது நடுத்தர தடிப்புள்ள உதடுகள்,
நீள்வட்ட அல்லது குட்டை உருண்டை தலை.
நீக்ரோவிய கறுப்புப் பேரினத்திற்குரிய பொதுத்தன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முற்றிலும் மாறுபட்டவைகளாக இருக்கும். மேற்கூறிய பொதுத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, நாம் தெற்காசிய இந்தியர்களின் இனமாகிய தெற்கு – நடுநிரக்கடல் வகையினத்தைப் பார்தோமானால், அது அய்ரொப்பிய இனப் பொதுத்தன்மைகளுடன் நீக்ரோவிய இனச் சாயல்களையும் கொண்டுள்ளதாக விளங்கிவருகிறது.

இப்படியுள்ள இனச்சாயல்களின் இருப்பு குறித்துக் கூறவரும் மாந்தவியல் அறிஞர்கள் பண்டைய நீக்ரோவியர் இனத்திற்கும், அய்ரோப்பிய இனவகைகளுக்கும் இருந்த உறவுகள் பின்வருமாறு எடுத்துரைக்கின்றனர்.

”……… அரோப்பிய வகை, நீக்ரோவிய ஆத்திரேலிய வகை இனங்களின் ஒன்றுக்கொன்றான உறவுகளையும், அவை பிரிந்து சென்று வேறுபட்டு, நிற்கும் வழிகளையும் முதலில் சொல்வது அவசியம். ஒரு காலத்தில் இந்த இரண்டு பெரிய இனங்களும் ஒரே முழுமையாக இருந்தன (3) என்பது அய்யத்திற்கிடமில்லாத ஒன்று எனச் சொல்லலாம். ஏனெனில் நடுநிலக்கடல் (மத்திய தரைக்கடல்) பகுதியிலிருந்தும் (இத்தாலியிலுள்ள குழந்தைகள் குகையிலிருந்து). இத்தாலி – பிரான்சு எல்லைக்குச் சற்று துாரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டு நீக்ரோவிய வகை (கிரிமால்டி மாதிரி) எலும்புக்கூடுகள் இந்தத் தொன்மையறவுக்கு உறதியுரைப்பதாய் இருக்கின்றன. எனவே பிற்காலத்தில்தான் ஒரே முழுமையாக இருந்த தொடக்கக் குழுவினம் நீரோவிய வகை என்றும், அய்ரோப்பிய வகை என்றும் இரு பெரிய இனங்களாகப் பிரிந்தது (4) எனக் கூறலாம்.”

” இவ்வாறு பிரித்த இரு இனங்களும் கதிர் வீச்சு, காற்றின் ஈர்ப்பு முதலிய இயற்கை நிலைமைகளினால், முற்றிலும் வேறுபட்டுவிட்ட நிலப்பரப்பால், பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலம் விலகி வாழ நேர்ந்த காரணத்தால், தங்கள் இனத் தன்மைகளில் மாறுபாடுகளை ஏற்று முற்றிலும் வெவ்வேறான இன வகைகளாகி விட்டனர். இப்படி வேறு வேறான நிலைமைகளில் நிகழ்ந்த நீண்ட கால வளர்ச்சியின் விளைவாக, ஆழ்நிறம் பெற்றுவிட்ட சூடானிய நீக்ரோவியன், நிற அமைப்பு குன்றிய வடக்கு அல்லது கிழக்கு அய்ரோப்பியனிலிருந்து வெகுவாக வேறுபட்டு விடுகிறான்.

ஆனால் இவ்விரு இனங்களுக்கும் நடுவே, உறவுகளைக் காட்டவல்ல எத்தனையோ திரிவாக்கக் குழுக்கள் உள்ளன...........
நடுநிலக் கடல் (மத்திய தரைக்கடல்) பகுதி, வடகிழக்கு ஆப்பிரிக்கா, தென் இந்தியா போன்றவற்றில் இத்தகைய (அய்ரோப்பிய நீக்ரோ இணைப்பு) திரிவாக்கக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் யாவும் இவ்விரு பேரினங்களுக்கும் இடையிலுள்ள கடுமையான வேறுபாடுகளை மறக்கச் செய்து விடுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டடாக கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள, எத்தியோப்பிய கப்பினர் குழுக்களைக் கூறலாம். இந்தத் தொன்மையான திரிவாக்கக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் யாவும் இவ்விரு பேரினங்களுக்கும் இடையிலுள்ள கடுமையான வேறுபாடுகளை மறக்கச் செய்து விடுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள, எத்தியோப்பிய கலப்பினர் குழுக்களைக் கூறலாம். இந்தத் தொன்மையான திரிவாக்கக் குழுக்களின் நீக்ரோவிய இனப் பண்புகளும் பேரளவில் பின்னிப் பிணைந்துள்ளன. என்றாலும் இவற்றுள் நீக்ரோவிய இனச் சாயல்களே மேலாங்கியுள்ளன.

............(எத்தியோப்பியா அல்லாது) நீக்ரோவிய இனச்சாயல் மேலோங்கிய திரிவாக்கக் குழு வாழும் இன்னொரு பகுதி தெற்காசியாவில் இருக்கிறது. அப்பகுதி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியுள்ளது”. (5) (அழுத்தம் எம்முடையது)
இந்த மேற்கோளிலிருந்து இதனுள் சுட்டிக்காட்ப்படும் திரிவாக்க அடிப்படை கலப்பின வகை இனங்களே திராவிடரினமும், இந்தியரினமுமாகும். இதில் நமது தமிழரினத்தின் உடலின மரபினம் எனச் சொல்லப்படுவது திராவிடர் இனமேயாகும். இது நீக்ரோவியப் பேரினச் சாயல்களை அதிகம் வெளிப்படுத்தும் கிழக்கு ஆப்பிரிக்க எத்தியோப்பிய திரிவாக்க இனக் குழுவினைப் பெரிதும் ஒத்திருப்பதாலேயே, மாந்தவியல் அறிஞர்கள் நீக்ரோவிப் பேரின வகைகளுக்குள் அடக்கியுள்ளனர்.
இந்தியர் குறித்த அறிஞர் அம்பேத்கரின் கருத்து
இதுபோலவே, அயிரோப்பியப் பேரினச் சாயல்களை அதிகம் கொண்டுள்ள ஒரு திரிவாக்க இனக்குழு வகையினமே, இந்தியத் துணைக் கண்டத்தின் வ்டக்கில் வாழ்ந்து வரும் பல மக்களினங்களின் உடலின மரபினம் என்று கருதப்படும் இந்தியர் இனமுமாகும். இப்படி அய்ரோப்பிய வெள்ளைப் பேரினச் சாயல் மற்றும் சார்பு கொண்ட இந்திய உடலினர், இந்தியாவில் மட்டும் 55 கோடி எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர் என மாந்தவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் (6) இத்துடன் இந்தியாவின் மக்களாக வாழ்ந்து வருபவர்கள், ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், ஸ்கெதியன்கள் போன்ற பல்வேறு உடலினங்கள் கலந்த கலவையின மக்களாக இருக்கின்றனர் என்கிற அறிஞர் அம்பேத்கரின் கருத்தும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதாகும். (7)
இப்படி இந்தியத் துணைக்கண்டத்துச் சழுதாயம், வட புலத்தில் அய்ரோப்பிய வெள்ளை இனச் சார்புடனும், தென்புலத்தில் நீக்ரோவிய கடலிய கறுப்ப இனச் சார்புடனும் வாழும் பல்வகை மக்களினங்களைக் கொண்டு இருக்கின்றது.

இப்படி வேறுபட்ட நிற இனங்கள் – அதாவது இந்தியர் திராவிடர் இனங்கள் – இருப்பதாலேயே, இந்திய அரசியலில் நிறவெறிச் சார்புடைய ஆரிய – திராவிட இனக் கோட்பாடுகள் எதிரெதிர் கோட்பாடுகளாகத் தலை துக்கி நிற்கின்றன. இதற்குத் தொன்மைக் காலத்திலிருந்த இனக்குழுப் போராட்டங்கள் பற்றிய தெளிவு படுத்தப்படாத அல்லது செவி வழிச் செய்திகள், தவறான கருத்துருவாக்கங்கள் போன்றவை நிழலுருக்கள் போல இருந்து கொண்டு வலுப்படுத்தி வருகின்றன.
இதற்கு இந்தியச் சழுதாயத்திற்குரியதாக அமைந்து, மக்களின் வாழ்வியலை இயக்கி வந்துள்ள சாதியமைப்பு முறை (8) ஓர் அடித்தளமாக இருந்து கொண்டு பாதுகாப்பும் அளித்து வருகின்றது. இதன் காரணமாகவே தமிழகத்தின் தொல்குடி மக்களெனக் கருடப்படும் ஆதி-திராவிடர்கள் (9) வரலாறு நெடுகிலும் ஒருபுறத்தில் சாதியமைப்பாலும், மறுபுறத்தில் ஆரிய-திராவி்ட அரசியல்-பண்பாட்டுக் கொள்கைகளாலும் புறக்கணிக்கப்பட்டும் தொடர்ந்து தாக்கப்பட்டு அலைகழிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டும் வந்துள்ளனர்.
ஆக மேலே கண்ட கருத்துக்களின் அடிப்படையில், நாம் நமது தமிழரினம் குறித்துப் பின்வரும் முடிவுகளை வந்தடையலாம்

ஆக, மேலே கண்ட கருத்துக்களின் அடிப்படையில், நாம் நமது தமிழரினம் குறித்துப் பின்வரும் முடிவுகளை வந்தடையலாம்.
1. தமிழரினம் திராவிட உடலினத்தைச் சார்ந்ததெனக் கூறப்படினும், அது ஒரு தொன்மையான மனித முதாதையரின் தற்காலப் பிரதிநிதியினம் ஆகும். இதனுள் கலப்புகள் இருக்கும் போதிலும், இதன் பொதுத் தன்மைகள் அத்தொன்மையினத்தின் கூறுகளிலேயே தங்கியுள்ளன. எனவேதான் இது நீக்ரோவிய – கடலிய – ஆத்திரேலிய வகைப் பேரினத்துள் அடக்கப்பட்டுள்ளது.
2. தமிழரினத்தின் தொல் முதாதையர் இனம் பல்வேறு சிதைவுகளுக்கு ஆளாக நேர்ந்ததே அதனுள் ஏற்பட்டு இருக்கும் கலப்புகளுக்கு அடிப்படையாக இருக்கலாம். சொல்லப்படும் மனிதரின ழூதாதையரின் தொடக்க வாழிடம் அழிப்புக்குள்ளாக்ப்பட்டதும், அத்தொடக்கக் குழுவினம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்தது என்பதும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய செய்திகள் ஆகும்.
3. தமிழரினம் சொல்லப்படுகிற இந்தியர் இனத்துக்குள்ளடங்கி வரவில்லை என்பதும், அவ்விந்தியர் இந்தியத் துணைக் கண்டத்தில் வடபுலத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தமிழரினம் ஒரு தனியினம் என அடையாளங் காணப்படுவதற்குரிய செய்தியாகும்.
4. தமிழரினத்தைப் பொதுவான முறையில்ல பிற இனங்களிலிருந்து வேறுபடுத்துகிற கூறாக, அது பேசி வரும் மொழி அமைந்துள்ள நிலையில், அது எவ்வகையில் திராவி்டர் எனும் இன வகைப்பாட்டுக்குள் வருகின்றது என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும். ஏனெனில் திராவிடம் என்பது நிற வகையையோ அல்லது வாழிடப் பகுதிகளையே சுட்டுவதாக அமைந்திருக்கவில்லை. மேலும் அது எந்த உயிரினகூறையும் கூட உள்ளடக்கி இருக்கவில்லை. எனவே திராவிட பெயரிடல் பற்றிய ஆய்வு அவசியமாகும்.


1.இது மற்றொரு வகையில் இந்திய – நடுநிலக் (மத்திய தரைக் ) கடல் வகைக்கிளை என்றே குறிப்பி்டப்படுகிறது.
2. மிகயீல் நெசுதுர்க் “மனித இனங்கள்“ எனும் நூலில்.
3. இந்தச் செய்தி நினைவிற்குரியதாகும்.ஏனெனில் நீக்ரோவியப் பேரினத்தின் தலைமைத் தொன்மைக்குடி அல்லது முதல் மூதாதையர் பற்றிய மாந்தவியில் ஆய்வில் இது இணைத்துச் சிந்திக்கத்தக்க அளவுக்கு முகாமைத்தன்மை கொண்டதாகும்.
4. இங்கு நாம் மார்க்சியப் பேரறிஞர் எங்கெலசு குறிப்பிடும் மூழ்கி கண்டம் பற்றிய செய்தியை இணைத்துச் சிந்திக்கலாம். அத்துடன் நீக்ரோவியப் பேரினம் கிளைவகைகளாகப் பிரிந்து போது மேற்குக்கிளை, கிழக்குக்கிளை என இரண்டாகப் பிரிந்ததோடு மட்டுமின்றி, அது ஒரு வடக்கிளையினையும் கொண்டிருந்தது என்ற முடிவுக்கும் வரலாம். ஏனெனில் இங்குக் குறிப்பிடப்படுகிற தொடக்கக் குழுவினம் நீக்ரோவியப் பேரினத்தில் தலைமைத் தொன்மைக்குடி அல்லது மனிதான முதல் மூதாதையர் பற்றிய ஆய்வில் இது முகாமைத் தன்மையுடைதாகும்.
5. மாந்தவியல் அறிஞர் மிமயீல் நெகலுர்க்இ “மனித இனங்கள்“ எனும் நூலில்.
6. மாந்தவியல் அறிஞர் மிகயீல் நெகலுர்க் “மனித இனங்கள்“ எனும் நூலில்.
7. அறிஞர் அம்பேத்கர், “இந்தியாவில் சாதிகளின் தோற்றம் மற்றும் அமைப்பியக்கம்“ எனும் நூலில்.
8. வேறெங்கும் இல்லாத, ஆனால் இந்தியாவிற்கேயுரிய ஒரு வாழ்வியல் சமுதாய அமைப்பு முறையாகச் சாதியமைப்பு இருந்து வருகின்றது. திராவிட இனச் சார்பு இனங்களிலும், அய்ரோப்பிய இனச் சார்பு இனங்களிலும் நடந்துள்ள வாழ்வியல் ஆய்வுகள் அங்கெல்லாம் சாதிகள் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், இதற்கு முரணான வகையில், சாதியமைப்பினை இந்தியாவிற்குள் உட்புகுந்த வேற்றினத்தவர்களே உருவாக்கினர் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்து முமுமையான நம்பிக்கைக்குரியதாக இல்லை.
9. இந்த ஆதி – திராவிடர்கள் எனப்படுவோரே சாதியமைப்பில் மிகவும் கீழானவர்களாகவும், தீண்டப்படக் கூடாதவர்களாகவும் பிரித்து வைக்கப்பட்டு நெடுங்காலமாகப் பல்வேறு கொடுமைகளுக்கு இலக்காகி வந்துள்ளனர். இதற்கான வரலாற்றுக் காரணங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

தொடரும்