29/6/09

3. தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்


மனிதன் இயற்கையின் ஆளுமையாளன்

இப்படி நீண்ட நெடிய வரலாற்று வாழ்வின் போராட்டத்தோடு வளர்ச்சியுற்ற மனிதன் விலங்கினத்திலிருந்து எவ்வாறு பிரித்துக் கொண்டான் என்பதையும், மனிதனையும் விலங்கையும் தனித்தனியே பிரித்து வைத்த இறுதி வேறுபாடு எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதையும் மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு பின் வருமாறு.
” விலங்குகள் தங்களுடைய செயல்களால், மனிதனைப் போலவே – அவனளவிற்கு இல்லாவிடினும் தமது சுற்றுச் சார்புகளை மாற்றவே செய்கின்றன. இப்படி எழும் மாற்றங்கள் அவைகளின் முறைக்கு அவற்றை ஏற்படுத்தியவர்கள் மீது எதிர் செயலாற்றுகின்றன இப்படி இருபுற மாற்றங்கள் தொடர்கின்றன…….என்றாலும் எல்லா விலங்குகளும் அவற்றின் எல்லா திட்மிட்ட செயல்களும் ஒன்று சேர்ந்தாலும் கூட இயற்கையை மாற்றுவதில் பெருவெற்றி அடையவில்லை. அவை மெல்லவே தொழிற்பட்டன. ஆனால் தனது வெற்றியின் முத்திரையை விரைவாகப் பதிக்கும் வாய்ப்பை முதன் முதலாக மனிதனே பெற்றான். இதனை இப்படி சுருக்கிக் கூறலாம். ஒரு விலங்கு தனது சுற்றுச் சார்பை வெறுமனே பயன்படுத்த மட்டுமே செய்தது. அது தனது இருத்தலால் தனது சுற்றுச் சார்பில் மாற்றங்களை மட்டுமே உண்டாக்கியது. ஆனால் மனிதனோ தனது சுற்றுச் சார்பை மாற்றுவதோடு மட்டுமின்றி, அதனைத் தன் குறிக்கோள்களுக்கு கீழ்ப்படிய வைத்து ஊழியம் செய்யவும் வைக்கிறான். அதனின் ஆளுமையாளனாகவும் மாறுகிறான்.
மனிதனுக்கும் பிற விலங்கினத்திற்கும் இடையிலான வேறுபாட்டின் செறிவு மிகுந்த உள்ளடக்கம் இதுவே! இந்த வேறுபாட்டை வெளிப்படையாக்கியது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூறலாம்(1)
என மன வளர்ச்சியையும் அதற்கு அடிப்படையான குறிக்கோள்களையும் சுட்டக் காட்டி மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு விளக்குகிறார். இப்படி தெளிவான வகையில் இயங்கியலின் அடிப்படையில் பல இலக்கக் கணக்கான ஆண்டு காலம் தொடர்ந்து நடந்தேறிய வளர்ச்சி மாறுபாடுகளைத் தற்கால மனிதர் இனம் தனக்குள்ளேயே பொதித்து வைத்திருப்பதைப் பேரறிஞர் எங்கெல்சு சுட்டிக் காட்டும் பகுதி மிகவும் சுவை பொருந்தியதாகும். மனித இன உயிரியல் வளர்ச்சியைக் கண்டறிவதில் முதன்மையான முத்தாய்ப்பு உடையதாகும். அப்பகுதி இதோ!
”தாயின் கருவில் இருக்கும் (ஒரு மனிதக் குழந்தையின் தற்கால வளர்ச்சியானது) கருவின் வளர்ச்சி வரலாறானது பல பத்து இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளாக நடந்தேறி வந்த நமது மூதாதையர்களின் புழு உடலத்திலிருந்து தொடங்கிய உடல் திரிவாக்கத்தின் சுருக்கமான (விரைவான) மறுநிகழ்வேயாகும். இதனைப் போலவே அம்மனிதக் குழந்தையின் மன வளர்ச்சியும் அதே மூதாதையரின் – அவர்களுள் குறைந்தளவு பிற்காலத்தவரின் – அறிவுத்துறை வளர்ச்சியின் சுருக்கமான ஆனால் கூடுதலான மறு நிகழ்வேயாகும்”(1)
இன்றைய உலகம் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் பற்றிய அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களையும், மனிதரை உருவாக்கியதில் உழைப்பின் பங்கு குறித்த மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சின் கருத்துக்களையும் கொண்டு நாம் மனிதர் இனத்தின் உலக வாழ்வியல் பற்றி கீழ்க்கண்ட முடிவுகளை வந்தடையலாம்.
1. உலகில் உள்ள பெரும் உயிர் வாழ்வினங்கள் இயற்கையைச் சார்ந்தே உருப்பெற்றும் ஒன்றிலிருந்தே மற்றொரு வகை வாழ்வினத்தை உருவாக்கியும் உள்ளன. இதனாலேயே அவை தங்களுக்கிடையே இயற்கையின் சார்புத்தன்மையைப் பெற்றும் வாழ்கின்றன. இந்த இயற்கைச் சார்பின் காரணமாகவே அவை ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்வதன் மூலம் வாழ்வை மேற்கொள்கின்றன.
2. உலக பெரும் உயிர் வாழ்வினங்களுள் அறிவுத்துறையிலும், ஆளுமைத்துறையிலும் சிறந்தும் உயர்ந்தும் நிற்பது மனிதரினமே ஆகும். மனிதரினம் இயற்கையின் மீது மேற்கொண்ட தொடர் உழைப்பே அதனை இந்த நிலைக்கு உயர்த்தியது. உழைப்பே மனிதரை மற்ற உயிர் வாழ்வினங்களிலிருந்து வேறுபடுத்திப் பிரித்து தனி வகை இனமாக்கியது. இதனால் உழைப்பின்றி மனிதன் இல்லை. மனித வளர்ச்சியுமில்லை.
3. வாழ்வைப் பகுத்துணரவும், இயற்கையை வாழ்விற்கேற்ப ஆளுமை செய்யவும் வல்லதாக மனிதரினம் வளர்ந்திருப்பதாலேயே, வரலாறு நெடுகிலும் கூட்டு உழைப்பும் சமுதாய உணர்வும் மக்களை இணைத்தும் பிரித்தும் தொடர்ந்தும் நின்று நிலவுகின்றன. சமுதாய உணர்வை கூட்டு உழைப்பு உருவாக்கியும், கூட்டு உழைப்பைச் சமுதாய உணர்வும் நெறிப்படுத்தியும் வந்துள்ளன. இந்த இணைப்பும் பகுப்பும் நெறிப்படுத்தலும் ஒன்று கலந்து மேலோங்கிய நிலையிலேயே இன்றைய உலகம் பல்வேறு தேசங்களாகவும், வேறுபட்ட அரசுகளாகவும், வேற்றுமை கொண்ட மக்களினங்களாகவும் பிரிந்தும் ஒன்றுபட்டும் நிற்கின்றது.
இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே உலகில் உள்ள மக்களினங்களின் வாழ்முறைகளையும் அவற்றை உருவகப் படுத்தும் உழைப்பு மற்றும் உற்பத்தி முறைகளையும், வேறுபாடுகளையும் இனம் கண்டு கொள்ள வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சி வரலாற்றை கண்டறியவும் வேண்டும். இதுவே அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையாக அமையும். சமுதாய வளர்ச்சியில் உழைப்பின் பங்கை, உற்பத்தியின் ஒழுங்கமைவைப் புறக்கணிக்கும் வேறு எந்தவகை அணுகுமுறையும் கற்பனையானதாகவே அமையும்.

(1) மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சின் ”மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய வகையில் உழைப்பின் பங்கு” எனும் நூலிலிருந்து
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக