8/2/13

பேச வேண்டியதை இயக்கங்கள் பேசியிருந்தால் தோழர் மோகன்ராசுவை இழந்திருக்க மாட்டோம்!


தோழர். மோகன்ராசு.... ‘தோழர்...’ உலகையே உறவால் கட்டிப்போடும் இந்த ஒற்றைச் சொல்லை இவர் உச்சரிக்க கேட்டதுண்டா? கேட்பவர் உள்ளம் பாகாய் உருகும். நேர் நின்று இவரோடு பேச வாய்த்ததுண்டா? இவர் உச்சரிப்பில் இயல்பாய் இருக்கும் மழலைத்தனத்தில் மனம் லயிக்கும். பிடித்தவரோடு பேசத் தொடங்கினால் கையைப் பிடித்துக் கொள்வார். mohanrasu_370 இவரின் பிள்ளைப் பருவம் தொட்டு உறவோடிருக்கும் தோழர்.தமிழழகனும் இருவரும் கூடிவிட்டால் கூட இருப்பவர்களின் வயிறுகளை புண்ணாக்கி விடுவார்கள். வெறும் பேச்சினில் மட்டுமல்ல. தேவையுணர்ந்து இயன்றதை செய்து பிறரின் வாட்டம் போக்குவதில் உண்மையிலேயே இவர் தோழர். எல்லாப் பண்புகளும் கூடிப்பெற்ற உன்னத மனிதர் யார்? என சார்லி சாப்பளியிடம் கேட்டனர். ஒரு நொடியும் தாமதிக்காது அந்த உன்னத கலைஞன் சொன்னான் -‘கம்யூனிஸ்டுகள்”, கம்யூனிஸ்டுகள் மட்டுமே எல்லாவற்றையும் உண்மையாக நேசிக்கிறார்கள், அதற்காக உயிரையும் இழக்கிறார்கள். தோழர்.மோகன்ராசு தனது போராட்ட குணத்தினால் இயல்பாக கம்யூனிஸ்ட். அவர் தனது சக தொழிலாளர்களை இதயத்தால் நேசித்தார். அதற்காக தனது தோழர்களுடன் இணைந்து போராடினார்; தொழிற்சங்கம் கட்டினார். தொழிலாளர் ஒற்றுமைக்குத் தடையாக இருந்த தீய சக்திகளை வேரோடு சாய்த்தார். தொழிலாளர்கள் நலன் காக்க துணை நின்ற இயக்கம், தொழிற்சங்கம் அமைக்க தடை சொன்னபோது தயக்கமின்றி இயக்கத்தை மறுத்தார். மக்களை காக்கவே இயக்கங்கள் வேண்டும், இயக்கங்களுக்காக மக்களை கைவிட முடியாது என்பது தோழரின் நிலைப்பாடு. தேவை என வரும்போது மீட்பர்களுக்காக காத்திருக்காமல் தானே பொறுப்பெடுத்து கொள்ளும் துணிச்சலின் பெயர்தான் ‘மோகன்ராசு’. இவ்வாறுதான் அவர் தொழிற்சங்கத்துக்கும் தலைமையேற்றார்; தமிழ்த் தேச விடுதலை இயக்கம் பிளவுப்பட்டபோது இயக்கத்துக்கும் தலைமையேற்றார். தலைமைக்குத் தேவையான முக்கியமான ஒரு பண்பு தோழரிடம் நிரம்பி கிடந்தது. அதுதான் நோக்கத்துக்காக இருப்பவர்களை அரவணைத்து ஒருங்கிணைப்பது. இப்பண்புதான் ஈரோட்டில் முற்போக்கு இயக்கங்களின் கூட்டு செயல்பாட்டை உறுதியாக்கியது. தமிழகத்தில் ஈரோடும், கோவையும் உணர்வாளர்களை ஒருங்கிணைப்பதில் முன்னுதாரணம் என்றால், ஈரோட்டில் அதை மேலும், மேலும் வலுவாக்கியதில் தோழர் முக்கியமானவர். ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் தோழரிடம் நல்ல பண்புண்டு. நாலு பேர் பேசுகிற இடத்தில் மற்றவர்களை முதலில் பேசவிட்டு அனைவரது கருத்துகளையும் வெட்டி, ஒட்டி தனது கருத்தாக வெளிப்படுத்தும் நாட்டாமைகள் இருக்கும் காலமிது. இவர் இப்படி சொன்னார், இது சரி, இது தவறு என சக தோழர்களை அங்கீகரிக்கும் பண்பு பெரும்பான்மையோரிடம் இல்லை. தோழர்.மோகன்ராசு இதற்கு மாறானவர். இந்தத் தோழர் சொன்னது சரியெனப்படுகிறது, இதன்படி செயல்பட்டால் சரியாக இருக்கும் என சக தோழர்களை அங்கீகரிப்பார். கூட்டுச் செயல்பாட்டை இதுவே ஊக்குவித்தது. இதனால் ஈழ ஆதரவு, நதி நீர் சிக்கல், அணுஉலை எதிர்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு, மது ஒழிப்பு என தமிழகத்தின் வாழ்வாதாரப் போராட்டங்கள் அனைத்திலும் ஈரோடு முன்னிலை வகித்தது. மட்டுமல்ல, அமைப்புசாராத் தொழிலாளர்களை அமைப்பாக்கியதோடு, அவர்களுக்கு பிற தொழிலாளர்களுக்கு நிகரான உரிமைகளையும், ஊதியங்களையும் பெற்றுத் தந்ததில் ஈரோடு முன்னுதாரணம். அதற்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும், தமிழகத் தொழிலாளர் முன்னணியும், தோழர்.மோகன்ராசுவும் முழுமுதற் காரணம். தமிழ்ச் சமூகத்தின் அனைத்து சிக்கல்களிலும் தலையீடு செய்வதன் மூலம் உண்மையிலேயே தோழர் தலைவராக இருந்தார். பிற இயக்கங்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இப்படி நமக்கு உறுதுணையாக இருந்த தோழரைத்தான் 26.1.2013 மாலையில் வெட்டி வீழ்த்தியது ஒரு துரோகக் கூட்டம். தோழர் வீழ்த்தப்படுவதற்காக காத்திருந்ததைப் போலவே ஈரோட்டில் உடனடியாக எழுந்ததுள்ளன சில சமூக விரோத சக்திகள். ஈரோடு சமூக உணர்வாளர்களையும், இயக்கங்களையும் பெற்றுள்ளதைப் போலவே சமூக விரோதிகளையும் அதிகமாக கொண்டுள்ள பகுதி. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் ஏமாற்றுத் தொழில்கள் அனைத்தும் ஈரோட்டிலேயே முளை விட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது. சங்கிலித் தொடர் வணிகமான ஆம்வே முதல் ஈமு கோழி வளர்ப்புத் திட்டமென மோசடிகளை வளர்த்தெடுப்பதில் ஈரோட்டுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த மோசடி பின்னணியிலே ஊறிக் கிடக்கும் பண முதலைகள், அவர்களின் அடியாள் ரவுடிகள், இவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள், இவர்களையெல்லாம் பாதுகாக்கும் காவல்துறைகள் என சமூக விரோத சக்திகள் நிறைந்த இம் மண்ணில் இவர்களை எல்லாம் எதிர்கொண்டே தோழர்.மோகன்ராசுவின் இயக்கப்பணிகள் இருந்தன. கூடுதலாக தொழிற்சங்கம் என்ற பேரில் பிழைப்பு நடத்தும் கும்பலுக்கு எதிராகவும், இனத் துரோகிகளான வெளிநாட்டு கைக்கூலிகள் காங்கிரசாருக்கு எதிராகவும் இருந்தது தோழரின் அமைப்பு செயல்பாடுகள். துணிச்சலான தோழரின் அமைப்பு செயல்பாடுகளால் எத்தனை வர்க்க எதிரிகளும், அதிகார வர்க்கமும் அணி சேர்ந்திருப்பர் என்பதை அவரும் உணரவில்லை, அவரது இயக்கமும் உணரவில்லை, தோழமை இயக்கங்களும் உணர்த்தவில்லை. உணர்ந்திருந்தால் ஆளும்வர்க்க கூலிப்படைகளை எதிர்கொள்ள பாதுகாப்பு வளையங்களோடு தோழர் இருந்திருப்பார். அவர் வெட்டப்பட்ட படிப்பகத்தில் தற்காப்புக்கான தடிகளாவது இருந்திருக்கும். ஒரு தொழிற்சாலை நிர்வாகத்தை எதிர்கொள்ளவே ஆயுதத்தோடு களமாடிய தோழர், பல எதிரிகளை எதிர்கொள்ளும்நிலையில் வெறுங்கையோடு இருந்து வந்தது பெரும் வியப்புக்குரியதுதான். ஆனால் தவறு தோழர்.மோகன்ராசுவை மட்டும் சார்ந்ததல்ல. இன்றைக்கு பெரும்பான்மையான இயக்கங்களின் சொத்தையான அரசியல் நிலைப்பாடு ஒன்று இதற்கு முக்கியக் காரணம். அதுதான் அரசியல் போராட்டம் முதலில், ஆயுதப்போராட்டம் பிறகு (‚) எனும் சுகபோக நிலைப்பாடாகும். ஒரு சமூக இயக்கத்தின் செயல்பாடும், போராட்டமும் எப்போதும் இரண்டு முகாம்களோடு இருக்கிறது. ஒன்று மக்களோடு, இன்னொன்று ஆளும் வர்க்கத்தோடு. இதில் நமது அரசியல் போராட்டம் என்பது எப்போதும் மக்களோடே. மக்களை அணிதிரட்டவே. ஆளும் வர்க்கத்தோடு எப்போதுமே போர்தான். அது நமது பலம் மற்றும் பலவீனத்திலிருந்து தற்காப்பு, பின்வாங்கல், தாக்குதல் என இருக்கும். இவையனைத்தும் ஆயுதப் போராட்டத்தின் பகுதிகளே. ஆகவே தற்காப்பு நடவடிக்கைகள் கூட இல்லாமல் சமூக செயல்பாடு எதுவும் இல்லை, அரசியல் போராட்டமும் இல்லை. இங்கே அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம் என்பது மோசடியாகும். இத்தகைய மோசடியான அரசியல் நிலைப்பாடுகளே தோழர்.மோகன்ராசுவைப் போன்ற அற்புதமான தோழர்களை நிராயுதப்பாணிகளாக அலையவிட்டது. எதிரிகள் எளிதில் தோழர்களை வீழ்த்துகின்றனர். தோழர்களோடு சிறிதளவு மனக்கசப்பு உடையவர்களைக் கூட கூர்தீட்டி விட்டு கொலை செய்ய வைக்கின்றனர்; தோழர்களை வீழ்த்தி விட்டு ஆட்டம் போடுகிறனர். இப்படித்தான் தோழர்.மோகன்ராசு வீழ்ந்ததும் எதிரிகள் எழுகின்றனர். இதை இதுவரை எந்த இயக்கங்களும் ஆழ உணர்ந்ததாக இல்லை. தோழர்.மோகன்ராசுவின் இயக்கமும் உணர்ந்திருக்கவில்லை. கூட்டு இயக்கம், கூட்டு செயல்பாடு என தோழமை உறவுகள் பலமாகி உள்ள நிலையிலும் தற்காப்பு குறித்து யாரும் கலந்தாய்வு செய்யவில்லை. ஈரோட்டில் கூட்டு நடவடிக்கையில் தோழர் முன்னிறுத்தப்பட்ட போதிலும், அந்நடவடிக்கையில சில புரட்சிகர இயக்கங்கள் உள்ள நிலையிலும் கூட இதுகுறித்து எந்த கருத்துப் பரிமாற்றமும் நடக்கவில்லை. தோழரின் பணிகள் குறித்து சிலாகிப்பவர்கள் கூட, அப்பணிகளால் இயல்பாக ஏற்படும் எதிரிகளின் கூட்டம் குறித்து சிந்திக்கவே இல்லை. ஆக இது குறித்து யாரும் யாரோடும் பேச வில்லை. தோழர். மோகன்ராசுவின் படுகொலைக்குப் பின்பு கூட எந்த ஒரு இயக்கத்திலும் இது குறித்து விவாதமில்லை. முன்னமே பேசியிருந்தால் மோகன்ராசுவையும், ஒசூர் தோழர்.பழனியையும் மற்றும் பலரையும் பாதுகாத்திருக்கலாம். இனியும் பேசவில்லையென்றால் பல பேரை இழக்க நேரும். எனவே இனியேனும் பேச வேண்டியதை இயக்கங்கள் பேசட்டும். - குணா, தேசிய முன்னணி இதழ் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக