28/5/09

தென் ஆசிய அதிகாரப் போட்டியில் இன்று பலியாகிக் கொண்டிருப்பது ஈழம். நாளை பலியாகப் போவது நேபாளம் - மீண்டும் ஆயுதப் போராட்டம்....


எங்களது மக்கள் விடுதலை இராணுவம் 20,000 வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய இராணுவம். ஐ.நா. படைகளைவிட இருமடங்கு பெரிய இராணுவம்.
அந்த இராணுவம் முகாம்களிலே அடைக்கப் பட்டிருக்கிறது. எங்களுடைய ஆயுதங்கள் பெட்டகங்களிலே வைத்து பூட்டப்பட்டிருக்கின்றன. சில புரட்சியாளர்கள் நாங்கள் எங்களுடைய ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டோம், ஆயுதங்களைக் கையளித்து விட்டோம் என்று கருதிக் கொண்டு குழப்பமடைந்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.
பத்தாண்டு காலம் நடந்து வந்திருக்கிற மக்கள் போர், அங்கே இன்றைக்கு இருக்கிற (ஜனநாயகம்) அரசியல் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. அந்த ஆயுதப் போராட்டம் தோற்றுவித்த அரசியல் சூழல் எத்தகையது என்றால், ஆயுதமேந்தி நாங்கள் அடையக்கூடிய நோக்கத்தை அமைதியான முறையிலே அடைகிற வாய்ப்பை அது ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே தான், நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர, ஆயுதப் போராட்டத்தை ஒரேயடியாக கைவிட்டுவிடவில்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன். என்று நேபாள மாவோயிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான கஜுரோல் சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் நேபாளத்தில் தங்கள் நிலையினை இப்படித் தெளிவு படுத்தியிருந்தார்.

இம்மாதம் 28‐ ஆம் தேதியோடு நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே மாவோயிஸ்டுகள் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு திரும்பி விடுவார்களோ என்கிற நிலை இன்று நேபாளத்தில் தோன்றியுள்ளது. பிரதமர் பிரசண்டாவுக்கும், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ருக்மாங்கத் கட்வாலுக்கும், ஜனாதிபதி ராம் பரன் யாதவிற்கு மிடையிலான மோதலில் இப்போது மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர் பிரசண்டா தன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய சில வாரங்களாகவே நேபாளத்தில் நிச்சயமன்ற்ற நிலை, தலைநகர் காத்மாண்டுவில் மீண்டும் மாவோயிஸ்ட் போராளிகளும் ஆதரவாளர்களும் பிரண்டாவுக்கு ஆதரவாக போராடிக் கொண்டிருக்க நேபாளம் தொடர்பாக தனது அடுத்த ஆட்டத்தைத் தொடங்கி விட்டது இந்தியா. இதோ கடந்த திங்கட்கிழமை மாதவ் நேபாள் நேபாளப் பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
நேபாளத்தில் ஏன இந்தக் குழப்பம்? இந்தியா என்ன விரும்புகிறது ?

பத்தாண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தேர்தலைச் சந்தித்த மாவோயிஸ்டுகளுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் ஏழு கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தார்கள். ஆட்சிக்கு வந்த மாவோயிஸ்டுகள் தங்களின் இருபதாயிரம் போராளிகளைக் கொண்ட மக்கள் படையை இராணுவத்தோடு இணைக்க முனைப்புக் காட்டினார்கள். ஆனால் இராணுவத் தளபதி ருக்மாங்கத் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அப்போதே புகையத் தொடங்கியது பிரச்சனை. நேபாளம் ஒரு குடியரசு நாடாக மலந்த நாளில் இருந்து தன் நட்பு நாடாக அது வரித்துக் கொண்டது சீனாவை. தன் தோள்பட்டையில் அமர்ந்திருக்கும் நாடொன்று தென்னாசியாவில் தன் போட்டியாளரோடு சேர்வதை இந்தியா விரும்பவில்லை. இதனால்தான் தன் செல்லப் பிள்ளைகளான நேபாள ஜனாதிபதியையும் இராணுவத் தளபதியையும் வைத்து அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்தியா.நேபாள பிரதமர் பிரசண்டா சீனாவோடு சமூக பொருளாதார ஒப்பந்தம் ஒன்றை விரைவில் செய்து கொள்ள இருந்தார். ஆனால் அதற்கு முன்னராகவே நேபாளத்தை ஆளும் ஏழு கட்சிக் கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கி பிரசண்டாவை பதவியை விட்டு இறக்கியது இந்தியா.மவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த போது மன்னரின் சொத்துக்கள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மன்னரின் அடிப்பொடிகள் பலரும் பீஸ் பிடுங்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டார்கள்.

ஆனால் மாவோயிஸ்டுகளால் யாரெல்லாம் களை எடுக்கப்பட்டார்களோ அவர்கள் எல்லாம் இப்போது இந்தியாவின் ஆதரவோடு ரகசிய ஆலோசனையில் ஈடு படுகிறார்களாம். நேபாளத்துக்கான புதிய அரசியல் சட்டத்தை வடிவமைக்கக் கோரும் மாவோயிஸ்டுகள் அது இன்றைய கூட்டணி ஆட்சியில் சாத்தியமாகாமல் போனால் மீண்டும் பூட்டப்பட்ட ஆயுதங்களின் சாவிகளை எடுக்க நேரிடலாம். ஆனால் ஆயுதப் போராட்டத்திற்கு திருபிச் செல்வது மாவோயிஸ்டுகளுக்கு சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால் ஏகாதிபத்தியம் கட்டவிழித்துள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சூழலை கவனத்தில் எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. இந்தியாவின் பிராந்திர ஆதிக்க நலனையும் சீனாவின் பிராந்திய நோக்கத்தையும் புரிந்து கொண்டு மாவோயிஸ்டுகள் கவனமாக நடக்க வேண்டும்
இல்லை என்றால் மீண்டும் தன் போராளிகளோடு பூட்டப் பட்ட ஆயுதப் பெட்டகங்களின் சாவியை எடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவுக்கும் சீனாவுக்குமாக தென் ஆசிய அதிகாரப் போட்டியில் இன்று பலியாகிக் கொண்டிருப்பது ஈழம். நாளை பலியாகப் போவது நேபாளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக