13/10/09

6.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்

மார்க்சிய மக்களின வகைப்பாடு

மனிதரினத்தின் வகைப்பாடுகளைப் பார்க்கும்போது, அவற்றுள் வேறுபட்ட நிறவகையினங்கள், வேறுபட்ட உடல் வகையினங்கள், பல்வகை தனித்த இனக்குழுக்கள், பழங்குடிகள், கலப்பினங்கள் போன்றவை அடங்கியுள்ளன என்பது ஒரு தெளிவான உண்மை. ஆனால் இதனைக் கொண்டு இன்றுள்ள மனிதப்பேரினத்தின் பல்வேறு மக்களினங்களை வரிளை முறையில் வகைப்படுத்தவோ, அவற்றுள் தூய வகையினங்களைத் தேடிப்படிக்கவோ முடியாது. அப்படி வரிசைப்படுத்த முயலுதலும், தூய வகையினத்தைத் தேடுவதும் இனவியலில் மட்டுமின்றி சுமுதாயவியலிலும் இனவெறிக் கொள்கையைத் தலையில் ஏற்றிக் கொள்வதற்கே வழி அமைக்கும்.

ஏனெனில், நிறத்தாலும், உடலமைப்பாலும் வாழ்க்கை முறை பண்பாட்டாலும் வேறுபடும் பல்வகை மனிதர்கள் இன்று மொழியாலும், நாட்டாலும், அரசுகளாலும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் மொழிகளுக்கிடையேயான வேறுபாட்டாலும், நாடுகளுக்கிடையேயான நிலப்பரப்பெல்லைகளாலும் வேறுபட்டும் உள்ளனர். இந்நிலையில் நிறத்தின் வகைப்பாடோ, உடலின் வகைப்பாடோ மக்களின் வகைப்பாட்டுக்கு பயனளிக்கவோ, ஒருங்கிணைக்கவோ செய்யாது. மாறாக பிளவுபடுத்திச் சிதைக்கவே செய்யும்.

ஏனெனில் இன்று ஒரு மொழி பேசுபவர்களே நாட்டு அடிப்படையிலும், அரசு அடிப்படையிலும் வேறுபட்டவர்களாக இருந்து வருகின்றனர். அத்துடன் ஒரே நாட்டெல்லைக்குள் வாழ்பவர்களும் தத்தம் மொழியடிப்படையில் வேறுபட்டும் நிற்கின்றனர். ஒரே மொழிக்குள்ளேயே வாழ்பவர்களோ தத்தம் வாழ்வியல் வேறுபாடுகளாலும், பண்பாட்டுக் கூறுகளாலும் வேறுபட்டு நிற்கின்றனர். இதுவே வாழ்வியல் காட்டும் உண்மை.

ஆக, எப்படிப் பார்த்தாலும் எல்லா இன மக்களிடையேவும், மனிதரினத்தை ஒற்றுமை படுத்தக்கூடிய கூறுகளும் உண்டு. வேற்றுமை படுத்தக்கூடிய கூறுகளும் உண்டு. எனவே தான் மக்களை ஒற்றுமை படுத்தக்கூடிய கூறுகளைக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் மனிதரினத்தை மக்களினங்களாக வகைப்படுத்தும் போது, மார்க்சியர்கள் பின்வருமாறு ஒரு பொதுப்படையான வகைப்பாட்டைக் கையாள்கின்றனர்.
அப்பொது வகைப்பாடு இதுவே.
1.நிலப்பரபபால் வேறுபடும் மக்களினங்கள்
2.நாடுகளால் வேறுபடும் மக்களினங்கள்
3.அரசுகளால் வேறுபடும் மக்களினங்கள்
4.மொழியால் வேறுபடும் மக்களினங்கள்
5.பண்பாட்டால் வேறுபடும் மக்களினங்கள்

இந்தப் பொது வகைப்பாட்டின் உள்ளேயே மார்க்சியர்கள் நிற வேறுபாடுகளையும், உடலின வேறுபாடுகளையும் பொதுமைப் படுத்திக்கொள்கின்றனர். இதனால் அவை மேலோங்கும் போது கண்டிக்கவும், எதிர்க்கவும் செய்கின்றனர். இதனால் நிறப் பண்புகளுக்கும் உடலின வேறுபாடுகளுக்கும் தரப்படும் தனிச் சிறப்பானது மறைந்து விடுகின்றது மக்களைப் பிளவு படுத்தும் நிறவெறிக் கொள்கையும் உடலினத் தூய்மைவாதமும் தலையெடுக்காமல் தணிந்து விடுகின்றன. இதனால் மக்களிடையே நாட்டாலும், மொழியாலும், பண்பாட்டாலும், வாழ்வாலும், உழைப்பாலும் ஒற்றுமை ஊக்குவிக்கப்படுகின்றது. பிரிவி வேறுபாடுகள் களையப்பெற்று ஓர்மைத் தன்மை உருவாக்கப்படுகின்றது.

இங்கு மார்க்சியர்கள் குறித்து நாம் சிலவற்றைக் கூறியாக வேண்டும். மார்க்சியர்கள் எனப்படுவோர் இயற்கையின் இயங்கியல் அடிப்படையில் மக்களின் வாழ்வு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டும், அவற்றை மக்களின் உழைப்பு, உற்பத்தி, பயன்பாடு, மறு ஈடுபாடு போன்றவற்றினைக் கொண்டு சரிபார்த்தும், மக்களுக்கு வாழ்வினையளிக்கும் கொள்கைகளைக் கொண்டவர்களாவர்.

இதனால் இவர்கள் உழைப்போரை மையப்படுத்திய மக்கள் இயக்கொமன்றையும் பிரிதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். இந்தப் போக்கால் அவர்கள் உழைப்புக்கு எதிரிகளாயிருப்போரையும், உழைப்பைச் சுரண்டுவோரையும் எதிர்த்துப் போராடுவதையும் மேற்கொள்கின்றனர். இதனால் இவர்கள் மறுபக்கத்தில் மக்களிடம் பொதுமையுணர்வை வலியுறுத்தும் பொதுமையர்கள்-கம்யூனிஸ்டுகள் எனப் பெயர் பெறுகிறார்கள். எனவே மார்க்சியர்கள், கம்யூனிஸ்ட்கள் எனும் நிலையிலிருந்து உழைப்பிற்கும், உற்பத்திற்கும் சரிசமமான நுகர்வுக்கும் முதன்மை கொடுக்கும் சோசலிச அரசியலையும் வலியுறுத்துகின்றனர். அத்துடன் நிற்காது, உழைப்பைச் சுரண்டுவோரை எதிர்த்திட அவசியமாகின்ற ஒற்றுமையை மையப்படுத்தி குரல் எழுப்பவும் செய்கின்றனர்.

இதன் பயனாய்ப் பிறந்ததே ”இனைத்து நாடுகளின் தொழிளாலர்களே ஒன்றுபடுங்கள்” எனும் முழக்கம். இந்த அடிப்டையான ஒற்றுமையை பாதுகாக்கவே அவர்கள் உடலின, நிறத்தின வேறுபாடுகளை எதிர்த்து மொழி, நாடு, அரசு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய இன ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றனர். இதனடிப்படையில் வல்லரசியத்த எதிர்த்துப் பிறந்ததே மார்க்சியர்களின் ”ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களே ஒன்று சேருங்கள்” எனும் முழக்கமாகும்.

இந்நிலையில் மனித இனத்தில் உள்ள தனியொரு மக்களினம் குறித்த தனியாய்வை மேற்கொள்ளும் போது, அம் மக்களினத்தை உருப்படுத்துகின்ற பொதுத் தன்மைகளையும், பிற மக்களினங்களிலிருந்து வேறுபடுத்துகின்ற குறிப்பான தன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்துதலே சரியானதாகும். மார்க்சிய பொது வகைப்பாடும் அதன் வழிகாடடலிலான ஆய்வுமே இதங்கு வழிகாட்டும். மக்களின் ஓர்மையையும் கண்டறியும்.

(தொடரும்)


1/9/09

5.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்

நீக்ரோவியர் இனவகைப் பேரினம்

இனி, முதற் பேரினமாகிய நீக்ரோவியர் பேரினத்தைக் காண்போமாயின், அது அடிப்படையில் நிற வழி பெயரிடப்பட்டதாக அமைந்துள்ளது. இதனுள் கருமை மற்றும் கருமை சார்ந்த, கருமையை ஒட்டி வரக்கூடிய பிற நிறங்களை கொண்ட மக்களினங்கள் யாவும் உள்ளடக்கப் பட்டுள்ளன. வாழ்நில அடிப்படையில் புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியான வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் கருமை நிற மக்களினங்கள் முழுமையும் இவ்வகையினதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி தொகுபட்டுள்ள இப்பேரினத்தினுள் வாழ்நில அடிப்படையில் இருபெரும் கிளைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதல் கிளையாக முற்றிலும் கருமை படர்ந்த ஆப்பிரிக்க நீக்ரோவியர் கிளை நீக்ரோவியர் பேரினத்தின் மேற்குக் கிளை எனப்படுகிறது. இதில் சகாராவுக்கு தெற்கேயுள்ள மக்கள் இனங்கள் அடங்குகின்றனர். சூடானிய நீக்ரோவியர் இக்கிளையின் முதன்மை பிரதிநிதியாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இப்பிரதிநிதிகளிடமிருந்து நிற மற்றும் உடலமைப்புகளில் வேறுபடும் பல்வேறு சிறிய உடலினக் குழுக்களும் இக்கிளையினுள் அடங்கியுள்ளனர். பெரும்பாலும் உயரமானவர்களைக் கொண்ட இக்கிளையில் கருமை நிறத்துடன் கூடிய குட்டை நீக்ரோவிய தனிவாழ்வின் பழங்குடியினர்களும்(1) அடங்குகின்றனர். அத்துடன் மாறுபட்ட கலப்புத் தன்மையுடைய கலப்பின்(2) மக்களும் அடங்குகின்றனர்.

நீக்ரோவியர் பேரினத்தின் இரண்டாவது கிளையாகக் கருதப்படும்கடலிய(3) ஆத்திரேலிய வகைக்கிளையினை மாந்தவியல் அறிஞர்கள் நிலநடுக்கோட்டுப் பேரினத்தின் கிழக்குக் கிளை என்கின்றனர். இதனுள் ஆப்பிரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடலிலுள்ள பல்வேறு தீவுக் கூட்டங்களிலுள்ள மக்களினங்களும் ஆத்திரேவியாவிலுள்ள மக்கள் பழங்குடியினர்களும் ஆத்திரேலியாவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடைப்பட்ட பல்வேறு சிறு தீவுக் கூட்டங்களிலுள்ள இனக் குழுக்களும் அடங்குகின்றனர். அத்துடன் ஆசியக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் அதாவது நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் சில மக்களினங்களும் உள்ளடங்குகின்றனர்.(4)

இனி, அடுத்ததாக உள்ள இரு மனிதப் பேரினங்களாகிய அய்ரோப்பிய, மங்கோலிய இனங்கள் குறித்துக் காண்போம்.

அய்ரோப்பிய இனவகைப் பேரினம்
மனித வாழ்வினத்தின் இரண்டாவது பேரினமாகிய அய்ரோப்பியரினம், அதன் வாழிட அடிப்படையில் அய்ரோப்பியக் கண்டத்தினர் எனும் பொருளில் பெயரிடப்பட்டுள்ளது என்றாலும் இவ்வினத்தின் தொடக்க வாழ்விடம் தென்மேற்கு ஆசியப் பகுதிகள், தெற்கு அய்ரோப்பியப் பகுதிகள், வட ஆப்பிரிக்கப் பகுதிகள் ஒருங்கிணைந்த மண்டலமே என மாந்தவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். தற்போது இவ்வகையினுள் அய்ரோப்பிய கண்டம் முழுவதிலும் வாழ்கின்ற பல்வேறு மக்களினமும் உள்ளடங்குகின்றனர்.
இந்தப் பேரினத்தை வெள்ளை நிறம் மற்றும் அதனோடு இணையக்கூடிய துணை நிறங்கள் கொண்ட பல்வேறு உடலின மக்களைக் கொண்டு மாந்தவியல் அறிஞர்கள் பல உட்கிளைகளாக வகைப்படுத்தியுள்ளனர். நாம் அதற்குள் நுழையாமல் பெரிதாகக் கருதப்படும் இரு பெரும் கிளைகளைப் பற்றியும் அவற்றுள் அடங்குகின்ற மக்களினங்கள் குறித்தும் காண்போம்.
வெள்ளை நிறத்தில் அமைந்த இப்பேரினம், நில அடிப்படையில் தெற்கு அல்லது நடுநிலக் (மத்திய தரைக்) கடல் வகைக் கிளை, வடக்கு அல்லது அட்லாண்டிக் – பால்டிக் வகைக் கிளை என இரு பெரும் கிளைகளாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் முதல் கிளையாகிய தெற்கு கிளையின் உறுப்பினர்களாக இந்தியர்கள்(5), தாசிக்குகள், அர்மீனியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், இத்தாலியர்கள், இசுபானியர்கள் போன்ற மக்களினங்கள் அடங்குகின்றனர். வடக்குக் கிளையின் உறுப்பினர்களாக உருசியர்கள், பைலோஉருசியர்கள், போலந்தியர்கள், செருமானியர்கள், ஆங்கிலேயர்கள், நார்வேயினர் மற்றுமுள்ள பிறவகை இனக் குழுக்களும் உள்ளடங்குகின்றனர்.
மங்கோலியர் இனவகைப் பேரினம்
மனிதரின மூன்றாவது பேரினமாகிய மங்கோலியரினம் வாழிட அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இப் பேரினத்தின் தொடக்க வாழி்டமாக ஆசியக் கண்டத்தின் கிழக்குப் பகுதி கணக்கில் கொள்ளப்படுகிறது. இங்கு தொன்மைக் கால ஆசியாவானது மங்கோலியா என அழைக்கப்பட்டு வந்ததை நினைவு கூர்தல் நல்லது. பொதுவான நிலையில் மஞ்சள் நிற(6) வகைப்பட்ட மனித உடலினக் குழுக்களைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இப்பேரினம் தற்போது ஆசியாக் கண்டத்தில் மட்டுமின்றி வடஅமெரிக்க் கண்டத்திலும் வாழ்ந்து வருகின்றது.
இபபேரினத்தை மாந்தவியல் அறிஞர்கள் நில அடிப்படையில் மூன்று வகைக் கிளையினங்களாகப் பிரித்துள்ளனர். முதல் கிளையாக வடக்கு மங்கோலிய அல்லது முழு ஆசியக் கிளையும், இரண்டாம் கிளையாக தெற்கு மங்கோலிய அல்லது ஆசிய அமைதிப்(பசிபிக்) பெருங்கடல் கிளையும், மூன்றாம் கிளையாக அமெரிக்க இந்தியர்கள்(7) கிளையும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மங்கோலிய வடக்கு ஆசியக் கிளையின் உறுப்பினர்களாக சோவியத்து ஒன்றியம் மற்றும் வடக்கு சீனப் பகுதிகளில் வாழ்ந்துவரும் புர்யாத்தியர், யாக்கூத்தியர், அக்கியர், துவினீயர், அல்தானியர், கில்யாக்கியர், அலெவூத்தியர், ஆசிய எசுக்கிமோக்கள் போன்ற மக்கள் குழுக்கள் இருக்கின்றனர். தெற்கு பசிபிக் கிளைக்கு தென்சீனம், இந்தோசீனம், இந்தோஆசியா, சப்பான், கொரியா போன்றவற்றில் வாழ்ந்துவரும் மக்களினங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மூன்றாம் கிளையான அமெரிக்க இந்தியர் கிளையோ முதன்மையாக செவ்விந்தியக் குழுக்களையே தனது உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
ஆக, உலகத்தின் ஒட்டுமொத்த மனிதரினம் இப்படி மூன்று பேரினங்களாகவும், பேரினங்கள் பல்வேறு கிளையினங்களாகவும், கிளைகள் பல்வேறு உட்பிரிவினங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டே எந்த ஒரு மக்களினமும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். அதனின் வாழ்வியல் தன்மைகள், வாழிடத் தன்மைகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இனி நமது பார்வைக்கு வருவோம்.
(1. பழங்குடிகள் அல்லது தொல்குடிகள் எனப்படும் மனிதரினக் குழுக்கள் பழைய மந்தைச் சமுதாயத்தின் தற்காலப் பிரதிநிதிகள் ஆகும். இவைகள் தங்களுடைய பழைய வாழ்க்கையின் கூறுகளை விட்டுவிடாமலும், நாகரீக வாழ்க்கைக்கு ஆட்பட்டு வாழ்ந்துவரும் மக்களிடையே கலப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும் முற்றிலும் வேறுபட்ட முறையில் தங்கள் வாழ்க்கையை பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருபவைகளாகும். இவைகளிடத்தில் மனிதரின வளர்ச்சியின் தொனடமைச் சமுதாயங்களுள் ஒன்றான தாயுரிமைச் சமுதாயத்தின் கூறுகள் அதிகம் இருக்கின்றதென மாந்தவியல் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இவைகளுடைய வரலாற்று வழியிலான வாழ்க்கை வளர்ச்சியை ஆய்வுக்குட்படுத்தினால், மனிதரினத்தின் வளர்ச்சிப் பாதையை அறிவதிலும், மனிதரின முதல் மூதாதையரைக் கண்டறிவதிலும் புதிய பாதைகள் புலப்படலாம் என்பது நம் கருத்து.
(2. ஒரு தொல்குடி மனிதக்குழு வாழ்ந்த இடத்தில் வேறொரு அல்லது அதற்கு முற்றிலும் மாறுபட்ட மனிதக்குழு ஒன்று உட்புகுந்து குடியேறி வாழத் தொடங்கிய பின், அவற்றுக்கிடையே ஏற்பட்ட வாழ்க்கைக் கலப்பினால், இரண்டும் கலந்து மயங்கிய உறவுகளினால், கலப்பு மனிதக் குழுக்கள் உருவாகியிருக்க் கூடும் என்பது மாந்தவியல் அறிஞர்களின் கருத்து.)
(3. இங்கு இடையீடாக சில கருத்துக்களைச் சொல்லி வைக்க விரும்புகிறோம். கடலிய (ஓசியானிக்) எனும் பெயர்க் குறியீடானது கடலுள் அமைந்த தீவுக் கூட்டங்களில் வாழும் மக்களைக் குறிக்கும் பொருளில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள இப்பெயர் குறியீட்டுடன் நாம் கடலுள் மூழ்கிய கண்டம் பற்றி எங்கெல்சின் செய்தியையும் இணைத்துச் சிந்திக்கலாம். இப்படி இணைத்துச் சிந்திப்பதன் மூலமும், மாந்தவியல் நோக்கில் இந்தியப் பெருங்கடலில் கடலியல் அகழாய்வுகளை மேற்கொள்ள வலியுறுத்துவதன் மூலமும், மனிதரினத்தின் முதல் மூதாதையர் பற்றிய பல மயக்கங்களுக்கு நாம் விடை காண வாய்ப்புண்டு. எனவே அது இங்கு நினைவிற்குரியதும், ஆய்வுக்குரியதும் ஆகும். ஏனெனில் கடலிய-ஆத்திரேலிய வகைக்கிளை எனப்படும் இக்கிளை பழைய நிலநடுக்கோட்டுப் பேரினத்தின், அதாவது கடலுள் மூழ்கிய கண்டத்தில் வாழ்ந்திருந்த தொல் மனிதக் குழுக்களின் எஞ்சிய தொகுப்பாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. இக்கிளை தொகுக்கும் இடப்பரப்பைக் காணின் இது உறுதிப்படும்.)
(4. தமிழகத்தில் வாழும் மனிதரினமெனக் கருதப்படும் திராவிடர் இனம் போன்றவை இந்த வகையினுள்ளேயே அடங்குகின்றன.)
(5. இந்தியர்கள் என்றழைக்கப்படும் மக்களினக் குழுவை ஒரு தனித்த உடலினக் குழுவாகவும் மாந்தவியல் ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். அவர்கள் இதனை அய்ரோப்பிய வகைப் பேரினத்தின் சிதைவுற்ற தொன்மைக்குழு எனவும் எண்ணத் தலைப்படுகின்றனர். இப்படி எண்ணப்படும் கருத்தியல் உருவாக்கம் இனவெறிக் கொள்கைக்கு வழி வகுத்துக் கொடுத்து வருகின்றது. இதன் காரணமாகவே, அய்ரோப்பாவின் அரசியலில் நிலவி வரும் ஆரிய இனவெறிக் கோட்பாடு, இந்தியாவிலும் காலூன்றி வருகிறது. இந்த இனவெறிக் கருத்தியலே, இந்தியாவில் வேறுபாடோடு வாழும் பல மக்களினங்களை ஆரியப் பேரினத்தின் கிளையினங்கள் எனக் கூற வைத்துள்ளது. அய்ரோப்பிய வந்தேறிகளால் கட்டப்பட்ட ”இந்தியா” எனப்படும் பொய்மைக் கருத்தியலை உடைக்காத வரை, இந்தியாவிலுள்ள மக்களினங்கள் அய்ரோப்பிய ”ஆரிய” இனவெறிக்கு பலியாவதைத் தடுக்க முடியாது. சமற்கிருத மொழியில் இடம் பெற்றுள்ள ”ஆரிய” என்ற சொல்லுக்கு ”உயர்ந்தோர்” எனப் பொருள் கொள்ள வேண்டுமென சமற்கிருத ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். இதனால் ஆரிய உயர்ந்தோர் கோட்பாடு, அய்ரோப்பிய ஆரியக் கோட்பாடோடு இனங்கண்டு நிறவெறித் தன்மை பெற்று நிற்கிறது. இதனால் இந்தியாவிலும் நிறவெறியன் அடிப்படையில் ஆரியக் கோட்பாடு காலூன்றி விட்டது. ”ஆரிய” என்ற சொல் ”ஆசிய” என்ற சொல்லின் மருவலாக இருக்கலாம் என நாம் கருதுகிறோம்.)
(6. வெள்ளை நிறத்தோடு ஒப்பிடுகையில், கலங்கலான நிறமுடையவராகக் காணப்படும் இம்மஞ்சள் நிறத்தவர்கள், கடந்த காலங்களில் தாழ்மையான வெள்ளை நிறத்தினர் என்ற கருதுகோளின்படி அய்ரோப்பிய இனவகையினரால் தாழ்ந்த இனமாக நடத்தப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தியாகும். ஆரிய இனவெறியின் மையப்புள்ளி இதனில்தான் அடங்கியுள்ளது. ஏனெனில் அது நீக்ரோவியர்களை முதலில் எதிரிகளாகவும், பின்னர் மஞசள் நிறத்தவரை தாழ்ந்தவராக நடத்தியது.)
(7. அமெரிக்க இந்தியர்கள் எனக் குறிப்பிடும்போது, அது இந்தியாவில் உள்ள இந்தியர்களைக் குறிக்காது. மாறாக அமெரிக்காவில் வாழும் செவ்விந்தியக் குடிகளையே குறிக்கும். ஒரு காலத்தில் வட அமெரிக்கக்கண்டம் முழுவதிலும், தென் அமெரிக்காவில் பல்வகை நீக்ரோவிய இனக் குழுக்களோடும் விரவி வாழ்ந்திருந்தனர் இச்செவ்விந்தியக் குடிகள். ஆனால் அங்கு குடியேறுவதற்காக உட்புகுந்த வெள்ளை அய்ரோப்பிய வந்தேறிகள், செவ்விந்தியர்களை வேட்டையாடிக் கொன்று குவித்ததும், விரட்டியடித்து வாழ்க்கையை அலைக்கழித்ததும் வரலாறு சொல்லும் செய்தி. எனவே இன்று இச்செவ்விந்தியக் குடிகள் வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியிலும், மையப் பகுதிகளிலும், தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர் என்பது ஓர் அதிர்ச்சி தரத்தக்க உண்மையாகும். இது போலவே நீக்ரோவியர் வகையினத்தைச் சேர்ந்த கறுப்பு ஆத்திரேலியப் பழங்குடிகள், அக்கண்டத்திற்குள் புகுந்து முன் வெள்ளை அய்ரோப்பியக் குடிகளால் மந்தை மந்தையாக வேட்டையாடப்பட்டும், விரட்டியடிக்கப்பட்டும் சிதறடிக்கப்பட்டனர், என்பதும் இன்று தனித்து வாழ்ந்து வருகின்றனர் என்பதும் இங்கு கூறப்பட வேண்டிய செய்தி.)

(தொடரும்)

14/7/09

4.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்


மக்கள் பேரினங்கள்
இயற்கை பிரித்த பாகுபாடுகள்

பல்வேறு திரிவாக்க வளர்ச்சி மாறுபாடுகள் வழி தோன்றிய மனிதர் இனம், தான் வாழ்ந்த அல்லது சென்ற இடங்களுக்கேற்ப தங்கள் உடலிலும் வாழ்விலும் பல சிறிய பெரிய மாறுபாடுகளைக் காலப்போக்கில் ஏற்று வளர்ந்தது. இம் மாற்றங்களும் வேறுபட்டு நின்ற மனித மந்தைகளும் இதனால் வேறுபாடுடையனவாக வளர்ந்தன. இவ் வேறுபாடுகள் நிலை கொண்டு அவற்றின வாழ்வியலில் மேலோங்கிய நிலையிலேயே, இன்றைய மனிதரினம் உலகளவில் வேறுபட்டும் பிரிந்தும் வாழும் பல்வகை மக்கள் பிரிவினங்ககளைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

மனிதரினம் பிரிந்து பல்வேறு மக்கள் பிரிவினங்களாக வாழ்ந்து வரும் நிலையை அவற்றுக்கிடையே பன்னெடுங்காலமாக நடந்து வந்த திரிவாக்க வளர்ச்சிப் பாதையை, தாவர இனத்தின் பாதையை வரையறுத்தது போன்றோ, விலங்கினத்தின் பாதையை வரையறுத்தது போன்றோ, வளர்மாற்றப் போக்கின் அடிப்படையில் வகைப்படுத்திட இயலாது. ஏனெனில் மனிதரினம் பரவி விரிந்து விரவிய வாழ்க்கையில் அவர்களிடையே தாக்கம் செலுத்திய இயற்கையின் திசை மாற்ற மாறுபாடுகளை, சென்றடைந்த வாழ்விடங்களை அவர்களுடைய வளர்மரபில் ஏற்படுத்திய அகவய திரிவாக்க மாறுபாடுகளை இனங் கண்டறிவது மிகுந்த சிக்கல் உடையதாகவே தொடர்கின்றது.(1)

இங்கு மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சு மனிதரினம் விலங்கினத்திலிருந்து பிரிந்த வரலாற்றைக் கூறுகையில் இனங்காட்டிய ஒரு கருத்தை நினைவு கூர்தல் நலமாகும். அது இயற்கையை விலங்குகள் வெறுமனே பயன்படுத்தி வந்தன. ஆனால் மனிதனோ அதனைப் பயன்படுத்துவதோடு நிற்காமல் அதனைத் தனக்கு கீழ்ப்படுத்தி மாற்றி அமைத்து அதனட மீதான ஆளுமையை நிறுவினான் என்பதுவே. இக்கருத்தை இங்கு நினைவு கூர்வதன் மூலம் நாம் வலியுறுத்துவது என்னவெனில், அது இயற்கை ஏற்படுத்தும் திரிவாக்க மாறுபாடுகளின் வெளிப்பாடு பற்றிய விளக்கமே ஆகும்.

பன்னெடுங்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்கை தனது போக்கில் விலங்கினத்தின் மீது செலுத்திய தாக்கங்களின் திரிவாக்க மாறுபாடுகள் விலங்கினத்தின் தலைமுறை வளர்ச்சியில் கண்டறியத் தக்க வகையில் மிகவும் துல்லியமானவையாக அமைந்தன. ஆனால் இயற்கை இம்மாற்றங்களை நிகழ்த்த எடுத்துக் கொண்ட காலத்தோடு ஒப்பிடுகையில், மிகக் குறுகிய காலமாக அமைந்துள்ள மனிதரின் இயற்கையின் மீதான மாற்றியமைப்புகளின் காலம், மனிதரினத்தின் மீது செலுத்திய அகவயத் தாக்கங்கள் துல்லியமாக அறியப்பட முடியாதவையாகும். அது போலவே மாற்றியமைப்புகளுக்கு எதிர்வினையாக இயற்கை செலுத்திய தாக்கங்களின் திரிவாக்க மாறுபாடுகள் மிகவும் எளிமையாக புலப்படத் தக்கவையாக இல்லை. சிக்கலுக்குரியதாகவே உள்ளன. இதுவே நாம் இங்கு வலியுறுத்த விரும்புகின்ற உண்மை.

மனிதரின மூவகை பொது வகைப்பாடு

மனிதரினத்தை வகைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களுள்ள போதிலும் மாந்தவியல் அறிஞர்கள் பொதுவான நிலையில் மனிதரினம் மக்கள் பிரிவினங்களாக ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து வேறுபடும் நிலைகளை வைத்து வகைப்படுத்துகின்றனர். அதாவது வெளிப்படையாக தெரியவல்ல நிறமாறுபாடுகள் வேறுபாடு காணவல்ல உடல் மற்றும் உருவ தகவமைப்புகள், வாழ்க்கை முறையில் புலப்படும் குழு உணர்ச்சி, பண்பாடு, மொழி ஒற்றுமை போன்றவற்றைக் கொண்டு ஒரு பொது வகைப்பாட்டைக் கையாண்டு வருகின்றனர். அவர்கள் இத்தகைய அளவீட்டுகளின் அடிப்படையில் இன்றைய உலக மனிதரினத்தை மூன்று பொதுப் பேரினங்களாகப் பிரித்துள்ளனர். இப்பேரின வகைப்பாடு பொதுவான நிறவேற்றுமையையும் வாழ்விடத்தின் அடிப்படையையும் கொண்டுள்ளதாகப் பின் வருமாறு அமைகின்றது.

1. நீக்ரோவியர் இனம் – கருமை நிற மனிதரினம் – வெப்ப மண்டல மக்களினம்
2.அய்ரோப்பியர் இனம் – வெள்ளை நிற மனிதரினம் – பனி மற்றும் பனிச்சார்பு மக்களினம்
3.மங்கோலியர் இனம் – மஞசள் நிற மனிதரினம் – ஆசிய வகை மனிதரினம்

இப்பொது வகைப்பாட்டை மந்தவியல் அறிஞர்கள் மனிதரின மூதாதை எனக் கருதப்படும் ஒரு வகை மனிதக் குரங்கினத்தின்(2) தொல்லியல் புதைப்படி உருக்களின் மாதிரிகளைக் கொண்டு வகைப்படுத்தியுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாதிரியும் வடிமைக்கும் உடல் மற்றும் உருவத் தகவமைப்புகள் கொண்டும் அவை வேறுபடும் வேறுபாடுகளைக் கொண்டும் இப்பேரினங்களை பல்வேறு உடலின வகைகளாக பிரித்துக் கொண்டு அவர்கள் மனிதரினத்தின் வளர்ச்சிப் பாதையை வரையறுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டும் வருகின்றனர். நாம் இந்த உடலின வகை ஆய்வுகளுக்குள் செல்ல வேண்டாம். மாறாக மேற்கூறிய முப்பேரினங்களும் பொது நிலையில் தொடுக்கப்பட்டுள்ள முறையை மட்டும் இங்கு காணலாம்.
(தொடரும்)

29/6/09

3. தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்


மனிதன் இயற்கையின் ஆளுமையாளன்

இப்படி நீண்ட நெடிய வரலாற்று வாழ்வின் போராட்டத்தோடு வளர்ச்சியுற்ற மனிதன் விலங்கினத்திலிருந்து எவ்வாறு பிரித்துக் கொண்டான் என்பதையும், மனிதனையும் விலங்கையும் தனித்தனியே பிரித்து வைத்த இறுதி வேறுபாடு எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதையும் மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு பின் வருமாறு.
” விலங்குகள் தங்களுடைய செயல்களால், மனிதனைப் போலவே – அவனளவிற்கு இல்லாவிடினும் தமது சுற்றுச் சார்புகளை மாற்றவே செய்கின்றன. இப்படி எழும் மாற்றங்கள் அவைகளின் முறைக்கு அவற்றை ஏற்படுத்தியவர்கள் மீது எதிர் செயலாற்றுகின்றன இப்படி இருபுற மாற்றங்கள் தொடர்கின்றன…….என்றாலும் எல்லா விலங்குகளும் அவற்றின் எல்லா திட்மிட்ட செயல்களும் ஒன்று சேர்ந்தாலும் கூட இயற்கையை மாற்றுவதில் பெருவெற்றி அடையவில்லை. அவை மெல்லவே தொழிற்பட்டன. ஆனால் தனது வெற்றியின் முத்திரையை விரைவாகப் பதிக்கும் வாய்ப்பை முதன் முதலாக மனிதனே பெற்றான். இதனை இப்படி சுருக்கிக் கூறலாம். ஒரு விலங்கு தனது சுற்றுச் சார்பை வெறுமனே பயன்படுத்த மட்டுமே செய்தது. அது தனது இருத்தலால் தனது சுற்றுச் சார்பில் மாற்றங்களை மட்டுமே உண்டாக்கியது. ஆனால் மனிதனோ தனது சுற்றுச் சார்பை மாற்றுவதோடு மட்டுமின்றி, அதனைத் தன் குறிக்கோள்களுக்கு கீழ்ப்படிய வைத்து ஊழியம் செய்யவும் வைக்கிறான். அதனின் ஆளுமையாளனாகவும் மாறுகிறான்.
மனிதனுக்கும் பிற விலங்கினத்திற்கும் இடையிலான வேறுபாட்டின் செறிவு மிகுந்த உள்ளடக்கம் இதுவே! இந்த வேறுபாட்டை வெளிப்படையாக்கியது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூறலாம்(1)
என மன வளர்ச்சியையும் அதற்கு அடிப்படையான குறிக்கோள்களையும் சுட்டக் காட்டி மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு விளக்குகிறார். இப்படி தெளிவான வகையில் இயங்கியலின் அடிப்படையில் பல இலக்கக் கணக்கான ஆண்டு காலம் தொடர்ந்து நடந்தேறிய வளர்ச்சி மாறுபாடுகளைத் தற்கால மனிதர் இனம் தனக்குள்ளேயே பொதித்து வைத்திருப்பதைப் பேரறிஞர் எங்கெல்சு சுட்டிக் காட்டும் பகுதி மிகவும் சுவை பொருந்தியதாகும். மனித இன உயிரியல் வளர்ச்சியைக் கண்டறிவதில் முதன்மையான முத்தாய்ப்பு உடையதாகும். அப்பகுதி இதோ!
”தாயின் கருவில் இருக்கும் (ஒரு மனிதக் குழந்தையின் தற்கால வளர்ச்சியானது) கருவின் வளர்ச்சி வரலாறானது பல பத்து இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளாக நடந்தேறி வந்த நமது மூதாதையர்களின் புழு உடலத்திலிருந்து தொடங்கிய உடல் திரிவாக்கத்தின் சுருக்கமான (விரைவான) மறுநிகழ்வேயாகும். இதனைப் போலவே அம்மனிதக் குழந்தையின் மன வளர்ச்சியும் அதே மூதாதையரின் – அவர்களுள் குறைந்தளவு பிற்காலத்தவரின் – அறிவுத்துறை வளர்ச்சியின் சுருக்கமான ஆனால் கூடுதலான மறு நிகழ்வேயாகும்”(1)
இன்றைய உலகம் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் பற்றிய அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களையும், மனிதரை உருவாக்கியதில் உழைப்பின் பங்கு குறித்த மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சின் கருத்துக்களையும் கொண்டு நாம் மனிதர் இனத்தின் உலக வாழ்வியல் பற்றி கீழ்க்கண்ட முடிவுகளை வந்தடையலாம்.
1. உலகில் உள்ள பெரும் உயிர் வாழ்வினங்கள் இயற்கையைச் சார்ந்தே உருப்பெற்றும் ஒன்றிலிருந்தே மற்றொரு வகை வாழ்வினத்தை உருவாக்கியும் உள்ளன. இதனாலேயே அவை தங்களுக்கிடையே இயற்கையின் சார்புத்தன்மையைப் பெற்றும் வாழ்கின்றன. இந்த இயற்கைச் சார்பின் காரணமாகவே அவை ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்வதன் மூலம் வாழ்வை மேற்கொள்கின்றன.
2. உலக பெரும் உயிர் வாழ்வினங்களுள் அறிவுத்துறையிலும், ஆளுமைத்துறையிலும் சிறந்தும் உயர்ந்தும் நிற்பது மனிதரினமே ஆகும். மனிதரினம் இயற்கையின் மீது மேற்கொண்ட தொடர் உழைப்பே அதனை இந்த நிலைக்கு உயர்த்தியது. உழைப்பே மனிதரை மற்ற உயிர் வாழ்வினங்களிலிருந்து வேறுபடுத்திப் பிரித்து தனி வகை இனமாக்கியது. இதனால் உழைப்பின்றி மனிதன் இல்லை. மனித வளர்ச்சியுமில்லை.
3. வாழ்வைப் பகுத்துணரவும், இயற்கையை வாழ்விற்கேற்ப ஆளுமை செய்யவும் வல்லதாக மனிதரினம் வளர்ந்திருப்பதாலேயே, வரலாறு நெடுகிலும் கூட்டு உழைப்பும் சமுதாய உணர்வும் மக்களை இணைத்தும் பிரித்தும் தொடர்ந்தும் நின்று நிலவுகின்றன. சமுதாய உணர்வை கூட்டு உழைப்பு உருவாக்கியும், கூட்டு உழைப்பைச் சமுதாய உணர்வும் நெறிப்படுத்தியும் வந்துள்ளன. இந்த இணைப்பும் பகுப்பும் நெறிப்படுத்தலும் ஒன்று கலந்து மேலோங்கிய நிலையிலேயே இன்றைய உலகம் பல்வேறு தேசங்களாகவும், வேறுபட்ட அரசுகளாகவும், வேற்றுமை கொண்ட மக்களினங்களாகவும் பிரிந்தும் ஒன்றுபட்டும் நிற்கின்றது.
இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே உலகில் உள்ள மக்களினங்களின் வாழ்முறைகளையும் அவற்றை உருவகப் படுத்தும் உழைப்பு மற்றும் உற்பத்தி முறைகளையும், வேறுபாடுகளையும் இனம் கண்டு கொள்ள வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சி வரலாற்றை கண்டறியவும் வேண்டும். இதுவே அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையாக அமையும். சமுதாய வளர்ச்சியில் உழைப்பின் பங்கை, உற்பத்தியின் ஒழுங்கமைவைப் புறக்கணிக்கும் வேறு எந்தவகை அணுகுமுறையும் கற்பனையானதாகவே அமையும்.

(1) மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சின் ”மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய வகையில் உழைப்பின் பங்கு” எனும் நூலிலிருந்து
(தொடரும்)

26/6/09

இருண்டகாலத் திரை கிழித்துத் தலைநிமிரும் களப்பிறர் வரலாறு! – செல்வமணியன்


1.எழுத்தில் நெளியும் வக்கிர வன்மம்
”ஏடறிந்த வரலாறெல்லாம் வகுப்புப் போராட்டத்தின் வரலாறே” என்கிறது மார்க்சியம். இது அந்த ஏடறிந்த வரலாற்றின் இண்டு இடுக்குகளில் சிக்கிச் சிதைந்து சினந்து நிற்கும் முரண்பாடுகளை எல்லாம் முச்சந்திக்கு இழுத்து வந்து தீர்வு காண்பதன் மூலம் முன்னேறுவதே வரலாற்றுப் புரட்சிகள் என்கிறது.
ஆக, புரட்சிக்கு வரலாற்றின் பார்வை மிகவும் இன்றியமையாததாகும். முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதோ புரட்சியை முன்னேற்றுவதற்குரிய வழிமுறையாகும்.

மார்க்சியம் கண்டறிந்து இண்டு இடுக்குகளிலிருந்து வெளியே இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்திய, எழுதப்பட்ட வரலாற்றுக்கும் இதனுள் எழுதப்படாமல் அலை மோதும் அழிக்கப்பட்ட வரலாற்றுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் தமிழக வரலாறு விதிவிலக்குப் பெற்றதல்ல.

தமிழகத்தின் வரலாறும் அத்தகு வரலாற்று மறைப்புகளை – அழித்தொழிப்புகளை ஆதிக்க வெறியில் மேற்கொண்டு வளர்ந்து வந்ததுதானாகும். அப்போக்குக்கு முதலுரிமையும் உடையதுமாகும்.
இது தம்மால் அழிக்கப்பட்ட மக்களின் வாழ்வு உண்மைகளை-உரிமைகளைப் பறித்தெடுத்தும்,வேரறுத்தும், திரித்துப் புரட்டியும், இருட்டிப்புச் செய்தும், சமரசப் படுத்தியும், தன்வயப்படுத்தியும் தனக்குரிமையுடையது என்று சொல்லிக் கொண்டும் வளர்ந்தது தானாகும். அறிவுக் களவாடல் – இலக்கியக் களவாடல் செய்தது தானாகும். ஆனால் இப்போக்குகளும், மறைப்பு முயற்சிகளும் மற்ற நாடுகளின் வரலாற்றைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு துகள்களாக்கப்பட்டு மறைந்து கிடக்கவில்லை. மாறாக, வெளிப்படையாகவே ஒரு மூட்டைக் கட்டி மூடி மறைக்கப்பட்ட நிலையில் தேங்கியும், திட்டுத் திட்டாக முட்டிக் கொண்டும் கிடக்கிறது.
தமிழக வரலாறெழுதிகளோ தேங்கிக் கிடக்கும் அவ்வரலாற்றை ”முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வது போல்” என மக்கள் தம் வழக்கு மொழியில் சொல்வார்களே, அதனைப் போல் தங்களால் அழிக்கப்பட்டோரின் வரலாற்றைத் “தமிழ்“ என்ற மொழிச் சொல்லுக்குள் அடைத்து மறைத்து இருட்டிப்பு செய்ய முயன்று வருகின்றனர். தமிழகத்தின் வரலாறு முழுவதிலும் அவ்வாறே செய்து வந்துள்ளனர்.
அறிவியல் ஆய்வுகள் பெருத்துப் போயுள்ள தற்காலத்திலும் கூட, இதில் தமிழ் மொழியின் இலக்கிய-இலக்கணப் “பெருமை“ பேசும் புலவர்கள் தொடங்கி, மார்க்சியத்தால் தமிழரை விடுதலை செய்ய “ஆய்வு“ நடத்தும் ஆய்வாளர்கள் வரை இம்மறைப்புப் பணியில் தங்களுக்குள் கைகுலுக்கிக் கொண்டு ஒற்றுமையாய் ஓர் அணியாய் நிற்கின்றனர்.
அவர்களின் எழுத்துக்களில் அழிக்கப்பட்டோர் மீதான வக்கிர வன்மம் நெளிந்து நிமிர்ந்து வளைந்து குழைந்து கிடக்கின்றது.

எழுத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழகத்தின் வரலாறு “சங்க காலம்” எனச் சொல்லப்படும் காலம் தொடங்கி தமிழகத்தின் மீது அய்ரோப்பிய பிரித்தானியர் ஆட்சி செலுத்திய காலம் வரையிலான நெடியதும் பல்வேறு காலப் பகுப்புகளைத் தனக்குள் கொண்டதுமாகும்.
வரலாறெழுதிகள் பலரும் அவற்றைப் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுள் பொதுவானதாகக் கொள்ளப்படும் வரிசை முறையை நாம் இங்கு பார்வைக்காகப் பின்வருமாறு முன்வைக்கலாம்.
1.சங்க காலம். 2.சங்கம் மருவிய அல்லது அழிந்த காலம் அல்லது களப்பிறர் காலம் அல்லது இருண்ட காலம். 3.பல்லவர்கள் மற்றும் பக்தி இயக்கத் தொடக்கக் காலம். 4.பிற்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் பக்தி இயக்க உச்ச காலம். 5.பிற்காலப் பாண்டியப் பேரரசு மற்றும் பக்தி இயக்க முடிவு காலம். 6.முகமதியர் படையெடுப்புக் காலம். 7.இந்து எழுச்சி விசயநகரப் பேரரசு மற்றும் பக்தி இயக்கப் பெருஞ் சமரசக் காலம். 8.நாயக்கர் மற்றும் பாளையக்காரர் காலம். 9.அய்ரோப்பியர் மற்றும் விடுதலைக் காலம். 10.தற்காலத் தமிழ் மாநிலக் காலம்.
இவைதாம் நமக்கு அறிய வந்துள்ள தமிழக வரலாற்றின் உள்ளடக்கம்.

இப்படி வகைப்பட்டுள்ள காலப் பகுப்புகளில் தமிழக வரலாற்றியலின் தொடக்கமாக வைக்கப் பெற்றுள்ள சங்க காலம் என்பது அது குறிப்பிடும் தன்மையில் நீண்ட நெடியதும் தனக்கென தனித்த இலக்கிய – இலக்கண எழுத்துப் பதிவுருக்களைக் கொணடதாகும்.
அவ்விலக்கிய இலக்கணங்கள் நமக்கு தமிழ் கொண்டு வளர்ந்தெழுந்த தமிழரின் வரலாற்றில் வளர்ந்தோங்கிய சேர, சோழ, பாண்டியர் எனும் மூன்று தனித்தனி அரசுக் குடிகளை தனித்தனிப் பாடல்கள் மூலம் பேரரசுகள் வடிவில் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
அப்பேரரசுக் குடிகள் போர் வெறியோடு நாடு பிடி வேட்டையாடிய பெருமைகளை அவை வானளாவப் புகழ்கின்றன. பல்வேறு பழங்குடிகள் மற்றும் சிற்றரசுகள் மீது அப்பேரரசுகள் நடத்திய நாடு பிடி வேட்டை வெறியாட்டத்தை “அரச வாகை“ என்னும் “பார்ப்பன வாகை“ என்றும் வழிதுறை பிரித்து விதந்தோதுகின்றன.
இவ்வெற்றிகளைக் கொண்டு அப்பேரரசு மன்னர்களும் பெருமைக்குரியோரும் தங்கள் வெற்றிக்கு உதவியோர்க்கும், பார்ப்பனர்களுக்கும் பரிசுகள், நிலக்கொடைகள், வளக்கொடைகள் வழங்கி புகழ்ந்து புரக்கும் காட்சிகள் நல்ல தமிழில் நயப்பட விளக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் இம்மூன்று தமிழ்ப் பேரரசுகளின் பின்னணியிலும், பெருந்தமிழ் நாட்டின் பொது மக்களும், பிறரும் “வரிசைக்கு வருந்தும் பரிசிலர் வாழ்க்கை“ வாழ்ந்து, பேரரசுகளின் பெருவாயிற் புரங்களில் இரந்து புகழ்ப்பாட்டுக்கள் பாடிப் பரிசுகள் கேட்டுக் கிடைக்காமல், காடு மேடு என அலைந்து திரிந்து, கானக காடுகளின் சுனைகளில் நீரருந்திக் களைப்பாறி, கடையேழு வள்ளல்களின் இருப்பிடம் தேடிச் சென்று மலர்ந்த முகத்தோடு கையேந்திய நிலையையும் இரங்கற் குரலில் எடுத்துரைத்தும் நிற்கின்றன.
இப்படி இருவகை நிலைகளை எழுத்துப் பதிவில் முன்வைக்கும் சங்க கால இலக்கியங்களின் கட்டமைப்புகளின் இண்டு இடுக்குகள் எல்லாம் தமிழ்ப் பழங்குடி மக்களின் மரண ஒலிகளும், புலவர்களின் வறுமைக் கண்ணீரும், பெண்களின் ஓலமும் எங்கும் நிறைந்து நிற்கின்றன.

அவை தங்கள் வாழ்வின் மேல் நடத்தப்பட்ட அரசவாகை, பார்ப்பன வாகை வெறியாட்டங்களைச் சொல்லாமல் சொல்லி, நம் நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு விண்ணுயர்ந்து நின்று, இலக்கிய உச்சியில் “ஓங்கார ஓலம்“ எழுப்புகின்றன.
தமிழக வரலாற்றியலின் தொடக்க காலம் இப்படியிருக்க, அதைத் தொடர்ந்து வரும் இரண்டாம் காலப் பகுப்பாகிய சங்கம் மருவிய அல்லது களப்பிறர் அல்லது இருண்ட காலம் எனப்படும் பகுப்போ, அச்சங்க காலத் தமிழர் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டு நம் முன் நிறுத்துகிறது.
(தொடரும்)

25/6/09

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!


நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் ”புலி”யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? ”எமக்காக பேசுங்களேன்” என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?


”இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்” என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது ”உடன் பிறந்தோர்”தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். ”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், “அவர்களை காப்பாற்றுங்கள்“ என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. ”இந்தியர்கள்” என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், ”தமிழர்கள்” இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் ”இந்தியா”, கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், ”இந்தியன்” என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?


க.அருணபாரதி

22/6/09

2.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்


கடலுள் மூழ்கிய கண்டம்


இப்படிப்பட்ட மனிதர் இனம் இன்றைய உலகில் முதன் முதலாக எங்கு தோன்றி வாழ்ந்தது என்பதை, மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு,

” பல இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாகத் தீர்மானிக்கப்படாத, புவியலறிஞர்கள் அறிந்துள்ள புவியின் வரலாற்றின் ஒரு காலகட்டகமாகிய மூன்றாம் காலக்கூறு (Tertiary Period) என்றறியப்படும் காலக்கட்டத்தில் (அதனுடைய முடிவில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு) மிகவும் உயர் வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கினம் வெப்ப மண்டலத்தில் ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. ஒரு வேளை அது தற்போது இந்திய மாக்கடலின் (”இந்தியா” எனும் சொல்லாட்சி இன்று உலகந்தழுவியதாக உள்ள நிலையில் எங்கெல்சு இந்தியா என்று பயன்படுத்தியுள்ளதை நாம் அரசியல் களத்தில் மறுக்கவியலாது. ஆனால் பாண்டியன் பெருங்கடல் என்ற பெயராட்சியே, பின்னாளில் இந்தியப் பெருங்கடல் என மருவி வந்திருப்பதற்கு வாய்ப்புண்டு என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இப்பெருங்கடலினுல் நிலம் மூழ்கியதைப் பற்றி தமிழிலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன என்பது வெளிப்படையானது.) அடியில் மூழ்கிப்போன ஒரு பெருங்கண்டமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பட்டுக் கூறுகின்றார்.(மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சின் ” மனிதன் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய வகையில் உழைப்பின் பங்கு” எனும் நூலிலிருந்து.)

மேலும், மனிதர்களைக் குரங்கினத்திலிருந்து எது வேறுபடுத்திப் பிரித்து தனிவகை உயிரினமாக்கியது என்பதைப் பற்றிக் கூறும்போது,
” மரமேரிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனிதச் சமுதாயம் தோன்றுவதற்கு இலக்கக் கணக்காண ஆண்டுகள் கடந்து சென்றன. இந்தக் காலஅளவிற்கு புவியின் வரலாறிறிலுள்ள முகாமைத்தன்மையானது மனிதருடைய வாழ்நாளில் ஒரு நொடிக்கு இருப்பதை விட இதிகம் இல்லை. ஆனால் (இவ்வளவு காலம் கடந்தும்) அது இறுதியாகத் தோன்றவேச் செய்தது. அது குரங்குகளின் கூட்டத்திற்கும் மனிதச் சமுதாயத்திற்கும் இடையிலான இயல்பு வேறுபாடாக இருப்பது எதுவோ அதுவேயாகும், அதுவே உழைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார்.

உழைப்பே மனிதரை உருப்படுத்தியது

மனிதர் இனத்திற்கும் குரங்கினத்திற்கும் இடையிலான பிரிப்பு வேறுபாடாக இருக்கும் இந்த உழைப்பு, மனிதனைச் சிந்திக்கத்தக்கவனாக, செயற்படத்தக்கவனாக, ஆளுமை செய்பவனாக மாற்றுவதற்கு எவ்வாறு தொழிற்பட்டது என்பதை, மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு,

”மனிதன் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரம் ஆண்டுகளில், நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தம் கைகளைப் பொருந்தியவாறு பழக்கப்படுத்துவதற்கு கற்றுக் கொண்ட முதற்செயல்கள் (அதாவது தொடக்ககால உழைப்புச் செயல்கள்) மிகவும் எளிமையானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும்…… ஆனால், முகல் கருங்கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு, ஒப்பு நோக்கினால் நாமறியும் காலம் அற்பமாகி விடுகிற ஒரு கால ஊழியாகக்கூட கடந்து விட்டிருக்கக்கூடும். (இத்தொடர் போக்கின் மூலம்) தீர்மானமான முன்னெடுப்பு தொடக்கி வைக்கப்பெற்று விட்டது. ஆம் (விலங்குத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு மாறும் வகையில்) கை விடுதலை பெற்று விட்டது. இவ்வாறாக கை என்பது உழைப்பிற்கான உறுப்பு மட்டுமல்ல, மாறாக அது (ஒரு தொடர்ந்த) உழைப்பின் விளைபயனுமாகம்…….. .
……ஆனால் கை மட்டும் தனியாக இருக்கவில்லை. அது முழு மொத்தமான, உயர்ந்தளவிலான பல்கூட்டுத் தொகுதியாக அமைந்த ஒரு உயிரினத்தின் உறுப்புமாகும். இதனால் (தொடர் உழைப்பின் பயனாக) கை என்ன நற்பயனைப் பெற்றதோ, அப்பயன்களை அது பணி புரிந்து வந்த உடலமைப்பு முழுவதுமே பெற்று வந்தது……. (இவ்வாறாக) உடலமைப்பின் பிற பகுதிகளின் மீது கையினுடைய வளர்ச்சியின் நேரடியான செயலாட்சியானது மிகவும் அதிக முகாமைத் தன்மை உடையாதகும்”.


…..கையின் வளர்ச்சியுடன், அதற்கான உழைப்புடன் மனிதன் இயற்கையின் மீது ஆளுமை கொள்வது தொடங்கியது. ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தின் முடிவிலும் மனிதனின் அறிவின் எல்லை விரிவாகிக் கொண்டே வந்தது. அவன் இப்போக்கில் இயற்கை பொருட்களில் இதுவரை அறியப்படாதிருந்த புதிய பண்புகளை தொடர்ந்தாற் போல் கண்டுபிடித்து வளரத் தொடங்கினான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் மனிதரிடையே ஒருவருக்கொருவர் ஆதரவு, கூட்டுச் செயல்கள் போன்றவை வாழ்க்கை வழக்குகளாகின. இவ்வாறு பெருகிய வாழ்க்கை வழக்குகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டுச் செயல்பாடுகளின் தேவையையும் விளைவையும் தெளிவுபடுத்தி சமுதாய உறுப்பினர்கள் ஒன்றாக நெருங்கி வருவதற்கு மிகவும் அவசியமானதாக உழைப்பு உதவியே வந்தது. சுருங்கக் கூறவேண்டுமெனில் உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்குரிய ஏதோ ஒன்று (உறவுகள்) உள்ளவர்களாகிய நிலையை எய்தினர். இந்தத் தேவை ஓர் உறுப்பை மிகவும் வளமுடையதாக உருவாக்கியது. இதனால் மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாத ஒலிகளை எழுப்பிய குரல்வளை, மிகலும் தெளிவாக இனங்கண்டறியப்படும் ஒலி வேறுபாட்டைப் படைக்க வல்லதாக உழைப்பினால் மாற்றயமைக்கப்பட்டது. ஆம், வாயின் உறுப்புகள் படிப்படியாக ஒரு தீர்மானமான ஒலிக்குப் பின் மற்றொரு வேறுபட்ட ஒலியை மாற்றி ஒலிக்க, அவ்வொலிகளின் கோர்வையை உச்சரிக்க கற்றுக் கொண்டன. இப்படி உழைப்பின் பயனால் பிறந்ததே பேச்சு.

….முதலில் உழைப்பு, அதன் பின்னரும் அதனுடன் இணைந்தும் உருவெடுத்த பேச்சு. இந்த முதன்மையான இரண்டு தூண்டுதலின் செயலாட்சியினால் காலப்போக்கில் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதருக்குரியதாக மாற்றமடைந்து வளர்ந்தது. ….. மூளையின் வளர்ச்சியுடன் கை கோர்த்துக் கொண்டு, அம்மூளையின் உடனடி பணியாட்கருவிகளான புலன்களின் வளர்ச்சியும் நடந்தேறியது. பேச்சின் படிப்படியான வளர்ச்சியுடன் அதற்கியைந்த வகையில் கேட்கும் உறுப்புகளும் – செவி உறுப்புகளும் செம்மையடைவது தவிர்க்க முடியதாக அமைந்தது. இப்படி (தொடர் உழைப்பழன் பயனாக) மூளையின் முழுவளர்ச்சியைத் தொடர்ந்து (மனித உடலின்) அனைத்துப் புலன்களுமே செம்மையடைவது நடந்தேறியது.

”…..மூளை அதன் பணியாட்களாகிய புலன்கள், மேலும் மேலும் தெளிவுபெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன், போன்றவற்றின் வளர்ச்சியானது உழைப்பழன் மீதும் பேச்சின் மீதும் தொடர்ச்சியான எதிர்ச் செயல்பாடுகளை தொடுத்தே வந்தன. இவை மீண்டும் உழைப்பு பேச்சு ஆகியவற்றின் கூடுதலான வளர்ச்சிக்குத் திரும்பத் திரும்ப தூண்டுதல்களை அளித்தே வந்தன. இந்த வளர்ச்சி மனிதன் இறுதியாக மனிதக் குரங்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டவனாக மாறிப் பிரிந்தவுடன் முற்றுப் பெற்றுவிடவில்லை. தொகுப்பில் கூடுதலான வலுமிக்க முன்னேற்றத்தைப் படைத்தே தொடர்ந்தது. இந்த வளர்ச்சியானது (மனித முன்னேற்றத்தின்) வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு மக்களிடையேயும் அளவடிப்படையிலும் திசையடிப்படையிலும் இட அடிப்படையிலும் ஏற்பட்ட தற்காலிக பின்னேற்றங்களால் இடைமறிக்கப்படவும் தடை செய்யப்படவும் ஆளாகியே முன்னேறியது. என்றாலும் இந்தக் கூடுதலான வலுமிக்க முன்னேற்ற வளர்ச்சி, முழுமையான மனிதன் தோன்றியவுடன் செயலுக்குப் புதிய ஆக்கக் கூறான சமுதாய ஒன்றிப்பின் துணையுடன் ஒருபுறத்தில் வலுவுடன் முன்னோக்கி விரைந்து செல்லவும் மறுபுறத்தில் திட்டமிடப்பட்ட வாழ்வியல் முறைகளில் வழிநடத்தப்படவும், மனிதரினத்தை ஆட்படுத்தி நிறுத்தியது.”


”…….. கைகள் பேச்சு உறுப்புகள், மூளை, இவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டினால் தனிமனிதன் மற்றுமின்றி சமுதாய உறுப்பினராக இருந்த பல்வேறு மனிதர்கள் தொகுப்பில் மேலும் மேலும் சிக்கல் மிகுந்த செயல்களை (உழைப்பின் மூலம்) நிறைவேற்றும் திறம் பெற்றோராயினர். மேலும் உயர்ந்த குறிக்கோள்களைத் தீர்மானிக்கவும் அவற்றை அடைவதையும் மனிதர்கள் பெற்றடைவது இதனால் நடைமுறையாயிற்று. (இப்படி அமைந்த தொடர் போக்கில்) மனிதனின் ஒவ்வொரு தலைமுறையின் வேலை முறையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு வளர்ந்தன. இதனால் வேலை முறைகளில் வகைப்பாடுகள் பிரிவதும் செய்நேர்த்திகள் மேலோங்குவதும் தொடர் நடைமுறையாயின. மனித வாழ்வில் (தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக) வேட்டையாடுவது, கால்நடைகளை மந்தைகளை வளர்ப்பது ஆகியவற்றுடன் உழவுத்தொழில் செய்வது போன்றவை வளர்ச்சியுற்றன. இவ்வளர்ச்சியின் பின்னணியிலேயே நூல் நூற்பு, நெசவு வேலை, மண்பாண்ட வேலை, உலோக வேலை ஆகியவற்றோடு தொழில் வளர்ச்சியும், கலம் கட்டுதல், கடற் பயணம் செல்லுதல், வணிக வாழ்வு மேற்கொள்ளல் போன்றவை ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.


இவற்றோடு மனித வாழ்வில் இறுதி விளைச்சலாகக் கலைகளும் அறிவியலும் வளர்ச்சி கொண்டன. (இத்தகு மனித வாழ்வு முன்னேற்றத்தோடு) குலங்கள்(1) தேசங்கள்(2) அரசுகளாகவும்(3) உருவெடுத்து ஓங்கி வளர்ந்தன. இவற்றால் சட்டங்களும் அரசியலும் தோற்றம் கொண்டதோடு, மனித உள்ளத்தில் தோன்றும் மனிதச் செயல்பாடுகளின் வியப்புக்குரிய எதிரொளிப்பான மதமும் தோன்றியது”.
என்று மனித இனத்தின் வரலாற்று வளர்ச்சிகளைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார். (இந்த நீண்ட மேற்கோளில் அழுத்தம் தந்துள்ள பகுதிகள் யாவும் எங்கெல்சால் தரப்பட்டவை. அடைப்புக்குள் வந்துள்ள சொற்றொடர்கள் விளக்கத்திற்காக எம்மால் தரப்பட்டவை. ஒரு நெடும் பகுதியைச் சுருக்கித் தரும்போது உள்ளடக்கம் சிதையாமலிருக்க இத்தகு சொற்றொடர்கள் உள்ளீடு செய்யப்படுவது தவிர்க்க இயலாததாகிறது.)

(1) குலங்கள் எனப்படுபவை மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியில் தோன்றிய முதல் மந்தைச் சமுதாயத்தின், அதாவது ஒரே இரத்த உறவுடைய மனிதக் கூட்டம் வாழ்ந்து வந்ததைக் குறிக்கும் பெயர்க் குறியீடுகளாகும். தமிழ்ச் சமுதாயத்தில் இந்த குலக்குறியீடுகள் சாதிகளாகத் திரிவடைந்துள்ளன.

(2) தேசங்கள் எனப்படுபவை தற்கால மனிதச் சமுதாயத்தின் ஓர் ஒருங்கிணைந்த வாழ்வியல் வைப்பு முறையாகும். இதனுள் பல்வேறு குலங்கள் கலந்து மயங்கியுள்ளன. குல வாழ்வியலுக்கு மாறுபட்ட பல்வேறு புதிய தொழில்கள் தலையெடுத்துள்ளன. தொழில்களின் அடிப்படையில் வாழ்வியல் உரிமைகள் வகைப்பட்டுள்ளன, பிரிக்கப்பட்டுள்ளன என்றாலும் மக்களுக்கிடையில் ஒற்றுமைக் கூறுகளை மையப்படுத்தும் சமுதாய முறையாகும்.
(3) அரசுகள் எனப்படுபவை உழைப்புப் பிரிவினையால் மக்களிடையே காலங்காலமாக ஏற்பட்டு வந்த அதிகாரங்களின் தொகுப்பு நடைமுறை மையங்களாகும். மக்களுக்கு அவர்களுக்குரிய வாழ்வுரிமைகளை வகுத்துப் பிரித்து வழங்கவும், அவ்வாறு வழங்கப்பட்ட வாழ்வியல் உரிமைகளை மீளப் பறித்தெடுக்கவும் அதிகாரம் கொண்ட சமூக மேலாண்மைக் கருவிகள் ஆகும்.

தொடரும் ...