8/6/10

7.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்

தமிழரினம் உலகில் எவ்வகையினம்.

உலகம் தனையும், அதனில் வாழும் மனிதரினத்தையும், அதன் பல்வேறு மக்களினங்களையும் பற்றிப் பார்க்கும்போது, நமது தமிழரினம் அம் மக்களினங்களுள் ஒன்றாகவும் ஒரு தனி இனமாகவும் வாழ்ந்து வருவதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நமது தமிழரினம் வெளிப்படையான முறையில் பிற மக்களினங்களில் இருந்து பேசும் மொழி, செறிந்து வாழும் நிலப்பரப்பு, கொண்டுள்ள வாழ்வியல் ஒருங்கிணைப்பு, துல்லியப்படுத்தும் பண்பாட்டு வேறுபாடுகள், ஆகியவற்றின் காரணமாகவே வேறுபடவும், ஒரு தனி இனமாக அடையாளம் காணப்படவும் வல்லதாக இருந்து வருகிறது. அவ்வாறு வேறுபடும் நிலையில், அது மொழியின் அடிப்படையிலேயே பெயரிடப்பட்டும் அழைக்கப்படுகிறது.

இப்படி, தனித்துத் தெரியப்படும் நமது தமிழரினம் இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்தாலும், இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியான தமிழகத்திலும், அதற்கு தென்கிழக்கே உள்ள இலங்கைத் தீவிலும் அதிகளவில் செறிந்து வாழ்ந்து வருகின்றது. மேலும், செறிவடர்த்தி குறைவான வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றிலும் வாழ்ந்து வருகின்றது.

இப்படி, செறிவடர்த்தி கொண்டு உலகில் சில பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழரினம், மனிதப் பொது வகைப்பாட்டில் அடிப்படையில், கருமை நிற நீக்ரோவியவர் பேரினத்தையும், அதனுள் அடங்கிய கடலிய – ஆத்திரேலிய வகையினத்தையும், அதனுள் ஓர் உடலின மரபினமாகக் கருதப்படும் திராவிடர்(1) இன வகையைச் சார்ந்ததாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வகைப்படுத்துதலை தெளிவுற தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கடலிய – ஆத்திரேலிய வகை மனிதரினம் குறித்து விரிவான பார்வையை பெறுதல் நமக்கு அவசியமானதாகும்.

பொதுவான முறையில் நீக்ரோவியர் பேரினத்தைக் கண்டறிய தக்க பொது உடலமைப்புக் குறியீடுகளாக மாந்தவியல் அறிஞர்கள் சுட்டுகின்ற குறியீடுகள் பின்வருபவையே.(2)

கறுமை மற்றும் கறுமை சார்ந்த நிறம்.
சற்றே தாடைப்புறம் அகன்ற உருண்டையான நீள்வட்டத் தலை,
அடர்த்தியான சுருள் அல்லது சிற்றலைப் படிவ தலைமுடி,
நேரான நெற்றி, தெளிவான நெற்றி மேடுகள் குறைந்த நீளம் கொண்ட சரிவான உப்பலான மூக்கு,
உட்குழிகள் கொண்ட கறுமை நிறக் கண்கள்,
கறுமை படர்ந்த தடித்த உதடுகள்,
உடலுடன் ஒப்பிடும்போது சற்றே நீளமான கைகளும், கால்களும்

இப்பொதுக் குறியீடுகள் இப்பேரினத்தைக் கண்டு அறிவதற்காகத் துணைக்குக் கொள்ளப்படும் அடிப்படைக் குறியீடுகள் தானாகும். இவை பொதுக் குறியீடுகள் என்பதனால் ஒரு கிளை வகையினத்தைக் கண்டறிய முற்படும்போது, எல்லாக் குறியீடுகளுமே அப்படியே பொருந்தி வரவேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் கிளை வகையினத்தில் பொதுக் கூறுகளில் சிலக் கூறுகள் மேலோங்கியும், சிலக் கூறுகள் உள்ளடங்கியும் இருக்கலாம். ஓரிரு கூறுகள் குறிக்கப்பட்டுள்ள பொதுக்கூறுகளுக்கு மாறுபட்டவையாகக் கூட இருக்கலாம். குறியீடுகளின் வேறுபாடு எளிதில் புலப்படாததாகவும், ஊகித்தறிய தக்கதாகவும் கூட இருக்கலாம். எனவே ஒரு கிளை வகையினத்தைக் கண்டறிவதில் பொதுக் கூறுகளில் முதன்மையாக அமையும் சில கூறுகள் மட்டுமே மேலோங்கி நிற்கின்றன. அவ்வாறு நிற்பவைகள் பொதுக் குறியீடுகளுடன் இணக்கம் கொண்டுள்ளனவா என்பதை அறிதலே போதுமானதாகும்.



(.1) தமிழர் மக்களினத்திற்குத் தமிழர் திராவிடர் போன்ற பெயர் வைப்புகள் எவ்வாறு நடந்தேறின என்பது குறித்து மொழியியல், தொல்லியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது ஆய்விற்குறிய செய்தி.

(2.) மாந்தவியல் அறிஞர் மிகயீல் நெசுதூர்க் ”மனித இனங்கள்” என்னும் நூலில்

(தொடரும்)