1/6/09

மீண்டும் எழட்டும் “ஆ“ பத்து - தமிழின் களப்பிற மரபு புதிய களத்தை உருவாக்கட்டும் - செல்வமணியன்


அறக்கண் பத்துக்கட்டுப் பறை உயர்த்தி

எழுகிறது தமிழ் ஆதனிய ‘’ஆ’’ பத்து!

மீண்டும் மக்கள் உள்ளத்தில் பாயட்டும் ஆசீகவ அக்கப்போர்!

மக்கள் வாழ்வில் மலரட்டும் மார்க்சிய மக்கள் போர்!


மிழகம் தனித்த வரலாற்று மரபுரிமையும் அதனை வளப்படுத்திய தனித்தத் தத்துவச் செறிவையும் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு சமுதாயமாகும்.

இதன் வரலாற்று நெடுகிலும் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவப் போராட்டங்களும் களப் போரிடல்களும் நிறைந்தே கிடைக்கின்றன. அவை நன்மைகளை உயர்த்திப் பிடித்தும் தீமைகளை எதிர்த்துப் போராடியுமே முன்னேறியுள்ளன.


இன்றைக்குத் தமிழராய் அறியப்படும் பழந் தமிழ்ச் சமுதாயம் அது உருண்டு திரண்டெழுந்த வரலாற்றில் அதன் வாழ்க்கைப் பட்டறிவுகளில் உயர்த்திப் பிடித்திருந்த பெருங் கோட்பாடு “அறம்” எனும் ஒற்றைச் சொல்லாகும். அது வரைமுறை மிகுந்த வாழ்க்கைச் செழுமையின் வரையறுப்பாகும்.


பழந்தமிழ்ச் சமுதாயம் தன் தொடக்க கால ஆட்சிமுறையின் உருத்திரட்சிகளிலும் மலர்ச்சிகளிலும் அந்த அறத்தையே கண்ணாக நிறுத்தி அதனைக் கண்போல் காத்து வந்தது.

அந்த "அறக்கண்" ஆட்சி மூலமே மக்கள் வாழ்வுக்குரிய அகம் – புறம் எனும் பிரிக்கவியலா உளத்தியல் – ஊரியல் செழுமைகளை வரையறுத்துக் காத்து வளர்த்தது.

ஒரு குடிக்குள் எழுபிறப்பு – மூவாழ்க்கை முறை எள ஒரு பட்டுக்கட்டுப் பண்பாட்டை வடித்தெடுத்து தன் வழி மரபில் தொடர்ந்து நிலை நிறுத்தி வந்தது.

குடி குதிரும் இடம் எங்கெங்கும் ஏழ்குடிக் கூட்டுக் குடியாட்சிகளை நிறுவி அவற்றின் எளிமையில் அறத்தின் பெருமையைப் புறத்தில் நிறுத்திப் பறையமாய் உயர்ந்து நின்றது.

மக்களின் அகப்புற வாழ்க்கை முறைகளில் ‘ஆதனியப் – பூதனியப்’ பண்புகளைப் பூத்துக் குலுங்க வைத்தது. புன்னகை மொழியில் பெண்மையின் பெருமை பேசி நின்றது.

பூத்துக் குலுங்கிய தமிழ்ப் பறைமுறை வாழ்க்கையில் ‘வாழைக்கு தன் கன்றே கூற்றாகும்’ என்பதைப் போல் பறைமுறை பிரித்து வளர்த்து வந்த பார்ப்பனியமே அப்பறையத்தின் ஆதனிய – பூதனிய வரைமுறைகளுக்கு எதிரியாய் எழுந்து நின்றது. பறையத்தின் எழுபிறப்பில் அடிப்பிறப்பே எதிர்க்கோலம் பூண்டது.

அப்பார்ப்பனியம் ஆதனியத்தை எரித்து முடிக்கும் ஆரியத்தைக் கையில் தூக்கிக் கொண்டு தீமையைத் தூக்கிப் பிடித்து தீ ஏவும் தேவத்தேரோட்டத்தை நடத்தி அறக்கண் தமிழ்ப் பறையத்திற்கு முடிவு கட்டியது.

தமிழ்ப் பறையம் கட்டி வளர்த்த ஏழ்குடிக் கூட்டாச்சிகளை எரித்து முடித்து அதன் மூவாட்சி முறையைத் தனித்தனியே பிரித்து நிறுத்தி முப்பேரரசு வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது அப்பார்ப்பனியம்.

ஆதனிய – பூதனிய வாழ்க்கைப் பண்புகளுக்கு முடிவு கட்டி பார்ப்பனிய ஆடவக் கொள்கைகளின் மூலம் பேரரசு வெறியாட்டம் ஆடியது.

பார்ப்பு ஆரியத்தை ஆட்சியிலாகக் கொலுவேற்றி வைத்து அறத்தைப்
புறத்தில் நிறுத்தி ஆண்டோரை அப்புறப்படுத்தி வெளியேற்றி வைத்தது.
அவர்களின் குடையறுத்தும் உடை அறுத்தும் கொலை வெறியாடி நின்றது.

இப்படி பார்ப்பாரியம் ஆடிய ஆட்டத்திற்கு எதிராக அது அறுத்தெறிந்த ஆதனிய – பூதனிய வாழ்க்கை முறையை மீட்டு நிலை நிறுத்தப் பிறந்தது ஒரு மரபு.

அது பார்ப்பாரியம் அப்புறப்படுத்தி வெளியேற்றிய பறை அறக் கூட்டத்திலேயே வேர் பிடித்துக் காழ்த்து வளர்ந்தது. பார்ப்பாரித்தை எதிர்த்துக் களமாடும் புதிய களப்பிற மரபை (களம் காணப் பிறக்கும் மரபை) அப்பார்ப்பாரியத்தின் தமிழ்ப் பேரரசுகளுக்கு வெளிநின்று வளர்த்தெடுத்தது.

களப்போரிடும் அம்மரபின் அருவைக் கருவில் நிறுத்தி, கருவை உருவில் நிறுத்தி, உருவைத் திருவில் நிறுத்தி, திருவைத் தெருவில் கொண்டு வந்து நிறுத்திக் களமாடியது.


அந்த களப்பிற மரபு கட்டி வளர்த்து நின்ற போர் முறையே ஆசீவக அக்கப்போர். அது ஆதனியத்தை மீண்டும் வாழவைத்து அதில் பூதனியத்தை பூத்துக் குலுங்க வைக்க மக்கள் உளத்தியலை வலுப்படுத்தும் தத்துவக் களப்போர். அந்தக் களப்போராட பிறந்தவர்களே களப்பிறர்கள்.

அந்தக் களப்பிறக் களப்போரில் பார்ப்பாரிய ஆடவக் கொள்கைளுக்கு எதிராக முகிழ்த்தெழுந்த அக்கால அரசியல் இயக்கங்களே படை அணிவகுப்புகளே சமணமும் புத்தமும்.

”ஆசீவக மனனம், ஆமனச் சமணம், ஆபுத்த அமிழ்தம்” எனும் முக்கூட்டுப் பறை முறையில் புதிதாய் முகிழ்தெழுந்த முப்புள்ளிப் (ஃ) போர் முறைதான் ஆசீவக அக்கப்போர். (இதன் வழி தான் தமிழில் ஃ எனும் குறியீடு ஆய்த எழுத்தாக உலா வருகின்றது)

அந்த ஆசீவக அக்கப்போரை வளர்த்து உருப்படுத்திய ஆட்சியியல் கோட்பாடே உள்ளத்தில் வன்மை வளர்த்து பெண்மை மண வெள்ளத்தில் ஆண்மை நிறுத்தி உரிமையில் ”அறம் – பொருள் – இன்பம்” பிரித்து முப்பால் ”அமிழ்த” ஆட்சி நடத்திய வள்ளுவம்.

வள்ளுவம் அது வாழ்வின் கனவுக் கோர்வையல்ல! களப்பிற மரபின் ”அறக்கண்” ஆட்சியியலின் கைப்போர்வாள்! பார்பாரியத்தை எதிர்த்துக் களமாடிய களப்பிறர்களின் அரசியல் அமைப்பு யாப்பு!

அந்தக் களப்பிற வள்ளுவத்தை அறுத்தெறிந்து அப்புறப்படுத்தி மீண்டும் தன் ஆரிய மரபு நிறுவ எதிர்க்களமாடிய பார்ப்பரியத்தின் புதிய பரம்பரை ஆட்சிப் பெருமைகளே எழுதப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு. வரலாற்றில் எழுந்தாடி வரும் இந்து மதவெறியாட்டங்கள்.

இவற்றால் அழிக்கப்பட்ட நந்தன் ஆட்சி ஆறுந்த வீழ்ந்த தன் ‘’ஆ’’முறை மீட்க ஒரு சபதம் இட்டதாம். ஆமாம்! தொடரும் என் சந்ததிகளின் கால்களிலிருந்து மீண்டும் மீண்டும் களப்பிற மரபு பிறக்கும் எனச் சபதம் இட்டதாம்! காலில் தங்கி களம் காணும் மரபு ஒன்று பிறக்கும் எனச் சபதமிட்டதாம்!

அதை ஆசீவகம் மீட்கும் ‘’ஆ’’ பத்து மறைப்பு எனக் கட்டியுரைத்து ஊரெங்கும் உலகெங்கும் உலவ விட்டதாம். ஆமாம் ஆதனிய ஆன்மீக அலறலாக உலவ விட்டதாம்!

என் ‘’ஆ’’ பத்து மீண்டும் எழுந்தால் உனக்கு ஆபத்து என அந்த பார்ப்பரியத்திடம் உறுதியிட்டு உரைத்ததாம்! உனக்கு இறுதி செய்வேன் எனச் சபதமிட்டு இறந்ததாம்.

ஆமாம்! அது தன் மன வெளியை எங்கெங்கும் திறந்து நிறுத்தி விட்டு ‘’ஆ’’ என மண்ணுக்குள் கண்மூடி மறைந்ததாம்! அது இறக்கவில்லை. மறைந்து நிற்கின்றதாம்.

இப்படிப் சொல்கிறது தமிழகப் பறையர்களிடம் வாழ்ந்து செத்து வீழ்ந்துக்கிடக்கும் ஆரியம் கொலைவெறியாடி அறுத்து முடித்த

பறைக்கூத்துப் பாடல்.

”ஆ” பத்தாய் எழுகின்றது... பறைக் கூத்தில்

தனை எரித்த சிவனுக்கு நந்தன் இட்ட இறுதிச் சூளுரை

இறுதியாய் அறுதியிட்டு உறுதியாய்
உரைக்கிறேன்; வேலில் தீ தூக்கி நீயாடும்
வேதிய ஆட்டம் முடிக்க...
நீ அறுத்தெறிந்து எரித்து முடித்த – என்
“அறக்கண்” பத்துக்கட்டுப் பறை தூக்கி
மீண்டும் எழுந்து வருவேன்...

வாழ்ந்த என் முகம் மூடி
முட்டி நிற்கும் இச்சாம்பலிலிருந்து
சாவைக் கொன்றெழும் சனியனாய்
சந்ததியில் அந்தாதிக் கால் பிடித்து
மீண்டும் பிறந்து வருவேன்...

அந்தாதிச் சந்ததியின் கண்ணிரண்டில்
அந்தரத்து ஆதி நீர் மின்னல்
பூப் பூக்கப் புதிதாய் பிறந்து வருவேன்
நெடுவானம் கீறி நிலம் விழும் நீராய்
அவர் தலைக்குள் புகுந்து வருவேன்...

நான் இட்ட வடுவைத்
தீக்கண்ணாய் நிறுத்தி நீயாடி வரும்
தீச்சித்த வேதியக் கொடுமை வீழ்த்த
அந்தாதிச் சந்ததியின் நெற்றியில் – அறுந்த
ஆதித் தமிழ்நீரன் கொள்கை
தூக்கி வருவேன்..

அப்போது....
”நீற்றுப் போனவன் நந்தன்” என்றே
வெற்றியின் வெறியில் நின்று
எனை எரித்த சாம்பலை
நெற்றியில் நீராய்ப் பூசி
சுரிய – ஆரிய – காரிய –
வாரியங் கட்டியாடும் – உன்
“சு” ப்ரமணியக் கொடுமைக்கு
இறுதி செய்வேன்.


உறுதியாய் உரைக்கிறேன்;
இறுதி செய்வேன்... என்
அந்தாதிச் சந்ததியின் நெற்றியில்
வந்தன – சந்தன – நந்தன – அந்தண
“மூ” ஆதித் தமிழ் நீரன் கொள்கை தூக்கி வந்து
உனக்கு உறுதியாய் இறுதி செய்வேன்

என் சாம்பலின் சாவை மிதித்தெழும்
சந்ததி காலில் அறுந்து வீழா இச்சபதம் கட்டி
அங்கை கூப்பி அருவை வணங்கும்
அருந்ததிச் சத்தம் எங்கும் ஒலிக்க...
சதங்கைக் கட்டி உன் முன் ஆட விடுவேன்...

எனைக் கொன்ற நினைப்பில் நீ பூசும்
உன் எரிநெற்றிச் சாநீற்றை –
ஆடும் என் சந்ததி நெடுங்காலில் பூசி
உனக்குப் பரகாலனாய் வந்து நிற்கும்
“தண் கால் – தங்களான்” தலைமை
கட்டி ஆட விடுவேன்...

என் சந்ததி ஆடும் ஆட்டத்தில் நான் நின்று –
நின்றாடுவேன்; உன் முன் நின்றாடுவேன்
நிமிர்ந்தாடுவேன்; தலை நிமிர்ந்தாடுவேன்
வென்றாடுவேன்; நான் வென்றாடுவேன்
சாப்பறையில் சங்கப்பறை தட்டி
வென்றாடுவேன்.

கொன்றாடுவேன் நான் கொன்றாடுவேன்
தீய உன் தீக் கொள்கைக் கொன்றாடுவேன்
வீழா என் சந்ததியின் தலையில்
நீ பறித்த மயிற் பீலி மீண்டும் சுட்டிக்
கொண்டாடுவேன்
நீ அறுத்த ஆதிச் சுற்றம் கூட்டி விழாக்
கொண்டாடுவேன்.வீழாப் பறையம் கட்டி
விழாக் கொண்டாடுவேன்...


மறைந்து நிற்கும் அந்த “ஆ” பத்தை மீட்டும் தட்டியெழுப்ப வேண்டிய தேவை வந்து விட்டது. மீண்டும் களப்பிற மரபைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஆம்! தமிழகம் இன்றைக்கு “இந்திய” வல்லரசின் வெறியாட்டத்தின் கீழ் ஒரு புறம் சாதியத்தாலும் மறுபுறம் வல்லரசியக் கொடுமைகளாலும் அழிக்கப்பட்டு வருகின்றது.

அதன் வளங்களும் உரிமைகளும் எல்லையற்ற வல்லரசியக் கொள்ளைக்கு இலக்காகிக் கிடக்கின்றன. அவற்றை மீட்க எரிக்கும் சாதியத்துக்கும், அழிக்கும் வல்லரசியத்திற்கும் முடிவு கட்டும் ஒரு புதிய களப்பிற மரபை உருவாக்க வேண்டும்.

மக்கள் உளத்தியலில் நன்மையைப்படைக்கும், ஆசீவக அக்கப்போரையும், உரிமையியலில் நாடு மீட்கும் மார்க்சிய மக்கள் போரையும் கட்டி எழுப்பி புதிய களப்போரை இனி நாம் நடத்தவேண்டும்.


தமிழகத்தின் செழுமையான வரலாற்றுத் தத்துவ மரபில் ஊறியெழும் புதிய கம்யூனிசக் களப்பிற மரபைத் தடடியெழுப்புவோம்! ஆதிக்க வெறியாடும் சாதியப் பார்பாரியத்தையும், வல்லரசிய இந்தியத்தையும் வெட்டி வீழ்த்துவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக