16/6/09

1.தமிழர் ஆரியரா திராவிடரா! - ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்



உலக மக்களினங்களும்
மார்க்சிய அணுகுமுறையும்


மனிதன் – இயற்கையின் உழைப்பின் குழந்தை

இன்று நாம் வாழ்ந்து வரும் இப்புவி எனும் உலகமானது சூரியனின் சுழற்சியினால், அந்தச் சூரியனிடமிருந்தே பிரிந்து பின் குளிர்ந்து உருவான ஓர் உயிர்க்கோளம் என்பது புவியியல் அறிஞர்களின் கருத்து.

இப் புவிக்கோள் மீண்டும் மீண்டும் தன் இடையறாத சுழற்சியினால் உருண்டையாகி மேலும் குளிர்வுற்றுப் பின் இறுகி, குளிர்ச்சியினால் தன்னைச் சுற்றி ஒரு வளி (காற்று) மண்டலத்தையும், அதற்குள்ளாக தன் மேற்பரப்பில் பெரியளவிலான நீர்ப்பரப்பினையும் உட்பரப்பில் நெருப்புக் குழம்பினையும் கொண்டுள்ளது என்பது இப்புவியின் இருப்பு குறித்துப் புவியியல் அறிஞர்கள் தந்து வருகின்ற விளக்கமாகும்.

அடுத்து, இப் புவியில் அமைந்துள்ள பெரிய நீர்ப்பரப்பில் இருந்துதான் முதலுயிரி தோன்றி, அதன் வளர்நிலையில் பல்வேறு கால மாறுபாடுகளோடு கூடிய திரிவாக்கம் (Evolution) எனப்படும் இயற்கைத் தேர்வு முறையில் படிப்படியாக பல்வேறு உயிர் வகைகள் தோன்றின என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்து.

இதன்வழி, உலகில் முதலில் நீர்வாழ் உயிரிகளும், இந்நீர்வாழ் உயிரிகளில் ஏற்பட்ட பல்வேறு மாறுபாடுகளின் அடிப்படையில் நிலவாழ் உயிரிகளும், பின்னர் இந்நிலவாழ் உயிரிகளில் ஏற்பட்ட பல்வேறு திரிவாக்கத் தகவமைப்பகளின் அடிப்படையில் இறுதியாகக் குரங்கின விலங்குகளும், அக்குரங்கினத்தில் ஏற்பட்ட திரிவாக்க வளர்ச்சிகளின் விளைவாகத் தற்கால மனிதனும் உருவெடுத்தான் என்பது நிறுவியுள்ள கூற்று.

மனிதர் இனத்தின் வாழ்வை, அதன் வரலாற்றுப் பொருண்மையை அறிவியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முனையும் யாருக்கும் மேற்கூறியுள்ள கூற்றுக்கள் புறந்தள்ளத் தக்கவையல்ல. மாறாக விரிவான ஆய்வுகளுக்கு உரியவையாகும். எனவே நாமும் இக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே மனித இன வாழ்வையும், அதன் வரலாற்றுப் படிநிலைகளையும் விளங்கிக் கொள்வது நலமாகும்.

இயங்கியலும் இயற்கைத்தேர்வும்
ஒன்று மற்றொன்றாதல் அதாவது வேறொன்றாக மாற்றம் அடைவதென்பது ஓர் இயங்கியல் உண்மை. ( ”இயங்கியல்” என்பது தொன்மை இயற்கை அறிவுத்துறைகளுள் ஓர் அடிப்படைப்பகுதியாகும். இது தற்காலத்தில் மார்க்சியர்களால் மீட்டெடுக்கப்பட்டு கையாளப்படுகிறது. மார்க்சியர்கள் இதனை அடிப்படையாகக் கொண்டே உலகம் மற்றும் வாழ்வியல் பற்றிய தங்களுடைய பார்வைகளை மேற்கொள்ளவும் விரிவுபடுத்தவும் செய்து வருகின்றனர். இந்த அடிப்படை அறிவுத்துறையினை பண்டைய கிரேக்கத் தத்துவவியலார் இயற்கையாகவே கொண்டிருந்தனர் என்பது மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சின் கருத்து. ஆனால் இத்தகு இயங்கியல் அறிவை பண்டைத் தமிழர்களும் கொண்டிருந்தனர் என்பதைத் தமிழிலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் எவரும் எளிதில் கண்டுணர்வர் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய செய்தியாகும்.) ஏனெனில் அது இயற்கை எனும் பேராற்றலை அடிப்படையானதாகவும், சார்புத் தன்மை உடையதாகவும் கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே அறிவியல் அறிஞர்கள் கூறுவது போல, தொடக்ககால முதலுயிரியயலிருந்து தற்கால மனிதர் இனம் வரை பல்வேறு உயிர்வகைகளும் திரிவாக்க முறையில் சார்பு நிலையுடன் பிறப்பெடுக்கவும் வாழவும், மறையவும் செய்தன.,செய்கின்றன.
இயங்கியலின் அடிப்படையில் மாற்றம் என்பது வேறுபட்டுப் பிரிகின்ற இயல்பைக் கொண்டதாகும். மாற்றம் என்பது இத்தகு வேறுபட்டுப் பிரியும் இயல்பை உள்ளடக்கியது என்பதால்தான், ஒன்று மற்றொன்றாக வளர் மாற்றம் அடையும்போது, அவைகளுக்கிடையில் ஒத்தத் தன்மைகளோடு எதிர் மறைத் தன்மைகளும் (Negative) தோற்றம் கொண்டு வளர்கின்றன. இதனால் ஒருபுறம் மாற்றம் மறுபுறம் முரண்பாடு எனும் புதிய நிலைகள் பிறக்கின்றன. இப்புதிய நிலைகளால் மாற்றங்களின் ஊடாகவே முரண்பாடுகளின் அடிப்படையில் போட்டிகளும் தோற்றம் கொள்கின்றன.
இப்படி இயங்கியல் போக்கில் ஒரு தொடர்நிலையில் உருப்பெறும் தோற்றம், மாற்றம், பிரிவு, முரண்பாடு, உடன்பாடு, போட்டி, அழிவு, மறைவு எனும் பல்வேறு திரிவாக்க வளர்முறைகளில் பிறப்பெடுத்த பல்லுயிரிகளும் ஒரு புறம் தமக்குள்ளாகவே போட்டியிட்டன. மறுபுறம் தம்மிடமிருந்து வேறுபட்டு நின்றனவோடும் போட்டியிட்டன.
இப்படி தோற்றம் கொண்டுவிட்ட பல்வேறு போட்டிகளின் போக்கில் சில உயிர்கள் போட்டிகளுக்கு ஊடாகத் தத்தம் நிலையிலிருந்து பிறழ்ந்து புதிய மாற்றங்களோடு தம்மைத் தகவமைத்துக் கொணடு வாழ முற்பட்டன. சில உயிரிகள் போட்டியின் நெருக்குதல்களைத் தாங்கவியலாமல் இறந்தும் போயின. இதனால் ஒரு வகை வாழ்ந்த இடத்தில் பல வகைப்பட்டவை வாழ நேர்தலும், பலவகையானவற்றில் சிலவற்றின் ஆளுமை நிறுவப்படுதலும் நடந்தேறின. இதுவே இயங்கியல் காட்டும் உயிரின வரலாற்றில் உண்மை நிலை. இதையே அவர்கள் இயற்கைத் தேர்வு என்றனர்.
இவ்வாறு உயிரின வாழ்வியலில் ஆளுமை நிலைகள் தோற்றம் கொண்டு நின்று நிலவுதற்கு பல்லகைப்பட்ட வாழ்வியல் போட்டிகளால் வென்று வளர்த்தெடுக்கப்பட் திரிவாக்க வளர்ச்சிகளே முதன்மைக் காரணிகளாகும். இப்படி ஏற்பட்ட வளர்ச்சிகளின் மேல் நின்று, இன்று உலகையே ஆளுமை செய்யும் இயற்கையின் சிறப்பான உயிரியே மனிதர் இனம் ஆகும்.
இயற்கைத் தேர்வின் மூன்று பாதைகள்
இன்றைய மனிதர் இனம் பிறப்பெடுத்த திரிவாக்க வளர்நிலையைப் பின்வருமாறு அறியலாம். இன்று நமது கண்ணெதிரே தோன்றி நிலைத்து வாழும் உயிரிகளை அவை பெற்றுள்ள உருவம், அவை கொண்டுள்ள தகவமைப்புகள், அவை மேற்கொள்ளும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கொண்டு மூன்று பெரும் உயிர் வாழ்வினங்களாகப் பிரிக்கலாம். அவை
1. தாவர இனம்

