20/1/11

10. தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்


தமிழ் < தமிழரினம் < தமிழகம்

தமிழர் ஆரியரா திராவிடரா!

உலகத்தின் பல நாடுகளில் விரவியும், தமிழகம், இலங்கை போன்ற நாடுகளில் செறிவாகவும் வாழ்ந்து மொழியால் தமிழரினம் என அடையாப்படுத்தப்படும் தமிழரினம், ஓர் உடலின வகையினமாகிய திராவி்டர் இனமென்பது மாந்தவியல் அறிஞர்களின் கருத்து. ஆனால் மொழியால் தமிழர்கள் என்றறியப்படும் இவ்வினம் எவ்வகையில் திராவிடர் என்ற பெயர்ச்சுட்டைக் கொண்ட இன வகைக்குள் வகைப்படுத்தப்பட்டது என அவர்கள் விளக்கவில்லை. எனவே திராவிடர் இனம் என்பதற்கான பெயர்க் காரணம் குறித்து அறிய வேண்டியது நமக்கு அவசியமாகின்றது.
வரலாற்றில் மூலமொழியின் சமுதாய வளர்ச்சி
பொதுவாக, ஒரு மனிதரினம் அல்லது மக்களினம் வரலாற்றுப் போக்கில் தன்னையொரு மொழி பேசும் மொழியினமாக உருவாக்கிக் கொள்வதற்கு, அது பல கட்டங்களைக் கடக்கவும், அது வேண்டியிருக்கின்றது. இப்போக்கில் அம்மக்களினம் தனக்கான மொழியை உருவாக்கிக் கொள்வதில், தன்னையறியாமலேயே, ஆனால் திட்டமிட்ட முறையில் இரு வழிகளில் அது உழைக்க வேண்டியது அவசியம். ஒரு புறம் அது தானொரு மக்கட் சமுதாயமாகத் தொடர்ந்து நீடிப்பதற்கான பணிகளில் – அதற்கான உற்பத்தி உழைப்பில் ஈடுபட வேண்டும். மறுபுறம் சமுதாய உறுப்பினர்களை ஒருங்கிணைக்கவல்ல ஓசையொலிகளை விலங்குகளிடமிருந்து தனித்துப் பிரித்து, பின் அவற்றைச் சீர்படுத்திப் பேச்சுக்குரிய ஒலிகளாக மாற்றியமைக்க வேண்டும். இப்போக்கிற்கு உட்படவில்லையெனில் பின்பு மொழி என்பது கிடையாது.
முதலில் ஓசைச்சீருடைய ஒலிகள், பின் ஒலிகளின் கோர்வையாகப் பிறந்த பேச்சு (1) , பேச்சின் தொகுப்பாக உருவெடுத்த வாய்மொழி, வாய்மொழி மூலமாக உள்ளொடுங்கி நின்ற சிந்தனையின் வெளிப்பாடு (2). இவற்றோடு பல்வேறு வகைகளில், உழைப்பின் போக்கில் கையாளப்பட்ட கீறல்கள், கீறல்களைத் தனித்துப் பிரித்துப் பெறப்பட்ட செப்பமற்ற எழுத்துக்கள், செப்பமற்ற எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி உருவாக்கப்பட்ட தனிக்குறிப்பான் எழுத்துக்களின் கோர்வையால் பிறந்த வரியெழுத்து (3), வரியெழுத்தின் பதிவால் தோன்றும் இலக்கியம், இலக்கியத்தைச் செம்மைப்படுத்த எழும் இலக்கணம் (4) இத்தனை வளர்ச்சிகளையும் எட்டித்தான் ஒரு மூலமொழி (5) தோற்றம் கொள்கிறது. இத்தனை வளர்ச்சிகளையும் எட்டுவதற்கு மனிதரினம் எத்தனை நூறு அல்லது பத்தாயிரம் கணக்கிலான ஆண்டுகளைக் கடந்து வர வேண்டியிருந்தது தெரியுமா? ஆம், பல்வேறு போராட்டங்களினூடாகத்தான், பல காலங்களைச் செலவழித்து தான் மனிதரினம் தனக்கான மூலமொழியை உருவாக்கிக் கொண்டது.

வாழ்வியலில் அரசியலின் எழுச்சி
இப்படி ஒரு மூலமொழியின் உருவாக்கத்தில் அமைந்த ஓசைச் சீருடை ஒலிகளின் வகைப்பாடு, ஒலிகளின் கோர்வையால் பிறந்த பேச்சு, பேச்சின் தொடர் போக்கில் வளமடைந்த உணர்வெழுச்சிகளின் – சிந்தனைகளின் வெளிப்பாடு, கீறல்களை ஒழுங்குபடுத்திப் பெறப்பட்ட வரியெழுத்தின் தோற்றம், வரியெழுத்துகளின் வளர்ச்சியால் உடன் விளைவாக எழுந்த இலக்கியம், இலக்கியத்தின் மூலம் பிறந்து மொழியையே மறுவார்ப்பு செய்யப் புகுந்த இலக்கணம் – இப்படி தோற்றம் கொண்ட ஒவ்வொன்றும் தங்களுடைய வளர்ச்சிப் போக்கில், மனிதரினத்தின் சமுதாய வளர்ச்சி மற்றும் உறவுகளின் மீது புரட்சிமய மாறுதல்களை ஏற்படுத்தின. இதனால் விளைந்த விளைவுகளென்ன தெரியுமா?
மனிதரினம் தனது வாழ்வியல் செயற்பாடுகளோடு, தன்னையறியாமலேயே உருவாக்கிக் கொண்ட மூலமொழிக்கான போராட்டத்தில், படிப்படியாக விலங்குணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு – வாழ்வியலின் மீதான புரிதல் உணர்வுடன் – தன்னைப் புதியதொரு சமுதாயமாக மாற்றியமைத்துக் கொண்டது. வேறு வழியில் கூறுவோமென்ல், ஒரு புறம் தன்னையறியாமலேயே சமுதாய உணர்வினூடாகத் தனக்குள் ஒரு வலிமையான ஒருங்கிணைப்பையும், மறுபுறம் தனக்கான ஒரு வளமான மொழியையும் பெற்றுக்கொண்டது. அம் மொழியின் பின்புலத்திலேயே தன்னைச் சமுதாயமாகக் கட்டமைத்தும் கொண்டது.
இலக்கியத் திறனும், இலக்கண நுண்மையும் கொண்ட ஒரு வளமான மூல மொழியின் பிறப்பு, ஒரு புறம் – மலைக்கத்தக்க வகையில் என்று கூடச் சொல்லலாம் – மனிதக் கூட்டங்களை, அவர்களின் உணர்வுகளை நெருக்கமான வகையில் சமுதாயமாகப் பிணைத்ததென்றால், மறுபுறத்தில் அந்தச் சமுதாயத்தையே பல்வகை வகைப்பாடுகளுக்கும் உள்ளாக்கியது. இதன் காரணமாக நெருக்கமான முறையில் சமுதாயமாகப் பிணைக்கப்பட்ட மனிதரினம், அதனுடைய மறுபக்கத்தில் பல்வேறு வாழ்வியல் வேறுபாடுகளுடன் தொகுக்கப்பட்டதாகவும் அமைந்தது (6). விலங்கின வாழ்வியலின் அனைத்துப் பொதுப் பண்புகளிலிருந்து விடுபட்டு விட்ட புதியதொரு வாழ்வியலான மக்களின் வாழ்வியல் தொடங்கி வைக்கப்பட்டது.
இது எப்படி அமைந்ததெனில், இலக்கியத்திலிருந்து பிறந்த இலக்கணம் எவ்வாறு மூலமொழியின் பல்வகைக் கூறுகளையும் வகைப்படுத்தத் தொடங்கி, பின்னர் அம்மொழியையே ஒரு கட்டமைப்புக்குட்படுத்தி செம்மைப்படுத்தியதோ அப்படியே! இதனால் மொழியின் இலக்கண வழிப்பட்ட செம்மைப்பாடு, மறுவகையில் தன் தாக்கத்தைச் சமுதாயத்தை வகைப்படுத்துவதிலும் செலுத்தியது எனலாம். இப்போக்கிலேயே இலக்கியத்தின் மூலம் மொழிக்கு இலக்கணம் பிறந்தது போல, சமுதாயத் தொகுப்பின் மூலம் மனிதரினத்துக்கு அரசியல் பிறந்தது. (7)
அரசியல், சமுதாயத்தை மொழியின் மூலம் ஆளுமைச் செய்யத் தொடங்கியது. இதனால் அரசியலின் தலைமை ஆளுநனாக மொழியே மாற்றமடைந்தது. சமுதாயத்தின் அனைத்து வாழ்வியல் செயற்பாடுகளும் மொழியால், வழிகாட்டப்படுவதாக மாற்றப்பட்டன. இப்போக்கின் இறுதியில் குறிப்பான அம்மனிதரினம், தான் உருவாக்கிக் கொண்ட மூல மொழியினால் அடையாளப்படுத்தப்படும் மக்களினமாக உருப்பெற்றது.

குறிப்பு
1. மனிதரினத்தினை விலங்கினத்திலிருந்து பிரித்துத் துண்டுபடுத்திய வாழ்வியல் போக்கு, சமுதாயத்திற்கான வளர்ச்சியில் முதன்முதலாகப் பேச்சின் தோற்றத்தோடுதான் தொடங்கியது. ஏனெனில் பேச்சு நடைமுறையானதற்குப் பின்புதான் மனிதன் தன்னைத் தெளிவான முறையில் இனங்காணத் தொடங்கினான். விழிப்புணர்வு கொண்ட முறையில் தன்னைத் தனக்குரியவர்களோடு முழுமையாக இணைத்துக் கொள்ளவும், அவ்விணைப்பு அறுபடாமால் இருக்கச் சிந்திக்கவும் அதனைச் செயற்படுத்தவும் தொடங்கினான்.
2. உள்ளபடியே, ஒரு மொழி, அது மொழியென அறியத்தக்க வகையில் இந்தச் சிந்தனையின் வெளிப்பாடோடுதான் பிரிகின்றது. தெளிவான முறையில் விலங்கினத்தையும் மனிதரினத்தையும் வேறுபடுத்தும் மையக்கூறும் இதிலிருந்துதான் தொடங்குகின்றது மொழியும், மொழியின் வளர்ச்சிக்கான சிந்தனையுமின்றி மனிதன் விலங்கினத்திலிருந்து வேறுபட முடியாது.
3. வரியெழுத்தின் தோற்றத்தோடுதான், மொழி தன்னை முழுமையாக மற்றவற்றுக்குள் அதாவது சமுதாயச் செயற்பாடுகளுக்குள் இணைத்துக் கொள்கிறது. அப்போக்கில் அது அவற்றை ஆளுமை செய்யவும் தொடங்கி விடுகின்றது. இதனால் வரியெழுத்தின் தோற்றம், மொழியைக் கட்டமைப்பதற்கான வேலைகளையும் தொடங்கி விடுகின்றது. இறுதியில் அதுவே சமுதாயத்தினை அடையாளப்படுத்தும் கருவியாக மாற்றம் கொள்கி்ன்றது.
4. ஒரு மொழி தனக்கென ஒரு சமுதாய அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை வேறு வழியில் வெளிப்படுத்துவதுதான் இலக்கணமாகும். இதனாலேயே இலக்கணம் மொழியை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அதனைக் கட்டமைக்கின்றது. சமுதாயம் தனது இருப்பை அரசியலால் நெறிப்படுத்துகிறது. மொழி தனது சமுதாய இருப்பை இலக்கணத்தால் நிலைநிறுத்துகிறது. இதனால் மொழியின் இலக்கண வகைப்பாட்டிற்கும், சமுதாய அரசியலுக்கும் தொடர்புண்டு.
5. மூலமொழி என்பது பல்வேறு கிளைமொழிகளைக் கொண்ட ஓர் அடிப்படைக் கட்டமைப்பு மொழியாகும். மூலமொழிக்கும் கிளைமொழிக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். இதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது, ஒரு மனிதரினத்தில் பிறப்பெடுத்த ஒரு மொழி, அம்மனிதரினம் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லவே செய்யும். அங்கு மனிதர்கள் வாழ்வியலில் மாறுபாடுகளை ஏற்றது போலவே, மொழியும் வாழிடங்களுக்கேற்ப மாறுபாடுகளை ஏற்றுக் கொண்டது. இதனால் மொழிக் கட்டமைப்பினுள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் வெளிப் புலப்பாடாக அமைந்த நிலையில், அவை மூலமொழியிலிருந்து பிரிந்து கிளை மொழிகளாயின.
6. வாழ்வியல் வேறுபாடுகள் என்பதை விடவும், புதிய முறையில் பிளவுபடுத்தப்பட்ட தொகுப்பு வாழ்வியல் என்று கூடச் சொல்லலாம். இதுவே சரியானது. ஏனெனில் சமுதாயத்தின் தொகுப்பு ஒரு புறத்தில் தனது தேவைக்கான புதிய உற்பத்தியைத் தொடங்குகின்றது. மறு பக்கத்தில் பழையனவற்றை விரைவாகவோ அல்லது மெதுவாகவோ அழிக்கின்றது. அத்துடன் புதிய உற்பத்தி முறைகளுக்கேற்ப தொகுப்புக்குள்ளானவர்களைப் பிரிக்கவும் செய்கின்றது. இந்தப் பிரிப்பு மேலிருந்து திணிக்கப்படுவதுதான் வாழ்வியல் வேறுபாடுகளுக்கு வழி வகுக்கின்றது.
7. இங்குச் சமுதாயத்திலுள்ள வகுப்பு வேறுபாடுகளின் உறவுகளையும் அவற்றின் மேலாண்மையும் கவனத்திற்கொள்ள வேண்டும். உழைப்பு வேறுபாடுகளின் விளைவால் பிறந்து, பின்னர் சொத்துரிமையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட வாழ்வியல் வேறுபாடுகளே, வகுப்பு வேறுபாடுகளாகும். வகுப்பு வேறுபாடுகளின் மேலான ஒரு கருவியாக அதனை மாற்றியமைத்தது. மொழியை ஒழுங்கமைக்கும் இலக்கணம் போலவே, அரசைச் செயற்படுத்தும் சிந்தனையாக நடைமுறைச் செயல்களின் தொகுப்பாக அரசியல் எழுந்தது.

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக