6/6/09

தமிழக மக்களின் பொறுப்பின்மையும் ஈழ மக்களின் அவல நிலையும்

இன்றைய தமிழக மக்களின் போக்கு என்பது மிகவும் கவலைக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் உள்ளது. இவர்கள் முழுக்க முழுக்க அடிமை எண்ணம் கொண்டவர்களாகவும், அந்நிய மோகம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு எப்படிப்பட்ட அநீதி இழைக்கப்பட்டாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்கவோ, போராடவோ திராணியற்று இருக்கிறார்கள். அந்த அநீதிக்கு அடிபணிந்தோ, அல்லது அதற்கான மாற்று வழியையோ தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர்.இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில் ”நம்மால் என்ன செய்ய முடியும்” என்ற நம்பிக்கையற்ற, பொறுப்பற்ற பதில். இதைவிட முக்கியமானது அவர்களுக்கு உல்லாச வாழ்க்கையின் மீதுள்ள மோகம், திரைப்படம், தொலைக்காட்சி என்ற சுகபேகா வாழ்க்கையில் திளைத்துக் கிடக்கிறார்கள். இந்தச் சுகங்களை சிறிதுகூட இழக்க மனமில்லை.

எவனுக்கு என்ன நேர்ந்தால் என்ன? தான் உண்டு தன் வேலையுண்டு என்ற அக்கறையற்ற தன்மை. இல்லையெனில் ஈழத்தில் நமது உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்ற பொழுதும் கூட கொஞ்சமும் அதைப் பற்றிய சிந்தனையில்லாமல் மானாட மயிலாட, திரைப்படம் போன்ற களியாட்டங்களிலேயே ஆர்வமாய் ஈடுபட்டனர். என்னவோ அங்கே அப்படி ஒரு கொடூரம் நடக்காத மாதிரியும் இங்கே என்னவோ இவர்கள் சம உரிமையுடனும் சுதந்திரமாக இருப்பது போலவும் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர்.

”தமிழா நீ ஒரு அடிமை” என்பதை முதலில் உணர்ந்து கொள். எப்படியென்றால் நன்றாக யோசித்துப் பார் உன்னால் உன்னுடைய எந்த உரிமையை போராடிப் பெற முடிந்தது.
காவிரிப் பிரச்சனையில் நீர் உரிமையைப் பெற முடிந்ததா?

பாலாற்றின் குறுக்கே அணைகட்டக் கூடாது என்ற கோரிக்கையில் வெற்றி கிடைத்ததா?

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நமக்கு நீதி கிடைத்ததா? எல்லைப் பிரச்சனையில் நமக்கு நீதி கிடைத்ததா?


மொழியுரிமை – தமிழ் வழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழியுரிமை கிடைத்ததா?

அட இவ்வளவு ஏன் நம் மீனவர்களை வெளி நாட்டுச் சிங்களவன் சுட்டுக் கொன்றானே நம்மால் தடுக்க முடிந்ததா?
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றதே அதைத் தடுக்க முடிந்ததா?

கூடங்முளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை நீக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடும் அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியென்ன?

அமெரிக்காவுடன் போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இன்னும் இரண்டு உலைகள் கூடுதலாக.

இந்தக்கூடங்குள பிரச்சனை அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அதற்கு எதிராக நடக்கும் போராட்டச் செய்திகைள் கூட வெளியே வருவது இல்லை. இந்தக் கூடங்குளம் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இந்த அணு உலைகள் முதலில் கேரளாவில் அமைக்கவே இந்திய அரசு முயற்சி செய்தது. ஆனால் கேரளாவில் நடந்த கம்யுனிச ஆட்சி மற்றும் மக்கள் போராட்டத்தாலும் அது அங்கிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த மாதிரியான அணு உலை ஒன்று 1986ஆம் ஆண்டு இரசியாவில் உள்ள செர்னோபில் என்ற ஊரில் வெடித்தது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இறந்ததுடன் பல மக்கள் தோல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்ற உயிர்க் கொல்லி நோய்களுக்கு உள்ளனார்கள். எனவே அந்த நாடு இந்த அணு உலையைத் தடை செய்தது. உடனே இந்த அணு உலையை அமைக்க அந்த நாடு இந்தியாவின் உதவியை நாடியது. இவ்வளவு அபாயகரமான இந்த அணு உலை கூடங்குளத்தில் அமைந்ததே நமக்குத் தெரியாது.

எதிர்பாராமல் ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டால் உலையிலிருந்து சுற்றுவட்டத்தில் 70 கி.மீ வரையிலான மக்கள் நிரந்தரமாக நம் வாழ்விடத்தை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட வேண்டும். அப்படி வெடித்தால் அது தமிழகம் முழுக்கவே பாதிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி இதில் இருந்து வெளியேறும் கழிவுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகள் ஆகும்.

இப்படி இன்னும் பல பிரச்சனைகள் தமிழகத்தைச் சுற்றியுள்ளது. இதனால் ஏற்படப்போகும் அபாயகரமான விழைவுகளைப் பற்றியோ எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையைப் பற்றியோ சிறிதும் பொறுப்பற்ற தன்மையிலேயே இருக்கின்றனர். இவ்வாறு இவர்களைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடாமல் அக்கரையற்றத் தன்மையிலேயே இருப்பது இவர்களை அழிப்பதுடன் ஒட்டுமொத்த இனத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

60 ஆண்டு காலமாகப் போராடும் ஈழத் தமிழர்களின் போராட்டமே ஒரு வலிமையான, விலைபோகாத, உன்னதமான தலைவனின் வழிநடத்தல் இருந்துமே இன்று மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இங்கே இருக்கும் தலைவர்களோ பிணத்தின் நெற்றியில் ஒட்டும் காசைக் கூட திருடும் தலைவர்களே இருக்கின்றனர். இவர்களை இனியும் தமிழினத் தலைவர் என்றும், அய்யா என்றும், அம்மா என்றும், அன்னை என்றும், பெரியம்மா, பெரியப்பா என்றும் நம்பினால் நீங்கள் உயிரோடு புதைக்குழிக்குச் செல்வதற்குச் சமம்.

இங்கே இருக்கும் கட்சிகள், தலைவர்கள் பத்தாதென்று நடிகர்கள் அதைவிட சாதிச் சங்கத் தலைவர்கள். சாதிக் கட்சித் தொடங்கி தங்களின் சாதிக்கான அங்கீகாரத்தையும், உரிமையையும் பெறுவோம் என்கின்றனர். இது இன்னும் மக்களை பிளவுபடுத்தி நம்மை அழிவை நோக்கியே இட்டுச் செல்லும்.

இப்படி இன்னும் சொன்னால் எத்தனையோ பிரச்சனைகள்... ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன தீர்வு என்பதைப் பற்றி யோசிக்காமல் தான் மிகவும் சுதந்திரமாகவும், சம உரிமையுடனும் வாழ்வது போன்ற மாயத் தோற்றத்திலேயே வாழ்கின்றனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது எழுந்த இன உணர்வு மீண்டும் தமிழகத்தில் முத்துக்குமார் இறப்பிற்குப் பின் எழுந்தது.
இந்த உணர்வு மேற்சொன்ன உல்லாச வாழ்க்கை, திரைப்படம், கட்சி வேறுபாடு, சாதி, மதம் என எல்லாவற்றையும் உடைத்தெறிந்து மனிதாபிமானம் உடைய மக்கள் அனைவரும் களத்திற்கு வந்தனர். அவ்வாறு வந்த மக்களை வழிநடத்தவோ, அரசியல் சக்தியாக மாற்றவோ அல்லது தக்க வைத்துக் கொள்ளவோ இங்கே ஒரு வலுவான தலைமையோ அல்லது இயக்கங்களோ இல்லை என்பது கவலைக்குரியது.

புரட்சிகர, தமிழ்தேசிய இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவு இப்போராட்டத்தைக் கூர்மையாக்கிக் கொண்டு சென்றனர். வழக்குரைநர்களின் எழுச்சிமிக்கப் போராட்டம் அரச வன்முறையால் வேறு பாதைக்குத் திருப்பி விடப்பட்டது. சட்டக் கல்லூரி மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் விடுமுறை என்ற நயவஞ்சக அரசின் முயற்சியால் நீர்த்துப்போனது.

இதையும் தாண்டி மக்கள் இயன்ற அளவுக்கு எந்த அமைப்பையும் சாராமல் கூட ஊர்மக்களும், உடல் ஊனமுற்றோரும், பள்ளி மாணவ மாணவிகளும் ஏன் அரவாணிகளும் கூட உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வகுப்புப் புறக்கணிப்பு போன்ற ஏனைய முறைகளில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த மாதிரியான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் கையிலெடுத்ததன் வாயிலாக இந்த எழுச்சியும் மழுங்கடிக்கப் பட்டது.

அந்தச் சூழ்நிலையில் ஒரு சரியான தலைமை அமைந்திருந்தால் அல்லது அனைவரையும் ஒன்று திரட்டும் வேலையை ஏதாவதொரு புரட்சிகர, தமிழ்த்தேசிய அமைப்புகள் கையிலெடுத்திருந்தால் உறுதியாகக் கூறமுடியும் இன்று ஈழத் தமிழர்களின் போராட்டம் இன்று பல படிகள் முன்னேறியிருக்கும்.

எழுந்த இவ்வளவு பெரிய எழுச்சி எந்தவொரு பலனையும் தரவில்லை. ஆனால் அந்த எழுச்சி தமிழகத் தமிழர்கள் அடிமை என்பதை உரத்துக் கூறியது. ஆனால் அதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை.

நம் உறவுகள் இன்று இருக்கும் அபாயகரமான சூழ்நிலையில், நாம் இருக்கும் இந்த நிலையிலேயே இருந்தால் அவர்கள் அழிவது மட்டுமின்றி நாளை நமக்கும் அந்நிலை கண்டிப்பாக வரும். ஏனெனில் நமக்கும் இங்கே சம உரிமையோ, சம நிலையோ கிடையாது. அங்கே துப்பாக்கியால் சுடுகிறான், இங்கே சுடவில்லை அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த நிலை போக்க நாம் அனைவரும் தமிழர்கள் என்ற முறையில் சாதி, மதம் கடந்து ஒன்றுபட்டு மிகப்பெரிய போராட்டத்தை (சீக்கியர் போல்) முன்னெடுக்கத் தவறினால் மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது.


போராடினால் தமிழினம் வாழும் இல்லையேல் தமிழினம் சாகும்

2 கருத்துகள்:

  1. nalla pathivu. inthe anu min nilayathai veru maanilathil amaipathu edral entha maaninlamaavathu mun varuma? kidayave kidayathu. ithu sari endu vaathidupavarkal sollatum. chumma oru pechuku oru anu min nilayathai veru maaaninlathil amaika sammathiparkala? kevalamaana piravi thamilan. karunaathi poondra thalaivarkalai vaithukondu tamillaanai alithalum ilavasa tv paathukondu congressku vote pooduvan tamilan.

    பதிலளிநீக்கு
  2. தமிழக மக்களின் பொறுப்பின்மையை மிக தெளிவாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா ஒரு நாடு அல்ல, அது பல்வேறு மொழிவழி மாநிலமாக இணைக்கப்பட்டுள்ளது என்று முதலில் நாம் உணர வேண்டும். ஏனென்றால் இந்திய தேசியத்தை நாம்தான்(தமிழர்கள்) அதிக அளவு தூக்கிப்பிடித்துக்
    கொண்டிருக்கிறோம்.
    தமிழ் தேசியத்தை உணர்ந்தால் மட்டுமே நமக்கு எதிராக பின்னப்பட்டுள்ள சதியை நாம் முறியடிக்க முடியும்.
    அதுவரை நாம் இந்தியாவின் அடிமைகள் தான்.

    அடிமை விழங்கை உடைக்கும் வரை,
    தமிழர்கள் என்ற உணர்வை பெற முடியாது!

    இந்திய தேசியத்தை உடைப்போம் !
    தமிழ் தேசியத்தை உருவாக்குவோம் !!

    பதிலளிநீக்கு