2. விலங்கு இனம்

3. மனித இனம்
(இனம் என்ற தமிழ்ச் சொல்லானது, அதன் சொல்லாட்சியில் அடையாளங்காணுதல் என்பதையும், வகைப்படுத்தல் என்பதையும் தன் உட்பொருளாகக் கொண்டு இருந்து வருகிறது.)
இம் மூன்று பெரும் வாழ்வினங்களின் அடிப்படையில் காண்போமாயின், திரிவாக்க அறிவியல் வளர்ச்சியின் படி, உலகப் பரப்பில் முதன் முதலாக உயிரி என்ற வகையில் தோன்றிய உயிரினம் தாவர இனமே ஆகும். திரிவாக்க அறவியலின் படி இத்தொன்மை தாவர உயிரினமே தன் வாழிடத்தின் சூழமைவுகளுக்கேற்பத் தமது வாழ்நிலையிலும் உடலமைப்பிலும் மாறுபாடுகளை ஏற்று, திரிவாக்க வளர் முறையின் காரணமாகத் தன்னிடமிருந்து வேறுபடுகின்ற, ஆனால் தனனைச் சார்ந்த பல்வகைத் தாவர உயிர்களைத் தோற்றுவித்தது. அதன் மூலம் அது படிப்படியாகப் பல்வேறுகால இடைவெளிகளின் ஊடே தாவர உயிர்களின் வளர்ச்சிப் பாதை ஒன்றினையும் தோற்றுவித்தது.
இப்படி உருவெடுத்த தாவர உயிரிகளின் வளர்ச்சிப் பாதையே, அதனினும் மாறுபட்ட விலங்குகளின் தோற்றத்திற்கு அடிப்படையாய் அமைந்தது. புவியியல் சூழல்களில் ஏற்பட்ட பல்வேறு வேறுபாடுகள், தாவர உயிரிகளின் இடப்பெயர்வுக்கும், வாழ்வமைதியைக் குலைக்கும் போக்குக்கும் இடமளித்த நிலையில்தான், அவற்றைத் திரிவாக்க வழியில் ஏற்று தங்களைத் தகவமைத்துக் கொண்ட தாவர உயிரிகளே, முதனிலை விலங்குகளாக மாற்றமடைந்தன. இப்போக்கு முதலில் நீர்வாழ் தாவர இனங்களில் தான் முதலில் நடைபெற்றது என்பது அறவியல் அறிஞர்களின் கருத்து. இப்போக்கில் மேலும் மேலும் மாற்றங்கள் தொடர்ந்த நிலையில்தான், அவை முழுமையான விலங்குயிரிகளாகப் பிரிவுபட்டன. இதன் பின்பே முழுமையான விலங்குயிரிகளில் நடைபெற்ற திரிவாக்க மாற்றங்கள் விலங்குயிரிகளின் வளர்ச்சி ஒரு தனிப் பாதையாகப் பிரிவதற்கு வழியமைத்துக் கொடுத்தன. இதுவே பின்னர் தனிப்பெரும் பாதையாகவும் மாற்றமுற்றது.
தாவர இனங்களின் வளர்ச்சிப் பாதையிலிருந்து விலங்கினங்களின் பாதை பிரிந்துள்ளதை, விலங்கினங்களுள் பெரும்பாலனவை தனது உணவுத் தேவைக்குப் பொதுநிலையில் தாவர இனங்களையேச் சார்ந்திருப்பதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். இப்படி சாரிபு நிலையில் உருவாகிய விலங்கினப் பாதையே, அதற்கடுத்ததாகிய மனித இனப் பாதைக்கு அட்ப்படையாகிறது. விலங்கின வளர்ச்சிப் பாதையில் பல்வேறு விலங்கின வகைகளை உருவாக்கிய திரிவாக்க வளர்ச்சியே இறுதியில் குரங்கின வகையை உருவாக்கியது.
உயிரின வளர்ச்சி வரலாற்றில் குரங்கினம் தோன்றிய நிலையே, மனித இனம் பிறப்பெடுத்ததற்கான அடிப்படையாகும். முதலி குரங்கினத்திலிருந்து திரிவாக்க வளர்ச்சிகளின் ஊடாகப் பல்வேறு வகைக் குரங்கினங்கள் தோன்றின எனறும், அவற்றுள் வாலில்லாக் குரங்கு வகையிலிருந்து நிமிர்ந்து நடக்கக்கூடிய குரங்கு வகையினம் தோன்றியது என்றும், அவற்றிலிருந்தே மனிதக் குரங்குகள் உருவாகின என்றும் மாந்தவியல் (மனித இனத்தின் தோற்றம், மற்றும் அதன் வகைப்பாடுகள், அவற்றுக் கிடையேயான உறவுகள் பற்றிய ஆய்வறிவியலே மாந்தவியல் எனப்படும் ஆய்வுத்துறையாகும்.) அறிஞர்கள் உரைத்து வருகின்றனர். இதனால் அவர்கள் குரங்கினங்களின் வளர்ச்சிப் பாதையையே மனித இனத்தின் பாதையெனவும் வரையறுத்து மனித இனத்தின் தோற்றத்தை விளக்கி வருகின்றனர்.
மனித இனத்தின் இயற்கைச் சார்பு ஆளுமை
இப்படி, பல்வேறு திரிவாக்க வளர்ச்சியினால் உணடாகிய மனித இனம், தான் வாழ்ந்த வாழிடங்களின் தன்மை, புவியியல் சூழல், வெப்பநிலை போன்ற காரணிகளுக்கேற்ப தனது வளர்ச்சியிலும் திரிவாக்க வழி மாற்றங்களை ஏற்றுப் பல பிரிவினங்களாகப் பிரிந்து இன்று உலகமெங்கும் பரவி விரவி வாழ்ந்து வருகின்றது. இப்படி உள்ள பிரிவினங்களுக்கு எடுத்துக்காட்டாக வெள்ளை நிறத்துடன் வாழும் மனிதர்கள் வெள்ளையர்கள் என்றும், கருமை நிறத்துடன் வாழும் மனிதர்கள் கருப்பர்கள் என்றும் அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருவதைக் கொள்ளலாம்.
இவ்வாறு, பல பிரிவுகளாகப் பிரிவுற்று வாழும் அனைத்து மனித இன மக்களினங்களும் தங்களின் உணவுத் தேவைகளுக்காகத் தனது முன்னோடி உயிரினங்களான தாவரம் மற்றும் விலங்கு இனங்களையே சார்ந்துள்ளனர் என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மையாகும். இயங்கியலின் படி கூறினால் இதுவே உயிரின வளர்ச்சிப் பாதையில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சார்புத் தன்மையாகும்.
இப்படித்தான் இச்சார்புத் தன்மையின் அடிப்படையில் அனைத்து வகை உயிரினங்களும், அவற்றுக்கிடையேயான திரிவாக்க வளர்ச்சியின் தொடர் போக்கின் காரணமாக ஒன்றையொன்று சார்ந்து வாழ்பவையாகவும், ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்தும் வாழ்ந்து வருகின்றன. அதற்கேற்ப தமது வாழ்முறையிலும் இருப்பு முறையிலும் பல தகவமைப்புகளைக் கொண்டும் இருந்து வருகின்றன.
இப்படியுள்ள அனைத்துவகை உயிரினங்களிலும் அறிவில் முதிர்ந்த இனமாக இருப்பது மனிதர் இனமே ஆகும். இப்படி அது உயர்ந்திருப்பதற்கான அடிப்படையானது பல்வேறு வழிகளில் அது தன் வாழ்வியலில் பல தலைமுறைகளாகப் போராடிப் பெற்ற திரிவாக்க வளர்ச்சிகளும், அப்போராட்டங்களுக்கு அடிப்படையாய் அமைந்த உழைப்புமே ஆகும். இப்படி இயற்கையின் மீது நடைபெற்ற உழைப்புப் போராட்டத்தில் பெற்ற அறிவினாலேயே மனிதர் இனம் தனக்குரிய வாழ்க்கைக் நெறிகளை வகுத்துக் கொண்டு, பிற உயிரினங்களின் மீது தனது ஆளுமையைச் செலுத்திவருகின்றது.
தொடரும்
கடலுள் மூழ்கிய கண்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக